விஷ்ணுப் பிரியாவின் காதல் தோற்றது எப்படி?

உயர்சாதி தோழியுடன் பேசிக்கொண்டிருந்ததற்கே படுகொலை செய்யப்பட்ட தலித் மாணவன் கோகுல்ராஜின் வழக்கை விசாரித்த விஷ்ணுப் பிரியாவின் மரணம் முக்கியத்துவம் பெறுவதில் வியப்பில்லை. ஆனால் அந்த முக்கியத்துவத்தை சிதைப்பது எப்படி என்பதுதான் பெரும்பான்மை சாதியின் விருப்பமாக இருக்கிறது.

வி்ஷ்ணுப் பிரியாவின் அசாதாரண மரணத்துக்குக் காரணம் காதல்தான் என்பதை சிபிசிஐடி போலிசார் புலனாய்ந்து சொல்வதற்கு முன் புலனாய்வு ஊடகங்கள் கண்டறிந்து சொல்ல ஆரம்பித்திருக்கின்றன. யூகத்தில் சொல்வதற்கும் ஒரு அடிப்படை இருக்க வேண்டும். இல்லாத அடிப்படைகளைப் புனைவதுதான் ஊடகங்களின் அறமாக இருக்கிறது. ‘விஷ்ணுப் பிரியா வீட்டுக்குள் வந்தால் எப்போதும் செல்போனில் பேசியபடியே இருப்பார்’ என அவருடைய பணிப்பெண், சிபிசிஐடி போலீஸாரிடம் சொன்னதாக ஒரு பத்திரிகை எழுதுகிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதன்மை விசாரணை அதிகாரியான விஷ்ணுப் பிரியாவின் வேலை பரபரப்பானது. வீட்டை, நண்பர்களை விட்டு தனித்திருக்கும் பலருக்கு செல்போன் தான் துணை. வேலை நிமித்தமாகவோ, அல்லது தனது வீட்டினருடனோ நண்பர்களிடமோ கூட விஷ்ணுப் பிரியா பேசியிருக்கலாம். ஒரு பெண் செல்போன் பேசினாலே அவர் காதல் வயப்பட்டிருப்பார் என்பது 21-ஆம் நூற்றாண்டின் வடிகட்டின முட்டாள்தனம்!

அடுத்து, கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரி, தன் தோழியின் மரணத்தையொட்டி சொன்ன ஆதங்க வார்த்தைகளுக்கு இவர்கள் என்ன விளக்கம் தருவார்கள்? மகேஸ்வரிக்கு தன் தோழியின் காதல் தெரிந்திருக்காதா? தன் தோழியின் காதலை மறைத்து உயரதிகாரி மீது பழிபோட அவருக்கு என்ன தேவை ஏற்பட்டது? எஸ்பி செந்தில்குமாருக்கும் மகேஸ்வரிக்கும் அப்படியென்ன என்ன பகை? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

வடமாநிலங்களில் சுற்றித்திரிந்த ‘அட்டாக்’ பாண்டியை ஸ்காட்லாண்டு யார்டுக்கு இணையான தமிழக போலீஸ் வளைத்துப் பிடிக்கிறது. ஆனால் வாட்ஸ் அப்பில் போலீசுக்கே சவால் விடும் யுவராஜ் என்ற குற்றவாளியைப் பிடிக்க முடியவில்லை. பிடிக்க முடியவில்லை என்பதா? பிடிக்க விரும்பவில்லை என்பதா?

விஷ்ணுப் பிரியாவின் மரணத்துக்கான காரணங்களாக, அவர் தலித் என்பதும், பெண் என்பதும், அதோடு அவர் கோகுல்ராஜ் என்ற தலித்தின் அசாதாரண மரணம் குறித்து விசாரித்தார் என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்ட நிலையில் காதல்தான் விஷ்ணுப் பிரியாவைக் கொன்றது என கதைக் கட்டுவதில் ஒளிந்திருப்பது உயர்சாதி செருக்கு அன்றி வேறென்ன?

‘நான் இந்த வேலையைக் காதலிக்கிறேன். இது எனக்குக் கடவுள் போல’ என தன்னுடைய மரண சாசனத்தை எழுதிவிட்டுச் சென்ற விஷ்ணுப் பிரியாவுக்கு இந்தச் சாதிய சமூகம் சிறப்பான அஞ்சலியை செலுத்திக்கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கும் சிபிசிஐடி விசாரணையின் முடிவும் விஷ்ணுப் பிரியாவின் காதல் கதையை உறுதிப்படுத்தலாம்.

ஆனாலும் நாம் கதறத்தான் வேண்டியிருக்கிறது ‘விஷ்ணுப் பிரியாவுக்கு நீதி எங்கே?’ என்று!

One thought on “விஷ்ணுப் பிரியாவின் காதல் தோற்றது எப்படி?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.