பெண்ணியவாதிகள், பகத்சிங், கபீர் கலா மஞ்சில்…

இதுநாள்வரையில் எனக்குள் இருந்த பெண்கள் பற்றிய மிகை மதிப்பீடுகளை சமீப காலமாக உடைத்தெறிந்து வருகிறேன்.  இரும்பு பெண்களாகவும் பெண்ணியவாதிகளாகவும் அடைமொழிகளுக்குள் அடங்கிக் கொண்டிருந்தவர்களின் உண்மையான முகம் முதலாளித்துவத்தையும் சர்வாதிகாரத்தையும் ஒன்றாக கலந்தத் தன்மை  உடையது. இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை… சீமாட்டிகளாகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பின்னணி கொண்டவர்களாகவும் இருப்பது.  சிந்தனையும் செயல்பாடும் அவரவர் வளர்ந்த வர்க்க பின்னணியுடன் பிணைக்கப்பட்டுள்ளது.  நிலப்புரத்துவ பின்னணியில் வளர்ந்த பெண்ணியவாதி, ஆணுக்கு நிகரான ஊதியத்தை பெண்ணுக்கும் நிர்ணயிப்பார் என எதிர்பார்க்க முடியாது(சொந்த அனுபவம்!). இப்போதெல்லாம் பெண்ணியவாதிகள் என்றாலே கையில் மதுக்கோப்பையும் சிகரெட்டும் ஏந்திய பெண்களே நினைவுக்கு வருகிறார்கள். இது பொதுபுத்தி அல்ல, மேட்டிக்குடி சிந்தனையாளர்களின்  பெண்ணியவாதிகள் பற்றிய கட்டமைப்பு இத்தகையதுதான். தீர்மானிப்பதற்குரிய அதிகாரம் தனக்கிருந்தும் சமத்துவத்தை விரும்பாத இத்தகையவர்கள் போற்றப்படுவதை ஆண்மைய சமூகம் விரும்புகிறது, அவர்கள் வரலாற்றில் போற்றப்படுகிறார்கள். இந்திரா காந்தி, மார்க்கெரட் தாச்சர், தெரஸா வகையறா முதல் ஜெயலலிதா போன்ற பெண்களை சில உதாரணங்களாகக் கொள்ளலாம். இவர்கள் மட்டுமல்ல அதிகாரத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான்.

……………………………………………………………………………………….

பகத்சிங் ஆய்வாளர் Chaman Lal  பகத் சிங் உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவின் லெனினாக வந்திருப்பார் என்கிறார். லெனின், மாவோ, பிடல், சே குவேரா போல பகத் சிங்கும் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் என்கிறார் லால். புதிய ஜனநாயகம் மே இதழில் இவருடைய நேர்காணல் இடம்பெற்றிருக்கிறது. படிக்க வேண்டிய ஒன்று. வினவு தளத்தில் புதிய ஜனநாயகம் இதழை டவுன்லோடு செய்து படிக்கலாம்.. http://www.vinavu.com/…/05/puthiya-jananayagam-may-20151.pdf

பேராசிரியர் சமன் லாலில் வலைத்தளத்தில் பகத் சிங்கிற்கு ஆதரவாக ஜின்னாவின் பேச்சு குறித்த கட்டுரை இன்று வாசித்ததில் முக்கியமான ஒன்று. சமன் லால் குறித்த தேடலில் இணையத்தில் கிடைத்த வலைத்தளம் கபீர் கலா மஞ்சில் . sheetal மகாராஷ்டிராத்தில் செயல்படும் மக்கள் கலைக் குழு இது. இந்த கலைக் குழுவைச் சேர்ந்த பல கவிஞர்கள், இசைக் கலைஞர்கள்  அரசின் தீவிரவாத ஒழிப்பு படையினரால் அரசியல் குற்றவாளிகளாக சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் மராத்தியில் பாடி சில பாடல் https://soundcloud.com/kractivist/devhar-bajula-sarle-poetகளின் மொழிபெயர்ப்பைப் படித்தேன். அந்த வரிகளில் சாதீய, சமூக விமர்சனங்கள் தவிர வேறொன்றும் இல்லை. கர சேவகர்களின் கை ஓங்கியிருக்கும் மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தில் சமூக விமர்சனங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். அதனால்தான் மக்கள் கலைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்கூட நக்ஸலைட்டுகளாகத் தெரிகிறார்கள்.

இந்தக் குழுவைச் சேர்ந்த ஷீத்தல் தலித் படுகொலைகள், பெண்சிசுக் கொலை, சாதியம், விவசாயிகள் தற்கொலை குறித்தும் புலே, ஷானு, அம்பேத்கர் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறார். இதற்காக இவர் கைதும் செய்யப்பட்டார். இவருக்கு தற்போது கிடைத்திருப்பது தலைமறைவு வாழ்க்கை!

மேற்சொன்ன அதே கருப் பொருட்களில் போலியாக சில பெண்கள் பேசியும் எழுதியும் வருகிறார்கள். அவர்களுக்கு ஆகச் சிறந்த அங்கீகாரம் கிடைக்கிறது எனில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சமூகம் கண்டுகொள்ளட்டும்!

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: அஇஅதிமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடு எது? அ.நமது எம்ஜியார் ஆ.தினமணி ஆப்ஷன்கள் ஒரு டஜனுக்கு மேல் தேரும்…தலைப்பின் நீளம் கருதி மற்றவை உள்ளே…

சொத்து வழக்கில் அல்லது சொத்து குவிப்பு வழக்கில் அல்லது ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் முதல்வரும் தமிழகத்தின் அடுத்த முதல்வருமான ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். மோடி, வைகோ, தமிழிசை, ஜி.கே.வாசன் இதர இந்திய அரசியல் தலைவர்கள் வழியில் நானும் வாழ்த்துக்களை சொல்லி வைக்கிறேன். வாழ்த்துக்கள்! சின்மயி போல பாடத் தெரிந்தால் நானும் ஏதாவது ஒரு பெருமாள் கோயிலில் சுப்ரபாதம் பாடி அசத்தியிருப்பேன். கழுதைக் குரல் எனக்கு!

டெல்லியின் அரசியல் தரகு வேலைப் பார்க்கும் ஊடகங்கள் பற்றி தெரிய வந்திருக்கிறது. தமிழகத்தில் அந்தக் குறையை போக்கும்விதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தினமணி. குறிப்பாக அதிமுக அல்லது அம்மாவின் அடுத்த ‘மூவ்’ எப்படி இருக்கும் என்பதை தினமணியை கூர்ந்து நோக்கும் எவராலும் தெரிந்துகொள்ள முடியும். நமது எம்ஜிஆரைத் தாண்டி அம்மாவின் செயல்திட்டங்களை மக்கள் மத்தியில் சேர்க்கும் பணியினை செம்மையாக செய்துவருகிறது தினமணி. நமது எம்ஜிஆரைவிட கணிசமான வாசகர்களை வைத்திருக்கும் தினமணி, ’நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளோடு’ அதைச் செய்து வருகிறது. அந்த வகையில் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீடு இப்படித்தான் முடியும் என்பது நான் எதிர்பார்த்ததுதான். அதனால் நீதிபதி குமாரசாமி 3 நிமிடங்களில் தீர்ப்பு சொன்னதைக் கேட்டு எனக்கு ‘இதய அடைப்பு’ வரவில்லை.

தினமணியின் இணையத்தில் தீர்ர்பு வருவதற்கு முன்பே இரட்டை இலையை காட்டி வெற்றிச் சிரிப்பில் திளைத்த ஜெயலலிதாவை பார்த்தபோது என் முன்முடிவுகள் சரியென முடிவுக்கு வந்தேன்.

jaya dina

பொதுவாகவே தமிழக (பார்ப்பன) ஊடகங்கள் ஜெயலலிதாவின் அரசி பிம்பத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருப்பவைதான்.  ஆனால் அவையெல்லாம் ஜெயலலிதாவுக்கு விசுவாசத்தைக் காட்டும் பணியாட்கள்போல. தள்ளி நின்று கும்பிடு போடுவார்கள். தினமணிதான் ஜெயலலிதாவின் ராஜகுரு! அது சொல்வதைத்தான் அவர் கேட்பார்! பாருங்கள் ஜெயலலிதாவின் விடுவித்தலுக்கு மோடியே எப்படி சல்யூட் அடிக்கிறார் என்று…

jaya modi

தினமணியின்படி அம்மாவின் அடுத்த ‘மூவ்’ எப்படி இருக்கும். சில துளிகள்….

  • அடுத்த ஆண்டுதான் தேர்தல் வரும். தற்போதைய சட்டப்பேரவை விரைவில் களைக்கப்படும் என்று அரசியல் நோக்கர்கள் அநாவசியமாக எதிர்பார்க்கத் தேவையில்லை.
  • ஜி.கே.வாசன் கட்சி தொடங்கியதில் இருந்தே, அவர் கட்சி யாரோடு கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தினமணி தீர்மானித்துவிட்டது.  அதன்படி வாசன், அதிமுகவின் கூட்டணியில் முதலில் போய் சேர்வார்.
  • இதைச் சொல்ல வேண்டும் என்பதில்லை, பாஜக – அதிமுக கூட்டணி உறுதி. தினமணி நடுநிலையோடு பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவுக்கு கணிசமான தொகுதிகளைப் பெற்றுத் தரும்.

இப்போது தலைப்பில் கேட்டிருக்கும் கேள்விக்கு பதிலளிப்பது எளிதாக இருக்கும் என்று நம்புகிறேன். பதில் தெரிந்துவிட்டதால் மற்ற ஆப்ஷன்களை பற்றி ஆராய வேண்டிய தேவை இதனால் தவிர்க்கப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு படிக்கவும் இங்கே…