முன்னணி இறைச்சி ஏற்றுமதி நிறுவனம் நடத்தும் பாஜக எம்எல்ஏ

2013-ஆம் ஆண்டு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மூட்டப்பட்ட முசாஃபர் நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம் எல் ஏ சங்கீத் சிங் சாம், மாட்டிறைச்சி அரசியலை தூக்கி நிறுத்தும் முக்கியமான நபர். உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற வதந்தியில் முகமது அக்லக் கொல்லப்பட்டப் பிறகு, அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சியை முன்வைத்து தொடர்ந்து வெறுப்புப் பேச்சுக்களைப் பேசி வருபவர்.

‘அல் துவா’

இவருடைய இன்னொரு முகத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது, தி இந்து ஆங்கில நாளிதழில் ஜோஷி ஜோசப் மற்றும் முகமது அலி எழுதிய முகப்புப் பக்கச் செய்தி. ‘அல் துவா’ என்கிற இறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தின் பங்குதாரராக சங்கீத் சிங் சாம் இருக்கிறார் என்பதை ஆதாரத்துடன் சொல்கிறது இந்தச் செய்தி. இந்த நிறுவனம் எருமை இறைச்சி, ஆட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதன் மூன்று பங்குதாரர்களில் ஒருவராக உள்ளார் சங்கீத்.

மறுப்பு

இறைச்சி ஏற்றுமதி நிறுவனம் நடத்துவது குறித்து ஏற்கனவே சில ஊடகங்கள் கேட்டபோது, அதை மறுத்திருக்கிறார்.
‘நான் உணவில் முட்டைக்கூட எடுத்துக் கொள்வதில்லை. நான் சுத்தமான ஹிந்து. ஹிந்து விரோதமாக நான் எதையும் செய்ததில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.

‘அல் துவா’வில் பங்கு

நிறுவனம் பற்றிய பதிவு செய்யப்பட்ட தகவல்களை ஆதாரத்துடன் காட்டிய பிறகு, “அல் துவா நிறுவனத்துக்கு என்னுடைய பங்களிப்பாக நிலத்தில் மட்டுமே முதலீடு செய்தேன். அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. இதைச் செய்தது 2008ல். நான் அப்போது அரசியலுக்கு வரவில்லை’ என்று மழுப்புகிறார் சங்கீத்.

இதெல்லாம் ஒரு விஷயமா?

தாத்ரியில் முகமது அக்லக் கொல்லப்பட்டதை ‘ஆயிரம் கொலைகள் நாட்டில் நடக்கின்றன. அதுபோலத்தான் இதுவும். இதற்கெல்லாம் பிரதமர் வாய் திறந்து பேசவேண்டியதில்லை’ என்று சொன்னவர் சங்கீத். முசாஃபர் நகர் கலவரத்தை ஒட்டி, தொடர்ந்து மதநல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் பேசி அரசியல் செய்துவருகிறார் இவர். 2013-ல் இவர் மேல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

Advertisements