மாட்டிறைச்சி ஏன் உண்ணக்கூடாது?

DSCN3565

சில நாட்களுக்கு முன் சென்னையின் புறநகர் பகுதி ஒன்றில் மாட்டிறைச்சி வறுவல் விற்றுக்கொண்டிருந்த ஒரு தள்ளுவண்டிக்காரரிடம் இறைச்சி வாங்கிக் கொண்டிருந்தோம். வாங்கிக் கொண்டு திரும்பியபோது எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் என்னிடம் பேச்சுக் கொடுத்தார். அந்தக் கடைக்கு முன்புதான் இந்த உரையாடல் நடந்தது. நாங்கள் கடையில் வாங்கியதை அவரும் பார்க்கவில்லை; அவர் அந்தக் கடையில் வாங்க வந்திருப்பார் என்று நானும் நினைக்கவில்லை. வழக்கமான விசாரிப்பு முடிந்து கிளம்பும் நிலையில் அந்தப் பெண், தன்னிலை விளக்கமாக ‘நாங்கெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடமாட்டோம். எங்க வீட்டு நாய்க்குத்தான் வாங்குறேன்’ என்றார். நான் கையில் பிடித்திருந்த பொட்டலத்தைத் தூக்கிக் காண்பித்து, ‘இத நாங்க சாப்பிடத்தான் வாங்கியிருக்கேன்’ என்றேன். அந்தப் பெண் சிரித்துக்கொண்டு கடைக்காரரிடம் சென்றுவிட்டார். இந்திய நடுத்தர வர்க்கத்து ‘மாட்டிறைச்சி’ மனோபாவத்துக்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாட்டிறைச்சி உண்பது புனிதத்துக்கு எதிரானது என்கிற மனத்தடை ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஆனால் வடமாநிலங்களில் மாட்டிறைச்சி உண்பதற்கு எதிராக அரசும் கைக்கோர்ப்பதால் பசு புனிதத்தைக் கட்டமைக்கும் தீவிரவாத குழுக்கள் வன்முறையை கட்டவிழ்ப்பது தொடர்கதையாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி என்ற கிராமத்தில், பசு கன்றைக் கொன்று உண்டதாகக் கருதி முகமது அக்லாக் என்ற 50 வயது பெரியவரையும் அவரது 22 வயது மகனையும் வீட்டிலிருந்து இழுத்து வந்து, செங்கல்லால் கொடூரமாகத் தாக்கி இருக்கிறார்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்த 100 பேர். இந்தத் கொடூரத் தாக்குதலில் பெரியவர் முகம்மது அக்லாக் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். அவரது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ‘மாட்டுக்கறியை சாப்பிட்டதாக’ என்று பரப்பப்பட்ட வதந்தியினாலேயே இந்தக் கொலை நடந்திருக்கிறது. ஒருவேளை ‘ஆமாம் நாங்கள் சாப்பிட்டோம்’ என்று சொல்லியிருந்தால் அந்தக் குடும்பத்தையே வெறியர்கள் அழித்திருக்கக்கூடும்.

மாட்டிறைச்சி உண்பது இந்துமத புனிதத்துக்கு எதிரானது என்கிற கருத்து தொடர்ந்து பரப்பப்படும் இந்த வேளையில், பசு என்கிற புனிதம் எப்படி கட்டமைக்கப்பட்டது என்கிற வரலாற்றை பரப்பும் பணியும் நமக்கிருக்கிறது.

இப்படி வரலாற்று காலம் தொட்டே மாட்டிறைச்சி இந்துக்களாலும் இந்துக்களாக குறிப்பிடப்படும் பூர்வ குடி இந்தியர்களாலும் உண்ணப் பட்ட ஒன்று. புத்த, சமண மதங்களின் தாக்கத்தால் கொல்லாமை, புலால் உண்ணாமையை இந்து மதமும் அதை சுவீகரித்துக் கொண்டது. சமூக புரட்சியாளர்களும் இந்திய வரலாற்று அறிஞர்களும் இதை ஆதாரத்துடன் சுட்டுக்காட்டியுள்ளனர். உலகம் முழுக்க 10 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களைத் தவிர்த்து எல்லா நாடுகளிலும் மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது. மாட்டிறைச்சியை வேதங்கள் தோன்றிய காலத்தில் பார்ப்பனியர்களும் உண்டிருக்கிறார்கள். இந்தக் கருத்துக்களை முன்வைத்து ஆதாரத்தோடு நூல்கள், கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பசு என்னும் புனிதம் எப்படி கட்டமைக்கப்பட்டது என்று இந்திய வரலாற்று அறிஞர் டி. என். ஜா(The myth of the holy cow-D.N.Jha) தனி புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் இந்து அமைப்புகள், இந்து அரசுகளால் புனிதங்களாக மதிக்கப்படும் புராண நூல்களில் பசுமாட்டின் இறைச்சி எத்தகைய ருசியுடையது என்று சிலாகித்திருப்பதாக எழுதுகிறார். மேலும் இந்த நூலில்,

‘இந்தியாவின் (முதன்முதலாக குடியிருப்புகள் உருவான இடங்கள்) ஆற்றோரங்களில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் பசு, எருது போன்றவற்றில் எலும்புகளே அதிகளவில் கிடைக்கப் பெற்றுள்ளன. எலும்புகளுடன் வேட்டையாடப் பயன்பட்ட கற்கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன’ என்கிறார். புனிதத்தைக் கட்டுடைக்கும் விதமாக, ‘painted grey ware sites’ எனப்படும் ஆரிய குடியேறிகளின் வாழிடப் பகுதிகளில் வீட்டு விலங்குகளின் எலும்புகள் அவை, வெட்டப்பட்டு கொல்லப்பட்ட அடையாளங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் கால்நடைகளின் பாதுகாவலனாக இந்துக்களால் போற்றப்படும் கிருஷ்ணனுடன் தொடர்புபடுத்தப்படும் மதுராவில்தான் இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலத்தை கிமு 400-200 என்கிறார்கள் தொல். அறிஞர்கள்’ என்று ஆதாரங்களை அடுக்குகிறார் ஜா.

கி.மு.காலத்துக்கு ஏன் போவானேன்..சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியார் பசு மாமிசம் உண்பதில் தவரில்லை என்கிறார். ‘கோபுரத் தற்கொலைகள்’ என்கிற நூலில் ஆய்வாளர் ஆ. சிவசுப்ரமணியன், பிராமணர்கள் செய்யும் யாகங்களில் பசுக்கள் பலியிடுவதைப் பற்றியும் அப்படி பலியிடப்படும் பசுக்களின் இறைச்சியை எப்படி உண்ண வேண்டும் என்பது குறித்தும் சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி, ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலில் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டுகிறார். ‘‘லோகத்தில் பல பேருக்குப் புரிய ஷேமத்தைத் தேவர்கள் செய்ய வேண்டுமென்ற உசந்த நோக்கத்தில் பசு ஹோமம் பண்ணுவதில் தப்பேயில்லை” என்ற சங்காரச்சாரியாரின் மேற்கோளையும் குறிப்பிட்டுள்ளார் ஆ. சிவசுப்ரமணியன்.

உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவில் மாட்டிறைச்சி உண்பதை எதிர்க்கும் செயல்பாடுகள் அறிவிலித்தனமானவை. மதச் சிறுபான்மையினரும் தலித்துகளும் உண்கிறார்கள் என்பதற்காகவே மாட்டிறைச்சி உண்பதற்கான தீவிரவாத செயல்களை இந்து அமைப்புகள் கையில் எடுக்கின்றன என்கிற உண்மை மட்டுமே இதில் உள்ளது. மாட்டிறைச்சி உண்பது தீண்டத்தாகாதது அல்ல என்கிற உணர்வு இந்து பெரும்பான்மை நடுத்தர வர்க்கத்துக்கு வரும்வரை, இந்த உணவு தீவிரவாதம் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். ‘நான் மாட்டிறைச்சி உண்பேன்’ என்று பொதுவெளியில் சொல்வதே மாட்டிறைச்சி உண்டிருப்பார்கள் என்கிற வதந்தியில் கொல்லப்பட்டவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்!

 

Advertisements