பாகிஸ்தானுக்குத்தான் போக வேண்டுமா?

அண்மைக் காலமாக மாட்டிறைச்சி தடை, யோகா இவற்றை விமர்சித்து பேசினால், எழுதினால் பாஜக எம் பிக்கள் முதல் கொண்டு இந்துத்துவ அடிபொடிகள் வரை ‘எதிர்த்து பேசினா பாகிஸ்தான் போங்க, மாட்டுக்கறி திங்கனும்னா பாகிஸ்தான் போங்க’ என்று கோஷம் போடுவது அதிகமாக நடக்கிறது.   இன்று ஒரு சைக்கோ ‘தாயின் மாமிசம் உண்பாயா?’ என்று என்னை முகநூலில் கேட்கிறது. ஒத்த கருத்துடன் எல்லோரும் எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. அப்படி எதிர்ப்பார்ப்பதும் இயற்கைக்கு முரணானது.  கடுமையான கருத்தை கடுமையாக எதிர்க்கலாம்.  தாயின் கறி தின்பாயா என்பதெல்லாம் மனநோய் பிடித்தவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும்.

10 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களைத் தவிர்த்து உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது. மாட்டிறைச்சியை வேதங்கள் தோன்றிய காலத்தில் பார்ப்பனியர்களும் உண்டிருக்கிறார்கள் இந்தக் கருத்துக்களை முன்வைத்து ஆதாரத்தோடு நூல்கள், கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இருந்தும் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் இந்தப் பூனைகள் அதையெல்லாம் கருத்தில் கொள்வதே இல்லை.

கோபுரத் தற்கொலைகள் என்கிற நூலி(பரிசல் பதிப்பக வெளியீடு)ல் ஆய்வாளர் ஆ. சிவசுப்ரமணியன், பிராமணர்கள் செய்யும் யாகங்களில் பசுக்கள் பலியிடுவதைப் பற்றியும் அப்படி பலியிடப்படும் பசுக்களின் இறைச்சியை எப்படி உண்ண வேண்டும் என்பது குறித்தும் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, தெய்வத்தின் குரல் என்ற நூலில் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்.

‘‘லோகத்தில் பல பேருக்குப் புரிய ஷேமத்தைத் தேவர்கள் செய்ய வேண்டுமென்ற உசந்த நோக்கத்தில் பசு ஹோமம் பண்ணுவதில் தப்பேயில்லை” என்கிறார் சங்கராச்சாரியார்.

உலக நலன் என்கிற பெயரில் கொன்றால் தவறில்லை, அதுவே எளிய மக்களின் ஆதாரமான உணவுக்காக கொல்லப்பட்டால் தவறா? தவறு என்றுகூட சொல்வதில்லை, மாட்டிறைச்சி உண்பவர்களை நரமாமிசம் உண்ணும் மனநோயாளிகளுடன் ஒப்பிடுவதும் பாகிஸ்தானுக்கு போ என்று பாசிச குணத்துடத்துடன் கட்டளை இடுவதும் இந்துத்துவ குண்டர்களின் வேலையாகிவிட்டது.

பசு என்னும் புனிதம் எப்படி கட்டமைக்கப்பட்டது என்று இந்திய வரலாற்று அறிஞர் டி. என். ஜா தனி புத்தகமே (the myth of the holy cow-D.N.Jha)எழுதியிருக்கிறார். இதுகுறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். முழுமையான வரலாற்று தகவல்கள் அடங்கிய நூல். அதிலிருந்து இரண்டு ஆதாரங்களை பகிர்கிறேன்.

இந்தியாவின் (முதன்முதலாக குடியிருப்புகள் உருவான இடங்கள்) ஆற்றோரங்களில்  நடந்த தொல்லியல் ஆய்வுகளில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் பசு, எருது போன்றவற்றில் எலும்புகளே அதிகளவில் கிடைக்கப் பெற்றுள்ளன. எலும்புகளுடன் வேட்டையாடப் பயன்பட்ட கற்கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

painted grey ware sites எனப்படும் ஆரிய குடியேறிகளின் வாழிடப் பகுதிகளில் வீட்டு விலங்குகளின் எலும்புகள் அவை, வெட்டப்பட்டு கொல்லப்பட்ட அடையாளங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இதில் சிறப்பம்சம் என்னவென்றால் கால்நடைகளின் பாதுகாவலனாக இந்துக்களால் போற்றப்படும் கிருஷ்ணனுடன் தொடர்புபடுத்தப்படும் மதுராவில்தான் இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலத்தை கிமு 400-200 என்கிறார்கள் தொல். அறிஞர்கள்.

இப்படி வரலாற்று காலம் தொட்டே மாட்டிறைச்சி இந்துக்களாலும் இந்துக்களாக குறிப்பிடப்படும் பூர்வ குடி இந்தியர்களாலும் உண்ணப் பட்ட ஒன்றுதான். புத்த, சமண மதங்களின் தாக்கத்தால் கொல்லாமை, புலால் உண்ணாமையை இந்து மதமும் அதை சுவீகரித்துக் கொண்டது. அண்ணல் அம்பேத்கரும்  இந்திய வரலாற்று அறிஞர் டி. என். ஜா போன்றோரும் இதை ஆதாரத்துடன் சுட்டுக்காட்டியுள்ளனர்.

வரலாற்றை முழுவதுமாக மறைத்துவிட்டு, ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. சாப்பிடக்கூடாதுன்னா சாப்பிடக் கூடாது. இல்லைன்னா பாகிஸ்தான் போங்க’ என்று கட்டளை இடுவது பித்துப் பிடித்த பாசிசம். இதையெல்லாம் குணப்படுத்த முடியாது, தெளிவு படுத்த முடியாது!

மாட்டிறைச்சியை அதிகமாக உண்பவர்களைக் கொண்ட அமெரிக்காவில் மரக்கறி உண்ணும் நீங்கள் சகல வசதிகளுடன் செட்டில் ஆகலாம்,  நாளும் உயிர் பயத்துடன் வாழ நேரும் பாகிஸ்தானுக்கு நாங்கள் போக வேண்டுமா?

10 thoughts on “பாகிஸ்தானுக்குத்தான் போக வேண்டுமா?

 1. மாட்டு இறைச்சி சரி
  யோகாவை எதற்க்கா எதிர்க்கின்றீர்கள் ?

   • “யோகா செய்துதான் ஆக வேண்டும் என்பதைத்தான் எதிர்க்கிறோம்.”
    .
    யோகா எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை . அரச பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமே என்று தான் நிலைப்பாடு . மாணவர்களுக்கு காலை உடல்பயிட்சி க்கு பதிலாக யோகாவை கொண்டு வரப்பட்டுள்ளது . இதில் என்ன சிக்கல் ?

   • மாட்டிறைச்சியை வைத்து விவாதங்கள் எழுந்ததால் மாட்டிறைச்சி பற்றி எழுதுகிறோம். ஆண்மையை பெறுக்கும் என்பதுபோன்ற மூடநம்பிக்கையில் உண்ணப்படும் அழிந்துவரும் உயிரினங்களைத் தவிர நீங்கள் சுட்டிக் காட்டிய அனைத்தையும் உண்பதில் மாற்று கருத்து இல்லை. அதோடு இன்னொரு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாட்டிறைச்சியைவிட நீங்கள் சுட்டிக்காட்டிய மற்ற இறைச்சிகளின் விலை அதிகம். எளிய மக்களால் அவற்றை நெருங்க முடியாது. விலையும் குறைவு உடலுழைப்புக்கு தேவைப்படும் சத்தும் அதிகம் என்பதால் மாட்டிறைச்சி எளிய மக்களின் உணவாக இருக்கிறது. அதில் கை வைக்கிறார்கள் என்பதால்தான் நாங்கள் திரும்ப திரும்ப எழுதுகிறோம்.

   • இதைத்தான் திணிப்பு என்கிறோம். அரசு பள்ளி மாணவர்கள் ஆனாலுமே ஒரு குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புடைய ஒன்றை ஏன் எல்லோரும் கட்டாயம் செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும்?

 2. இந்தியர்களின் பழக்க வழக்கத்தை சட்டம் மூலம் மாற்ற முடியும் என்று நினைப்பது முட்டாள்தனம், இந்த மாதிரி பூச்சாண்டிகளை கண்டு யாரும் அஞ்ச போவதும் இல்லை! மக்களை திசை திருப்பவே இதெல்லாம்!!

 3. ஒரு மாமிசத்தை சாப்பிடத் தடைச் செய்வது ஏற்று கொள்ள முடியாததே. எல்லா நாடுகளிலும் மாட்டிறைச்சி தான், அதிகமாக உண்பவர்களைக் கொண்ட அமெரிக்கா என்று நீங்க மாட்டிறைச்சியை சொன்னாலும் மற்றய நாடுகளில் நிறைய பன்றிறைச்சி,நிறைய கோழிறைச்சி சாப்பிடுகிறார்கள் மற்றும் ஆட்டுறைச்சி,turkey பறவைறைச்சியும் சாப்பிடுகிறார்கள் நீங்களோ மாட்டிறைச்சியை தான் விடாபிடியாக பிடித்து கொண்டே நிற்கிறீர்கள்.

 4. பிங்குபாக்: இஸ்லாமிய வழிகாட்டி மையம் இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம் – பாகிஸ்தானுக்குத்தான் போக வே

 5. பிங்குபாக்: இஸ்லாமிய வழிகாட்டி மையம் இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம் – பாகிஸ்தானுக்குத்தான் போக வே

 6. பிங்குபாக்: ’பேசாம நீங்கள்லாம் இஸ்ரேலுக்குப் போயிடுங்க’ | மு.வி.நந்தினி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.