காவிரி டெல்டாவை பன்னாட்டு கம்பெனிகளுக்குத் தாரைவார்க்கக் காத்திருக்கும் அரசுகள்!

கடந்த நான்கு ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரைத் தரவில்லை கர்நாடக மாநிலம். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதம் 10 டி.எம்.சி, ஜூலை மாதம் 34 டி.எம்.சி, ஆகஸ்ட் மாதம் 50 டி.எம்.சி என கடந்த 31 ஆம் தேதி வரை 94 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டிருக்க வேண்டும். செப்டம்பர் மாதத்தில் ஒரு நாளைக்கு 1.3 டி.எம்.சி. வீதம் இன்று வரை 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 67 டி.எம்.சி. மட்டுமே காவிரியில் திறக்கப்பட்டிருக்கிறது. காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் சரியான மழைப்பொழிவு இல்லை என்ற காரணத்தைக் கர்நாடகம் சொன்னதால் படிப்படியாக கடந்த நான்கு ஆண்டுகளில் சம்பா சாகுபடி பரப்பு குறைந்துவிட்டது. தற்சமயம் சம்பா சாகுபடி முடிந்து, குறுவை சாகுபடி தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் கர்நாடகம் தரவேண்டிய நீரை தராததால் காவிரி டெல்டா பகுதிகளில் நெற் பயிர்கள் கருகிவருகின்றன. தங்களுக்கு வந்து சேரவேண்டிய தண்ணீரைப் பெற்றுத்தரக் கோரி விவசாயிகள் கடந்த 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீர் போதுமானதாக இல்லை. அணையிலிருந்து வரும் நீர் டெல்டா மாவட்டங்களில் கடைமடை நிலங்களுக்குச் சென்று சேரவில்லை. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிரை காப்பாற்றும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
கர்நாடக அரசு இதுவரை உபரிநீரையும் கணக்கில் எடுத்துக்கொண்டு 67 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டதாக கூறுகிறது. அப்படியே பார்த்தாலும் நடுவர்மன்ற தீர்ப்புபடி கர்நாடகம் இன்னும் 47 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடவேண்டும். டெல்லியில் நடந்த காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனால் கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளிலும் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால்கூட சாகுபடியை முழுமையாக முடித்துவிடலாம்” என்கிறார் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். சமீபத்தில் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்தக் குழு ஈடுபட்டது.

கர்நாடக அரசு தண்ணீர் இல்லை என்று சொல்வதும் அதைக் கேட்டு தமிழகத்தின் ஆளும் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளும் கொதித்தெழுந்து போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் என செய்வதும் வாடிக்கையாகிவிட்டன. ஆனால் இறுதிவரையில் காவிரியில் தண்ணீர் வருவதில்லை. நெல் வயல்கள் நீர் இல்லாமல் வெடித்து பாளம், பாளமாக நிற்பதுதான் நடக்கிறது. தமிழகம்-கர்நாடகத்துக்கு காவிரி நீரைப் பகிர்ந்தளிக்கும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைந்தும் அது செயல்படாத ஒன்றாகவே இருக்கிறது. மத்தியில் எந்தக் கட்சித் தலைமையில் ஆட்சி அமைந்தாலும் காவிரி நீர் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. கர்நாடக அரசுக்கு இந்த அரசுகள் சாதகமான முடிவை எடுக்கிறார்கள் என்பது மட்டும்தான் இதற்கெல்லாம் காரணமா?

காவிரி நீர்க் கேட்டு தமிழக டெல்டா விவசாயிகள் நடத்தும் போராட்டங்களில் பங்கெடுத்த சமூக ஆர்வலர் முகிலன் இது பற்றி விரிவாகப் பேசினார்..
“கடந்த ஒன்றரை மாதங்களாக திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தேன். அங்கே காவிரி நீரை நம்பி செய்துவந்த விவசாயம் இப்போது முழுக்க முழுக்க ஆழ்துளை கிணறுகளை மட்டுமே நம்பியுள்ளது. நஞ்சை நிலங்களில் கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கின்றன. 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் செய்துவந்த நெல் சாகுபடி இன்று 14 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. கர்நாடக தண்ணீர் தரவில்லை என்ற ஒரு காரணம் மட்டும்தான் இங்கே அரசியலாக்கப்படுகிறது. இது அரசியல் அல்ல என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதில் இருப்பது பன்னாட்டு நிறுவனங்களுக்காக மத்திய அரசு செய்யும் சதி மட்டுமே.

ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ளுவதைத் தடுக்கக்கோரி

காவிரி டெல்டா பகுதியில் 30 வருடத்துக்கு மீத்தேன் எடுக்க முடியும்; 100 வருடத்துக்கு நிலக்கரி எடுக்கலாம். கூடுதலாக பாறைகளை வெடித்துத் தகர்ப்பதால் கிடைக்கும் ஷேல் வாயுவை எடுக்கலாம். இதன் பொருட்டே கடந்த 30 ஆண்டுகளாக, மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கு காவிரி நீரைப் பெற்றுத்தருவதில் விருப்பம் காட்டவில்லை. 80களிலே மத்திய அரசை மதிக்காமல் கர்நாடகம் காவிரியில் அணை கட்டியது. 1996-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், கர்நாடக நீர் நிலைகளை சீரமைக்க ரூ. 500 கோடி ஒதுக்கினார். தமிழகத்தை தொடர்ந்து ஆட்சி செய்யும் அதிமுக, திமுக அரசுகளும் இதற்கு உடந்தையாகவே உள்ளன. மணல் அள்ளுவதில் இருந்து, கிரானைட் வெட்டி எடுப்பது, தாதுமணல் வரை எல்லா பெரும் ஊழல்களிலும் இந்த இரண்டு கட்சிகளும் பங்குதாரர்களாக இருக்கும்போது எப்படி மத்திய அரசை இவை பகைத்துக் கொள்ளும்?” என்று ஆதங்கப்படுகிற முகிலன், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் பணியை சத்தமேயில்லாமல் மத்திய அரசு செய்துவருவதாகக் கூறி அதற்கான புகைப்பட ஆதாரத்தையும் அளித்தார்.

எப்போது ஆறுகள் வறண்டுப் போகும் என்பதுபோல், மணல் அள்ளக் காத்திருக்கும் கொள்ளையர்களும் அவர்களுக்குத் துணைப் போகும் அரசு அதிகாரமும் தமிழகத்தை வறட்சிப் பாதைக்குத் தள்ளியுள்ளன. சமீபத்தில் வைகுண்டம் அணையில் தூர்வாறுவதாகச் சொல்லி மணல் அள்ளிய விவகாரம் பொதுமக்கள் கவனத்துக்கு வந்தது. வருடத்து வருடம் பருவ மழையும் பொய்த்து வருகிறது. தண்ணீர் இல்லை, உணவு உற்பத்தி இல்லை என்கிற நிலையை இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் எட்டுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகின்றன. பிரகாசம் என்பதை ஆழ்ந்த இருள் என்று பொருள் கொள்க!

Advertisements