விஷ்ணுப் பிரியா மரணம் தொடர்பாக சிவகாமி

விஷ்ணுப் பிரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற அதிகாரி சிவகாமி ஐஏஎஸ் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஏற்கனவே திமுக சார்பில் சிபிஐ விசாரணைக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மதுரைக் கிளையின் உத்தரவு இந்த வழக்கில் முக்கியமான நகர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உத்தரவு வந்த அடுத்த நாள், டிஎஸ்பி விஷ்ணுப் பிரியா விசாரித்த கோகுல்ராஜ் வழக்கில் தலைமறைவு குற்றவாளியான யுவராஜைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை அறிவிக்கிறது. வழக்கு திசைமாறிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் சிவகாமி தாக்கல் செய்த மனு, காவல்துறைக்கு திசைகாட்டியாகவும் அமையலாம். சமூக சமத்துவப்படையின் நிறுவனரும், தலித்துகள் சந்திக்கும் பிரச்சினைகளில் கூர்மையான பார்வையுடன் செயல்படுபவருமான சிவகாமி பேசினார். விஷ்ணுப் பிரியா போன்ற தலித் அதிகாரிகள், ஆதிக்க சாதி மற்றும் அரசியல் அதிகாரங்களால் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் தன்னுடைய புதிய நாவலான ‘உண்மைக்கு முன்னும் பின்னும்’ குறித்தும்  உரையாடினார்.

விஷ்ணுப் பிரியாவுக்காக நீதிமன்றம் செல்ல வேண்டும் என்கிற தூண்டுதல் வந்தது எதனால்?

“தர்மபுரி ரயில் தண்டவாளத்தில் இறந்துகிடந்த இளவரசனுக்கும் திருச்செங்கோடு ரயில் தண்டவாளத்தில் இறந்துகிடந்த கோகுல்ராஜுக்கும் இடையே உள்ள நூலையும் அந்த நூல் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுப் பிரியாவை பலிவாங்கியதில் முடிந்திருக்கிறது என்பதையும் நாம் எளிதில் விட்டுவிட முடியாது. இவையெல்லாம் திட்டமிட்டு தாழ்த்தப்பட்ட மக்களை குறிவைத்து நடத்தபடுபவை என்பதற்கான ஆதாரங்களாக உள்ளன. இளவரசன், கோகுல்ராஜ் கொலைகளில் தொடர்புடைய பெண்களின் குடும்பத்தினர் யாரும் பங்கேற்கவில்லை என்பதும், சாதி அமைப்புகளே முன்நின்றி நடத்தியிருக்கின்றன என்பதும் வெளிப்படையான விஷயங்கள்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் அரசியல் கட்சிகளின் தொடர்பும் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் டிஎஸ்பி விஷ்ணுப் பிரியா மர்மமான முறையில் இறந்துகிடந்ததும் அவர் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் ‘எங்கப்பன் குதிருக்குல்ல இல்ல’ என்று சொல்வதுபோல தன்னுடைய தற்கொலைக்கும் கோகுல்ராஜ் வழக்குக்கும் தொடர்பு இல்லை என்று சொல்வதும் சந்தேகத்தை அதிகப் படுத்துகிறது. அதுபோல தமிழக அரசு விசாரித்த இளவரசன் கொலை வழக்கும் என்ன நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. கோகுல்ராஜ் வழக்கின் நிலையும் தெரியவில்லை. விஷ்ணுப் பிரியா வழக்கும் அந்த நிலைக்குச் சென்றுவிடக்கூடாது என்று எண்ணியே சிபிஐ விசாரணை கோரும் மனுவைத் தாக்கல் செய்தேன்.

ஏற்கனவே ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி ஆன நிலையில், உங்களுடைய மனு ஏற்கப்பட்டு அடுத்த நிலையை எட்டியிருக்கிறது. ஒரே நீதிமன்றத்தின் இரு வேறு கிளைகளில் முரண்பட்ட பார்வை எப்படி?

“ஆமாம். முரண்பட்ட பார்வைதான். ஆனால், என்னை பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக நீதிமன்றம் பார்த்திருக்கலாம்.”

விஷ்ணுப் பிரியா வழக்கு சிபிஐ வசம் போவதற்கான அழுத்தத்தை இந்த நிலை ஏற்படுத்துமா?

“ஏற்படுத்தும் என நம்புகிறேன். என்னைப் போல வழக்கறிஞர் மாளவியாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட விஜயராகவன் என்பரும் மனுதாக்கல் செய்யக்கூடும்.

இங்கே, இன்னொரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து அதாவது கோகுல்ராஜ், விஷ்ணுப் பிரியா குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணைக் கோரும் மனுவை தாக்கல் செய்யும்படி கேட்டோம்; நாசூக்காக தவிர்த்துவிட்டார்கள். காரணம் அவர்களுக்கு மறைமுகமாக வரும் மிரட்டல்களும், அழுத்தங்களும்தான்”

இந்தியா டிஜிட்டல் மயமாகி ஒளிர்ந்துக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் சாதி சங்கங்கள் வளர்கின்றன. இதை என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

“சமூகம் வளர்ச்சியடைவில்லை. சமூகத்தில் உள்ளவர்களுக்கு மனவளர்ச்சி இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. சமூக வலைத்தளங்களில் வருகிற கமெண்டுகளை பார்க்கும்போது சாதீய அடிப்படையில் சிந்திக்கும் ஆபத்தான மனோபாவத்தை உணர முடிகிறது. ஒருவிதமான பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. நிச்சயம் இதற்கு விரைவில் தீர்வு வரும் என்று எதிர்பார்க்கிறேன்”

தீர்வை நோக்கி உங்களைப் போன்ற இயக்கங்கள் எத்தகைய முன்னெடுப்பை செய்யப் போகிறீர்கள்?

“வழக்குத் தொடுப்பது, வீதியில் இறங்கி அறப்போராட்டம் நடத்துவது, அரசாங்கத்துக்கு வலியுறுத்துவது, ஊடகங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வது என சாதி கொடுமைகளுக்கு எதிரான, சமத்துவத்தை நோக்கிய முன்னெடுப்பை செய்கிறோம், அதைத் தொடர்ந்து செய்வோம்.”

விஷ்ணுப் பிரியா போன்ற தலித் அதிகாரிகள் ‘தலித்’ என்ற காரணத்தினாலேயே பல்வேறு அழுத்தங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதுகுறித்து உரையாடல் துவங்கியிருக்கும் காலக்கட்டத்தில் உங்களுடைய நாவல் ‘உண்மைக்கு முன்னும் பின்னும்’ அதிகாரியாக உள்ள ஒரு தலித் பெண் எதிர்கொள்ளும் நிர்வாக ரீதியிலான அனுபவத்தைப் பதிவு செய்கிறது. உங்களுடைய கதாபாத்திரம் எந்த அளவுக்கு அழுத்தங்களைத் தாங்கிக் கொள்கிறது?

“2003-ஆம் ஆண்டு ‘புதிய கோடங்கி’ இதழில் எழுதிய தொடர்கதையின் தொகுப்பு ‘உண்மைக்கு முன்னும் பின்னும்’. இதன் கதாநாயகி நீலா ஐஏஎஸ், ஆதி திராவிடர் நலத்துறையில் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவர் வைக்கிற, அவர் செய்ய நினைக்கிற நியாமான செயல்கள் அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இவர் ஒரு தலித் பெண், ஆதி திராவிடர் நலத்துறையில் நியமிக்கப்படுகிறார். காரணம் தன் சொந்த சமூகத்துக்கு எந்த நல்லதும் செய்துவிடக்கூடாது, எதிராக செயல்பட வேண்டும் என்கிற நோக்கமும்தான். ஆதி திராவிடர் நலத்துறையில் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால் அதன் முழுப்பழியும் இவரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்கிற முறையில் அவர்மேல் போடப்படுகிறது.

தன் சமூகத்தின் மேல், ஏழைகள் மேல் அக்கறை கொள்கிற நீலா, தன்னுடைய குறிக்கோளில் தோற்றுப் போகிறார். ஆனால் தன் பணியை இயக்கமாக செயல்படுத்துகிறார் என்பதை நாவலாகச் சொல்லியிருக்கிறேன். நீலா படித்தவள், துணிச்சலானவள், தடைகளை எதிர்த்துப் போரிடும் குணம் அவளுடையது. இதே நிலையில் விஷ்ணுப் பிரியாவையும் வைத்துப் பார்க்கிறேன். இவரும் துணிச்சலானவர். சமூகத்தைப் புரிந்தே வைத்திருப்பார். அப்படிப்பட்டவர் தற்கொலை என்கிற முடிவைத் தேட முடியுமா என்பதும் அப்படியே தற்கொலை முடிவை நோக்கிச் சென்றிருந்தாலும் அதற்கான அழுத்தங்கள் என்ன என்பதற்கும் நாவல் பதிலளிக்கும். அடுத்து வருகிற பெண்களுக்கு இந்த நாவல் ஒரு படிப்பினையாகவும் இருக்கும்” என்ற சிவகாமியிடன் சமூக சமத்துவப்படையின் சட்டமன்ற தேர்தல் நகர்வுகள் குறித்துக் கேட்டோம். ‘அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. இப்போதைக்கு செய்து முடிக்க ஏராளமான கடமைகள் இருக்கின்றன’ என முடித்துக்கொண்டார்.

Advertisements