“எங்கள் தந்தையின் நினைவுகளை விட்டு எங்குச் செல்வோம்?”

உத்தர பிரதேச மாநிலத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முகமது அக்லக் அடித்துக் கொல்லப்பட்டார், அவருடைய இளைய மகன் கடுமையாக தாக்கப்பட்டார். உலகம் முழுவதில் கடும் கண்டனத்துக்கு ஆளான இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முகமது அக்லக்கின் குடும்பம், அந்த ஊரைவிட்டு வெளியேறும் நிர்பந்தத்தில் இருக்கிறது.

“இந்த வீடு எங்கள் தந்தை மனிதமே இல்லாமல் தாக்கப்பட்டதை நினைவுப் படுத்திக்கொண்டே இருக்கிறது” என்கிறார் சர்டாஜ். சென்னையில் இந்திய விமானப்படையில் பணியாற்றும் சர்டாஜை, அவருடைய தலைமை அதிகாரிகள் விமானப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வந்து வசித்துக்கொள்ள ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், சர்டாஜுக்கு இந்த வீடு கோடூரத்தை மட்டுமல்ல, தன் குடும்பத்தாருடன் தான் கழித்த இனிமையான தருணங்களையும் நினைவுபடுத்துவதாகச் சொல்கிறார்.

“எங்கள் தந்தையின் நினைவுகள் இந்த வீட்டுடன், இந்த ஊருடன் உள்ளன. இவற்றை விட்டுவிட்டு நாங்கள் எப்படிச் செல்வோம்?” என்று கேட்கிறார்.

“நாங்கள் இங்கேதான் இருக்க விரும்புகிறோம். நடந்த கொடூரத்தை எங்களால் மறந்துவிடமுடியாது. ஆனால் எது வருகிறதோ அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு நாங்கள் வந்திருக்கிறோம். இந்த ஊரை விட்டுப் போகும் எண்ணம் உறுதியாக இல்லை” என்று தெளிவுபடுத்துகிறார் சர்டாஜ்.

முகமது அக்லக் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பின்(IFTU) உண்மை அறியும் குழு அறிக்கை சமர்பித்துள்ளது.

இந்த அறிக்கையில், “தாத்ரி கிராமத்தில் சுமார் 2500 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தப் பகுதியில் தாக்கூர் ஜாதியை சார்ந்த இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். சில தாழ்த்தப்பட்ட சாதி மக்களும் வாழ்கின்றனர். இங்கு வாழும் 32 முஸ்லிம் குடும்பங்களுக்கு சிறிது அப்பால், முகமதுவின் வீடு அமைந்திருந்தது.கடும் உழைப்பினால் தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைத்து ஒரு நடுத்தர வாழ்க்கையை எட்டியுள்ளனர்.

இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ் ஷர்மா பிஜேபியை சார்ந்தவர். பிஜேபி கடந்த சிலவாரங்களாக இப்பகுதியில் மதவாத செயல்களை செய்து வந்துள்ளது. பிஜேபியின் மத்திய உறுப்பினர்களுடன் இப்பகுதி இளைஞர்கள் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இந்து மதச் சின்னங்களுடன் உள்ள உடுப்புகளை அணிந்தும், மது அருந்தி அனைவருக்கும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன்னர், இங்குள்ள கோயிலில் ஒரு பூசாரி அமர்த்தப்பட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில் செப்டம்பர் 25 அன்று பக்ரீத் பண்டிகையின் போது, தங்களுடைய வீட்டில் ஆடு பலிகடா கொடுப்பதற்கு கூட இங்கு வாழ்ந்த முஸ்லிம் குடும்பங்கள் பயந்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று இரவு 8 மணி அளவில் ஒரு பாத்திரத்தில் மாட்டுக்கறியின் போட்டோ ஒன்று இந்த கிராமத்தில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டதாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுவரை இந்த போட்டோ அல்லது செய்தி உண்மையானதா என்று எவரும் கூறவில்லை. இரவு 9 மணி அளவில் மூன்று நான்கு இளைஞர்கள் கோவிலுக்கு சென்று பூசாரியிடம், கிராமத்தில் ஒரு பசு செத்து கிடப்பதாகவும் பொது ஸ்பீக்கரின் மூலம் அனைவரையும் கூட்டுமாறு நிர்பந்தித்தாக பூசாரி கூறுகிறார்.

சுமார் 1500 பேர் உடனே கூடியதாகவும், அதில் 100 பேர், முகமது வீடு அமைந்துள்ள தெருக்குள் நுழைந்து, வீட்டின் கேட்டை உடைத்து, சுவரைத் தாண்டி உள்ளே வந்து கோஷமிட்டுள்ளனர். பிறகு வீட்டுக்குள்ளே நுழைந்து, அவருடைய அம்மாவை தாக்கயுள்ளனர். சிலர் மேல்மாடிக்கு சென்று அங்கு இருந்த முகமதையும் அவருடைய இளைய மகன் தானிஷையும் கம்புகளால் தாக்கியுள்ளனர். அந்த அறையில் உள்ள எலெக்ட்ரிக் ரம்பத்தை கொண்டு அவர்களை படுகாயப் படுத்தியுள்ளனர். பின்னர், அஹ்மதின் உடலை வீதியில் இழுத்து விட்டுச் சென்றுள்ளனர்” என்று கூறுகிறது.

முஸ்லிம் குடும்பங்களை அச்சுறுத்த வேண்டும் என்பதும், அச்சுறுத்தலுக்கு பயந்து முஸ்லிம் குடும்பங்கள் அந்த ஊரைவிட்டு ஓடிப் போக வேண்டும் என்பதும் இந்தத் திட்டமிட்டத் தாக்குதல்கள் உணர்த்துகின்றன. அக்லக்கின் குடும்பமும் மற்ற முஸ்லிம் குடும்பங்களும் இந்த அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

கௌதம் புத்தாநகர் மாவட்ட நீதிபதி, இந்த குடும்பத்துக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். முகமது அக்லக்கின் சகோதரர் ஜமீல் “ஐந்து தலைமுறையாக இங்கு வாழ்கிறோம்,நாங்கள் எப்படி இந்த கிராமத்தை விட்டு போக முடியும்? நாங்கள் இந்த இடத்தைவிட்டு போக மாட்டோம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் ஊடகங்கள் நாங்கள் இங்கிருந்து கிளம்பிவிட்டதாக தொடர்ந்து செய்தி போடுகிறார்கள்” என்று வருந்துகிறார்.

Advertisements