அட்டாக் பாண்டி கைது: அழகிரியை நெருங்கும் அதிமுக

மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கிட்டத்தட்ட இரண்டரை வருடமாகத் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அட்டாக் பாண்டியை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை. விஷ்ணுப் பிரியா மரணம் குறித்த பரபரப்பை அடக்குவதற்காக, இந்த கைது நடவடிக்கையை அரங்கேற்றியதாக முணுமுணுப்புகள் எழுந்துள்ளன. கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான யுவராஜ், அடிக்கடி வாட்ஸ் அப் அறிக்கை விடுகிறார், தொழிற்நுட்பத்தில் முன்னேறிய தமிழக காவல்துறையால் இன்னமும் யுவராஜைக் கண்டுபிடிக்க முடியவில்லை. விஷ்ணுப் பிரியா மரணம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவர் விசாரித்த வழக்கின் முக்கிய குற்றவாளியான யுவராஜ் கைது செய்யப்படாமல், அட்டாக் பாண்டி கைது நடக்க என்ன காரணம்?

திமுக ஆட்சியில் வளர்ச்சிக் கண்ட ‘அட்டாக்’ பாண்டி, ‘பொட்டு’ சுரேஷ்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியைப் பூர்விகமாகக் கொண்ட ‘அட்டாக்’ பாண்டியின் குடும்பம் 30 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் குடியேறியது. கபடி விளையாடும் போது ஏற்பட்ட பட்டப் பெயரே பின்னாளில் ‘அட்டாக்’ பாண்டியாக மாறியது. ஆரம்பத்தில் மாநகராட்சி கழிப்பறைகளை குத்தகைக்கு எடுக்கும் தொழில் செய்து வந்தவர், பிறகு ரவுடித்தனங்களுக்கு பழக்கமானார். மதுரையிலும் விருதுநகர் மாவட்டத்திலும் ஆள் கடத்தல், மிரட்டல், நில அபகரிப்பு என இவர் மேல் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசியல் ஆர்வம் வந்ததன் பேரில் திமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்ற திமுக ஆட்சியில், மதுரையில் மு.க. அழகிரியின் கை ஓங்கியிருந்தபோது அவருக்கும் நெருக்கமாக ஆனார். மதுரை வேளாண் விற்பனைக் குழு தலைவராகவும் பதவி பெற்றார்.தினகரன் நாளிதழ் மதுரை அலுவலகத்தை எரித்து மூன்று ஊழியர்கள் மரணமடைய காரணமாக இருந்த வழக்கில் இவருக்கும் தொடர்பு இருந்தது என சொல்லப்பட்டு கைதானார். பிறகு, விடுவிக்கப்பட்டார்.

மதுரையில் டீக் கடை வைத்திருந்த பொட்டு சுரேஷின் வளர்ச்சி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய ஒன்று. ரூ.ஐந்து லட்சத்தில் ஆரம்பித்த இவருடைய கட்டுமான நிறுவனம் யோகா அண்ட் கோ, நான்கே வருடங்களில் ரூ. 500 கோடி லாபமீட்டும் நிறுவனமாக மாறியது. திமுக ஆட்சியில் மதுரையில் நடந்த அரசுக் கட்டுமானப் பணிகள் அனைத்து இந்த நிறுவனமே செய்துகொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர். 2011ல் திமுக ஆட்சியை இழந்த பிறகு, ‘பொட்டு’ சுரேஷ் கட்சியில் ஒரங்கட்டப்பட்டார். அதிமுக அரசு பதவியேற்றவுடன் அவர் மீது நில அபகரிப்புச் சட்டம் பாய்ந்தது. கைதாகி பிணையில் வந்தார்.

இந்நிலையில், மு. க. அழகிரிக்கு யார் நெருக்கம் என்கிற பனிப்போர் ‘அட்டாக்’ பாண்டிக்கும் ‘பொட்டு’ சுரேஷுக்கும் உண்டானது. 2013-ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு அருகிலேயே மிகக் கொடூரமான நிலையில் வெட்டி கொல்லப்பட்டர் ‘பொட்டு’ சுரேஷ். அந்தக் கொலையில் ‘அட்டாக்’ பாண்டிக்கும் மிக முக்கிய பங்கு இருப்பதாக காவல்துறை தெரிவித்தது. ஆனால் ‘அட்டாக்’ பாண்டியை கைது செய்ய முடியவில்லை. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மும்பையில் பதுங்கியிருந்ததாகக் கைதாகியிருக்கிறார்.

தேர்தல் நேரத்தில் கைது

தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியால் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆதாயத்தை நோக்கியதாகவே இருக்கும். இதுவும் அந்த வகையைச் சேர்ந்ததுதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மு. க. ஸ்டாலின் எழுச்சியை எப்படி எதிர்கொள்வது என்கிற ‘தீவிர சிந்தனை’யில் இருந்த அதிமுக-வுக்கு, மு. க. அழகிரி கொடுத்த டிவிஸ்ட் பயன்பட்டிருக்கிறது. லயோலா கருத்துக் கணிப்பு திமுக-வுக்கு சாதகமாக வெளிவந்தபோது, மு. க. அழகிரி கடுப்பாகி, “இன்னும் இரண்டு மாதத்தில் என்னுடைய ‘நல்ல’ முடிவைச் சொல்கிறேன்” என்றார்.

இதைப் பயன்படுத்திக் கொள்ள அதிமுக தரப்பு விரும்பியது. ஏற்கனவே கடந்த காலங்களில் அழகிரியே முன்வந்து அதிமுக-வில் இணைய விரும்பியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ‘அட்டாக்’ பாண்டி கைது மூலம் அழகிரியை தங்களுக்கு சாதகமாக இழுக்கும் கணக்கைப் போடுவதாகச் சொல்கிறார் மதுரையைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர். ‘நமக்கு நாமே’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கும் ஸ்டாலினை மதுரை நகருக்குள் விடக்கூடாது என்று மதுரை மாநகராட்சி தீர்மானம் போட்டிருப்பதொடு இந்த விஷயத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.

Advertisements