தன் மனைவி, மகள், அம்மா, சகோதரி,காதலி என பெண் எந்த உறவில் இருந்தாலும் அவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவளாக, ஆணின் விருப்பப்படி நடப்பவளாக இருக்க வேண்டும். தனக்கு நெருக்கமான பெண்கள் மட்டுமல்ல, தன் கண்ணெதிரே நிற்கும் அத்தனை பெண்களும் விருப்பத்திற்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும் என்பதை சமூக மனநிலையாகவே கொண்டிருக்கிறார்கள் ஆண்கள்.
கடந்த மாதம் வார இதழ் ஒன்று பெண்கள் லெகிங்ஸ் அணிவது பற்றி கீழ்த்தரமாக எழுதியிருந்தது. எப்படி உடுத்த வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்கிற கட்டளை-கண்காணிப்பு சமூகத்தில் தன்னுடைய அதிகாரம் மிக்க இடம் விட்டுப் போய்விடக்கூடாது என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துவதற்காகவே செய்யப்படுகிறது.
ஊடகங்கள் மட்டுமல்ல, தனிநபர்களும் சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில் பெண்ணுக்குரிய கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டே போகிறார்கள். ஒரு நடிகையின் முகத்தில் முகப்பரு இருப்பது பலருக்கு வெறுப்பூட்டுகிறது. சொரியாஸிஸ் வந்ததுபோல என்று எழுதுகிறார் ஒருவர். இதைப் போயா ரசித்தோம் என்று சொல்லி தன்னுடைய கீழ்த்தரமான புத்தியை வெளிக்காட்டுகிறார் இன்னொருவர்.
முகப்பரு என்பது குறிப்பிட்ட பருவத்தில் இயற்கையாக எல்லோருக்கும் வரக்கூடியது. சிலருக்கு ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருந்தால் முகப்பரு அதிகமாக வரத்தான் செய்யும். காலப்போக்கில் இது தானாக சரியாகிவிடும். இந்த அறிவியல் ரீதியான உண்மையை மறைத்து பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் விதவிதமான க்ரீம்களை பெண்களின் தலையில் கட்டுகின்றன. பெண்கள் இவற்றை விரும்பித்தான் வாங்கிப் போடுகிறார்களா என்றால் அதற்கும் முக்கிய காரணகர்த்தாக்களாக இருப்பது ஆணாதிக்க சிந்தனையுள்ள சமூகம்தான்.
கருப்பாக இருப்பவர்களை ஒதுக்குவது, முகப்பரு இருப்பவர்களை கேலி செய்வது, முக்கியமாக திருமணச் சந்தையில் இதையெல்லாம் சொல்லி பெண்ணை நிராகரிப்பது இந்த ஆண் சமூகமே. அதனால்தான் இந்திய ஃபேர்னஸ் க்ரீம் சந்தை பல ஆயிரம் கோடிகளுக்கு விரிந்திருக்கிறது.
ஒரு நடிகை மெழுகு சிலைபோல இருக்கவேண்டும் என்று யார் நிர்ணயித்தது? தொன்றுதொட்டு வரும் இந்திய கலைகளின் நீட்சியாக இந்திய சினிமாவும் பால் உணர்வுகளைத் தூண்டுவதாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்களின் பால் உணர்வுகளுக்கு வடிகாலாகத்தான் சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன. நடிகைகள் ஆண்களின் விருப்பத்திற்கேற்ப சினிமாக்களில் வடிவமைக்கப்படுகிறார்கள். ஒருசில இயக்குநர்கள் மட்டுமே அதிலிருந்து விலகி கண்ணியமான முயற்சிகளைச் செய்கிறார்கள்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய‘ப்ரேமம்’ படத்தின் நாயகிகளில் ஒருவராக மலர் கதாபாத்திரத்தில் வரும் சாய் பல்லவி தமிழ்ப் பெண். சுருள் முடியும் கன்னங்களில் இருக்கும் முகப்பரு தழும்புகளும் அவர் ஏற்று நடித்த மலர் கதாபாத்திரத்துக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. சினிமா ரசிகர்களும் அவரைக் கொண்டாடினார்கள்.
நடிப்புக்காக நடிகையை ரசிக்காமல் அவளைப் பாலியல் உணர்வுகளோடு பொருத்திப் பார்ப்பது நாகரிக சமூகத்துக்கு நல்லதல்ல. “நான் பள்ளி நாட்களில் வெளியே வரவே பயப்படுவேன். காரணம் என் முகத்தில் உள்ள முகப்பருக்களைப் பார்த்து பையன்கள் கேலி செய்வார்கள் என்பதே” என்று தன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைச் சொல்கிறார் சாய் பல்லவி.
இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பெண்களை கேலிக்குரியவளாக, இச்சைக்குரியவளாகவே ஆண் சமூகம் பார்க்கும் என்ற வெறுமையான கேள்வி நமக்கு மிஞ்சுகிறது.