சமீபகாலமாக சூழலியல் சார்ந்தும் புத்தகங்கள் வருகின்றன. பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் வருவதில்லை தவறு ஏதும் இல்லை. ஆனால் நம்முடைய சூழல் சார்ந்து, நம்முடைய வாழிடம் சார்ந்த அனுபவங்களை ஒட்டிய சூழலியல் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே சூழலியல் எழுத்தாளர்கள் இங்கே எழுதுகிறார்கள். அப்படியெனில் இங்கே சூழலியல் சார்ந்து குறைவானவர்கள்தான் இயங்குகிறார்களா என்கிற கேள்வி எழலாம். ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்… சூழலியல் சார்ந்து இயங்கும் உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் ஆங்கிலத்தின் ஊடாகவே எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் ஆய்வு மாதிரிகள், கையேடு, மூலங்கள் என அனைத்தையும் ஆங்கிலத்தின் வழியாக பெறுகிறார்கள் . அந்தப் பாதையை ஒட்டியே ஆங்கிலத்தின் வழியாகவே தங்கள் பதிவுகளை செய்கிறார்கள். இறுதியில் பாடப் புத்தகங்களில் மட்டுமே மதிப்பெண்களுக்காக தாவரவியலையும் விலங்கியலையும் படிக்கிறோம். நம் வாழ்வியலை விட்டு அகன்றுவிடும் எதுவுமே இப்படி வழக்கொழிந்துதான் போகும். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட சூழலியலின் தொடர்ச்சி எப்போது அறுபட்டது என்கிற கேள்வி இப்போது எனக்குத் தோன்றுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும் நேரத்தில் இரண்டு சூழலியல் கட்டுரைகளை தமிழில் எழுதிவிடலாம் என்பதால் இதைக் கைவிடுவதே உசிதம்.
சமீபத்தில் ஒரு நண்பகல் வேளையில் எங்கள் வீட்டின் தொட்டிச் செடியில் வழக்கத்துக்கு மாறான சிலந்தியைக் கண்டேன். வெள்ளை உடலின் பழுப்பு ரேகை ஓடிய தடம் அந்தச் சிலந்தியை மிக அழகான சிலந்தியாகக் காட்டியது. அதை தொந்திரவுக்கு உள்ளாக்காமல் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நண்பகல் வேளையில் அதே இடத்தில் அதே வகையான சிலந்தியைக் கண்டேன். அங்கே இதே வடிவத்தை ஒத்த, முழு உடலும் பழுப்பில் அமைந்த வேறொரு சிலந்தியைக் கண்டேன். அதியும் புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டேன்.
இந்த சிலந்திகள் வீட்டில், ஏற்கனவே தோட்டத்தில் பார்த்த சிலந்திகளைப் போன்று இல்லை என்பதால் அவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இணையத்தின் வழியாக தகவல்களைப் பெற முடியவில்லை. ஆங்கிலத்தில்கூட இந்திய சிலந்திகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை என தெரிந்தது. இதுவரை இந்திய சிலந்திகள் பற்றி ஒரே ஒரு புத்தகம்தான் வந்துள்ளது. அதுவும் 2009ல் தான் வெளியாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் Spiders of India. இதற்கு முன் தொகுப்பு நூல்களில் சிலந்திகள் இடம்பெற்றிருந்திருக்கலாம். சிலந்தி பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றன, ஆனால் சிலந்திகள் பற்றிய முழுமையான நூல் இது ஒன்றுதான். நான் தேடியவரை இது ஒன்றுதான். இந்தப் புத்தகமும் அதைத்தான் சொல்கிறது.
கொச்சின் சேக்ரட் ஹார்ட் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் P.A. Sebastian மற்றும் கேரள வேளாண்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் K.V. Peter எழுதிய இந்த நூல் இந்திய சிலந்திகள் குறித்த முழுமையான தகவல்களைத் தருகிறது. மொத்தம் 734 பக்கங்கள். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1520 வகையான சிலந்திகளின் விவரங்கள் இதில் பெறலாம். விவரங்கள் முழுமையானவை அல்ல, இந்திய சிலந்திகள் பற்றிய ஆரம்ப நூல் என்பதால் எல்லா விவரங்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். பின் இணைப்பில் பல சிலந்தி வகைகளின் வண்ணப்படங்கள் தரப்பட்டுள்ளன. சிலந்திகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து சிலந்தி வலைப் பின்னல் அமைப்பு, சிலந்தி வலை நூலின் தொழிற்நுட்பம், உடல் அமைப்பு என அடிப்படைத் தகவல்களை இந்த நூலில் பெறலாம். சிலந்திகள் பற்றிய ஆய்வில் இருப்பவர்கள், ஆர்வலர்களுக்கு உகந்த நூல். விலை ரூ. 1000லிருந்து ரூ. 1500க்குள் அமேசானில் வாங்கலாம்.
நான் கண்ட சிலந்திகளின் பெயர்கள் Oxyopes shweta, Oxyopes sunandae, Oxyopes lineatipes. புல்வெளிகள், சிறிய புதர்களில் வாழும் இவை. இவற்றில் ஆணைவிட பெண் இனங்கள் சற்று பெரிதானவை. இந்தியா, சீனாவை வாழிடமாகக் கொண்டவை. இதில் Oxyopes sunandae இந்தியாவை மட்டும் வாழிடமாகக் கொண்டது, அழிந்துவரும் உயிரினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உடல் பகுதி வெளிர் பச்சை நிறத்தி அமைந்த Oxyopes lineatipes சிலந்தி இந்தியா, சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா வரை பரவியுள்ளன என்கிறது இந்த நூல். ஒரு கிளையை அல்லது இலையை சுற்றி மெல்லிய வலைகளைப் பின்னி, தங்களுடைய இரைகளை இவை பிடிக்கின்றன. பகல் வேளைகளில் இந்த சிலந்திகள் இரை தேடும், அதனால் அந்த நேரங்களில் இவற்றைக் காணலாம்.
அழிந்துவரும் உயிரினம் ஒன்று எனக்கு அருகிலேயே உள்ளதை தெரிவித்தது இந்தப் புத்தகம். ஒரு சில தொட்டிச் செடிகள் இவற்றை வாழ வைத்திருக்கின்றன. செடிகள் வெட்டி, ஒழுங்கு செய்யும்போது இனி இவைகளைப் பற்றியும் கவனம் கொள்வேன்.
நல்லதொரு பகிர்வு. தமிழில் உயிரியல் தொடர்பான புத்தகங்கள் மிகமிகக் குறைவு என்றெல்லாம் சொல்ல முடியாது; இல்லையென்றே சொல்லலாம். காரணம் உயிரியல் தொடர்பான தேடல்கள் எல்லாமே ஆங்கிலத்திலேயே அமைந்து விடுவதும், ஆர்வமுள்ளவர்களுக்கு மொழிபெயர்ப்புகள் கூட கிடைக்காமலிருப்பதும்தான். சமீப காலமாகத்தான் கானுயிர் காப்பு, சூழலியல், பறவையியல் தொடர்பான புத்தகங்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கவனப்படுத்தல்களும் நிகழ்ந்து வருகிறது. தமிழும், பிற மொழிகளிலும் நல்ல பரிச்சயமுள்ள ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் தமிழில் உயிரியல் சம்பந்தமான மொழிபெயர்ப்பு நூல்களையும், சுய ஆக்கங்களையும் எழுதவும், புத்தகமாக ஆக்கிக் கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
கருத்து நன்றி. உங்களைப் போன்ற பதிப்பகத்தார் அந்தப் பணியை செய்யமுடியும். அடுத்த நான்கைந்து புத்தகமாவது இந்தத் துறை சார்ந்த புத்தகங்களை பதிப்பிக்க வேண்டுகிறேன். புத்தகங்கள் பற்றிய அறிமுகப் பணியை நானும் பகிர்ந்துகொள்கிறேன்.
சூழலியல் பற்றிய அறிவோ விழிப்புணர்வோ நம்மிடம் குறைவு என்னும் தங்கள் ஆதங்கம் உண்மைதான். அதனால்தான இயற்கை பற்றியும் இயற்கை சார்ந்த விஷயங்களிலும் அவ்வளவு அலட்சியம் காட்டுகிறோம். நம்மை சுற்றி வாழும் உயிர்களில் எத்தனை உயிர்கள் அழியும் நிலையில் உள்ளன என்ற அடிப்படை அறிவும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நல்லதொரு பதிவு. நூலறிமுகத்துக்கும் நன்றி.
உள்ளார்ந்த கருத்து நன்றி கீதா. உங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன். பல்வேறு விடயங்களை எழுதியிருக்கிறீர்கள். நன்றாக உள்ளது.
மிக அருமையான பகிர்வு நந்தினி இயற்கையோடு ஒன்றி ரசித்து அதை எங்களுடன் அருமையான புகைப்படங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள் ரசிக்க முடிந்தது புத்தக அறிமுகத்திற்கும் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் இயற்கையோடு இயைந்த பணி
நன்றி விஜி மேடம்…
இது வரை சிலந்திகளை நான் கவனித்துப் பார்த்ததில்லை. இந்தப் பதிவு சிலந்திகள் பால் என்னை ஆர்வம் கொள்ளச் செய்துவிட்டது. கவனிக்கத் துவங்கிவிட்டேன். மிகவும் நன்றி. நீங்கள் சொல்வது போல் தமிழில் சூழலியல் புத்தகங்கள் மிகவும் குறைவு தான். சிலந்தி பற்றிய நூல் இதுவரை ஒன்று மட்டுமே உள்ளது என்பதை அறிந்தேன். மிகவும் அருமையான பதிவு நந்தினி!