சாம்பாரும் ரசமும் மட்டுமல்ல, மாட்டிறைச்சியும் தமிழர் உணவுதான்

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம், உணவு எதையும் வெகுஜென ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. சாம்பாரும் ரசமும் தான் தமிழர்களின் பொது உணவாகியுள்ளது. சாம்பாரும் ரசமும் போலத்தான், இறைச்சியும் தமிழர்களின் உணவே. பத்தாண்டு கால ஊடக பணியில் முதன்முறையாக மாட்டிறைச்சி ரெசிபியை எழுதியிருக்கிறேன்.

கேரள சமையலில் மாட்டிறைச்சிக்கு முக்கியமான இடம் இருக்கிறது. ஆனால் தமிழக நடுத்தர மக்கள் மனதில் மாட்டிறைச்சி உண்பதில் பல மனத்தடைகள். தமிழகத்தில் 40சதவீதத்துக்கும் மேற்பட்ட வளர் இளம் பருவத்தினர் எடை குறைவு மற்றும் இரும்புச் சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேகமான வாழ்க்கைச் சூழலில் பச்சைக்காய்கள் உண்பது மட்டும் அத்தனை சத்துக்களையும் தந்துவிடும் என்று நம்புவது மடமை. பண்ணைக் கோழி இறைச்சி உண்பதால் ஹார்மோன் மாற்றம், அதிக உடல் எடை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் சூழலில் விலை அதிகமான ஆட்டிறைச்சியையும் வாங்க முடியாத சூழல் நடுத்தர வர்க்க மக்களுக்கு இருக்கிறது. இதற்கொரு சிறந்த தீர்வு மாட்டிறைச்சி. வாரம் ஒரு முறையேனும் மாட்டிறைச்சி உண்பது, எடை இழப்பையும் சத்துக் குறைபாட்டையும் சரிசெய்ய உதவும்.

மாட்டிறைச்சியில் எல்லாவிதமான உணவுகளையும் தயாரிக்கலாம். கேரளாவில் மாட்டிறைச்சியில் ஊறுகாய்கூட தயாரிக்கிறார்கள். நாம் மாட்டிறைச்சியில் பிரியாணி செய்வது எப்படி என்று முதலில் பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்:

பாசுமதி அரிசி – அரை கிலோ
மாட்டிறைச்சி – அரை கிலோ
தக்காளி – 3
வெங்காயம் – 3
பச்சை மிளகாய்- 2
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக் கரண்டி
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் – தலா இரண்டு
மிளகாய்த்தூள் – இரண்டு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை- ஒன்றரை கைப்பிடி
புதினா இலை – ஒரு கைப்பிடி
தயிர் – அரை கப்
கல் உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்வது எப்படி?

மாட்டிறைச்சியைக் கழுவி, சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் ஆறு விசில் வரை விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

பாசுமதி அரிசியைக் கழுவி, அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களின் அளவுக்கேற்ற குக்கரை தேர்ந்தெடுத்து அடுப்பில் வைத்து சூடாக்கவும். அடுப்பில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை உள்ளிட்ட வாசனைப் பொருட்களைப் போடவும். பிறகு, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை மாறும் வரை வதக்கவும். பிறகு, தக்காளி, கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து தக்காளி குழைய வேகும்வரை வதக்கவும். இதில், தயிர்,கல் உப்பு, மிளகாய்த் தூள் போட்டு நன்றாகக் கிளறவும். இதனுடன் வேகவைத்த கறியைப் போட்டு ஒரு கொதிவரும் வரை வேகவிடவும்.

கொதி வந்தவுடன் ஊறவைத்த பாசுமதி அரிசையைச் சேர்த்து, லேசாகக் கிளறி, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு குக்கரை மூடி போட்டு மூடவும். இரண்டு விசில்கள் போதும். சுவையான பிரியாணி தயார்!

வெள்ளரிக்காய் பச்சடி:

மாட்டிறைச்சி பிரியாணியுடன் வெள்ளரிக்காய் பச்சடியைச் சேர்த்து உண்ணலாம். தயிரில் வெள்ளரிக்காயைப் பொடியாக அரிந்துப் போட்டு, உப்புச் சேர்த்தால் வெள்ளரிக்காய் பச்சடியும் தயார்.