விஷ்ணுப் பிரியாவுக்கு செந்தில்குமார் கொடுத்த டார்ச்சர்…

விஷ்ணுப் பிரியா தற்கொலை வழக்கில் விஷ்ணுப் பிரியாவின் குடும்பத்தினராலும் அவருடைய தோழி மகேஸ்வரியாலும் குற்றம்சாட்டப்படும் நபர் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ஆர். செந்தில்குமார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமார், 2002ல் துணை கண்காணிப்பாளராக காவல்துறை பணியில் சேர்ந்தார். திருத்தணி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் பணியாற்றினார். 2010ல் பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றினார். கள்ளச் சாராய விற்பனையை குறைத்ததற்காக உத்தமர் காந்தி விருது பெற்றவர். அதன் பிறகு 2012ல் மதுரை மாவட்டத்தில் துணை ஐஜி- ஆக பணியாற்றினார். மீண்டும் கிருஷ்ணகிரிக்கு மாற்றலாகி, 6-2-2014ல் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் நியமிக்கப்பட்ட ஆரம்ப நாட்களிலேயே சட்டவிரோதமாக மணல் அள்ளும் மாஃபியாக்களுக்குத் துணைபோவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை எதிர்த்த தன்னார்வலர்கள் மீது பொய் வழக்குப் போடுவதாகவும் சொல்லப்பட்டது. “சட்ட விரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை எதிர்த்த தகவல் உரிமைச் சட்ட செயல்பாட்டாளர் மதியழகன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் ஐந்து வழக்குகளைத் தொடுத்தார். அதெல்லாம் பொய் வழக்குகள் என்பதை நிரூபித்து அவரை வெளியே கொண்டுவந்தோம். பொய் வழக்குப் போடுவது என்பது எஸ்.பி செந்தில்குமாருக்கு கைவந்த கலை என்கிறார்” சமூக செயல்பாட்டாளர் முகிலன்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றியபோது தனக்குக் கீழே பணியாற்றியவர் மீது அதிகாரத்துடன் நடந்துகொண்டதாக அவருக்குக் கீழே பணியாற்றிய காவலர் ஒருவர் தெரிவித்தார். ஒருமையில் பேசுவது, பொது மக்கள் மத்தியில் கெட்ட வார்த்தைகளால் திட்டுவது என அடாவடித்தனமாக அவர் நடந்துகொள்வார் என்றும் அந்தக் காவலர் சொன்னார்.

“சட்ட விரோதமாக மணல் திருடி பொதுவழிகளில் செல்லும் லாரிகள் குறித்து ஆதாரப் பூர்வமாக சமூக ஆர்வலர்கள் நிரூபித்தபோது, செந்தில்குமார் என்ன செய்தார் தெரியுமா? பொதுவழியில் செல்வதைத் தடுத்து கிராமங்கள் வழியாக மண்பாதைகளில் அந்த லாரிகளை எல்லாம் திருப்பிவிட்டார். மணல் திருட்டு மஃபியாக்களுக்கும் அதில் தொடர்புடைய ஆளும் கட்சியினருக்கும் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறார் செந்தில்குமார்” என்கிற குற்றச்சாட்டை சொல்கிறார்கள் நாமக்கல் மாவட்ட சமூக ஆர்வலர்கள்.

ஆளும் கட்சிக்கு ஆதரவான செயல்பாடு என்று சொல்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் பார்க்கும்போது கண்காணிப்பாளர் செந்தில்குமார், விஷ்ணுப் பிரியாவுக்கு என்ன மாதிரியான அழுத்தம் கொடுத்திருப்பார் என யூகிக்க முடிகிறது. அரசிடம் ‘நல்ல’ பேர் வாங்கவே அவர் கோகுல்ராஜ் கொலைக் குற்றத்தில் தொடர்பில்லாத நபர்கள் மேல் வழக்குப் போடும்படி அழுத்தம் கொடுத்தாரா? அல்லது தனக்கு வேண்டப்படாத நபர்கள் மேல் உள்ள பழியைத் தீர்த்துக் கொள்ள பொய் வழக்குப் போடும்படி வற்புறுத்தினாரா? அல்லது உண்மையான கொலையாளிகளைத் தப்பிக்க வைக்க பொய் வழக்குகளைப் போடச் சொன்னாரா என்கிற கேள்விகளும் எழுகின்றன.

“செந்தில்குமார் அடாவடியான ஆளாக அறியப்பட்டவர்; அதனுடன் மேலும் இரண்டு விஷயங்கள் சேருகின்றன. விஷ்ணுப் பிரியா பெண் என்பதும், அவர் தலித் என்பதும் அவரை டார்ச்சர் செய்ய போதுமான விஷயங்கள். கோகுல்ராஜ் கொலை குற்றத்தில் தலைமறைவாக இருக்கும் யுவராஜ் பகிர்ந்திருக்கும் சமீபத்திய ஆடியோவில் வலுக்கட்டாயமாக விஷ்ணுப் பிரியா கொலைக்கு செந்தில்குமார்தான் காரணம் என சொல்கிறார். இது செந்தில்குமாருக்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று யுவராஜ் சொல்லவதற்காக பகிரப்பட்டதாகவே தோணுகிறது. விஷ்ணுப் பிரியா மரணத்தில் செந்தில்குமார், யுவராஜ் கூட்டு பங்கு இருக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் ஒருவர்.

Advertisements