சொந்த வாழ்க்கையின் துயரை சாதனையாக மாற்றிய மனோரமா!

manoram

சினிமாவில் மிகச் சிறந்த வெற்றியாளராக இருந்த மனோரமாவுக்கு சொந்த வாழ்க்கை கசப்பானது, துயரமானது, இறுதிவரை அவரை துன்பத்துக்குள் தள்ளிக் கொண்டிருந்தது அது!

மனோரமாவுக்கு முதல் துயரை ஏற்படுத்தியது தந்தை என்ற ஆண். கைக்குழந்தையாக தன்னையும் தன் தாயையும் புறக்கணித்த அந்த ஆண் தந்த துயர், அவருடைய குழந்தைப் பருவத்தை மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதுமே துன்பத்தில் ஆழ்த்தியது.

அம்மாவின் உடல்நிலை காரணமாக சிறுவயதிலேயே வீட்டிற்காக உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவரைத் தள்ளியது. பள்ளிப்படிப்பு பாதியிலே நின்றது. மேடை நாடகங்களில் தொடங்கியபோது, அங்கே தன் வாழ்க்கைப் பயணத்தில் துயர் சேர்க்க மற்றொரு ஆணைச் சந்தித்தார். அவர் மனோரமாவின் காதல் கணவர், ராமநாதன். இவர்களுக்குப் பிறந்த மகன் பூபதி.

சினிமா கலைஞர்கள், குறிப்பாக நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு வெற்றிகரமாக அமைவதில்லை. மனோரமாவின் வாழ்க்கையும் அப்படிப்பட்டதாகவே அமைந்தது. ஆனால், மற்றவர்களைப் போல மனோரமாவின் துயரம் சட்டென்று முடிந்துபோகக்கூடியதாக இல்லை. தனக்கும் தன் காதல் கணவருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்கள், முரண்பாடுகள் எல்லாம் தீர்ந்துபோய்விடும் என திரும்பத் திரும்ப நம்பினார். அதற்காக தன்னுடைய உழைப்பு, அதனால் கிடைத்த பணத்தை எல்லாம் இழந்தார்.

மகனாக வந்த ஆணும் மனோரமாவுக்கு ஒரு துயரமாகவே அமைந்தார். தன் மகனை கதநாயகனாக வைத்து படங்களைத் தயாரித்து ஓய்வில்லாமல் உழைத்த பணத்தை இழந்தார். அதனால் மிகுந்த மனவுளைச்சலுக்கும் ஆளானார்.

மனோரமா வெளிப்படையாக பேசக்கூடியவராக இருந்தார். தன்னுடைய துயரங்கள் குறித்து பல ஊடக நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். “ஆச்சி மனோரமாவை கடந்த மார்ச் மாதம் சந்தித்தேன். அப்போதே அவர் நிலை குலைந்திருந்தார். ஆனாலும் என்னிடம் விரிவாக மனம் திறந்து தன் திருமண வாழ்வு, நடிகர் சிவாஜியுடனான நட்பு, தனிமை, ஏமாற்றம் என பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். பள்ளத்தூரில் பிறந்து ஒரு பெண்ணாக ஓடி… ஓடி உச்சம் தொட்டவர் மனோரமா! அவருடையது பெரிய சாதனைதான். எஸ். எஸ். ஆர் அண்ணன் என்றதுமே அவருடைய கண்களில் கண்ணீர் வந்தது. சிவாஜி அண்ணன் என்றதுமே அழுகிறார்…. அது முதுமையின், பலவீனத்தின் கண்ணீர் அல்ல. இந்தக் கண்ணீர் உணர்த்துவது ஒன்றே ஒன்றைத்தான் அது ஆண்களுக்கு எதிரான போராட்டம். சத்தமில்லாமல் தன் திரை வாழ்வில் அதைச் செய்தவர் மனோரமா. ஆண்களால் பல காலக்கட்டங்களில் வீழ்த்த முடியாமல் உயர்ந்து நின்றவர் ஆச்சி!” என்கிறார் பத்திரிகையாளர் அருள்எழிலன்.

அருள்எழிலன் சொல்வதுபோல தன்னுடைய சொந்த வாழ்க்கைத் துயரங்களில் இருந்து விடுபட ஓயாது உழைத்தவர் மனோரமா. சொல்லப்போனால் அந்தத் துயரங்களேகூட அவரை சாதனையாளராக மாற்றியிருக்கலாம்.

இதுபற்றி பத்திரிகையாளர் ஞாநி, “தன் தனி வாழ்வில் பங்கேற்றிருந்த ஆண்களால் துயரம் மட்டுமே பெரிதும் அடைந்த மனோரமா, அவற்றால் துவண்டுவிடாமல் தன் திறமையையும் கலையையும் மட்டும் நம்பி சிறப்பாக வாழ்ந்த துணிகரமான பெண். நகைச்சுவை, குணச்சித்திரம் இரண்டிலும் அவரைப் போல நீண்ட இன்னிங்க்ஸ் ஆடிய பெண் கலைஞர்கள் வேறெவரும் இல்லை” என்கிறார்.

அவர் சாதனை எப்படிப்பட்டது என தீக்கதிர் பொறுப்பாசிரியர் குமரேசன் சொல்கிறார்…

“எல்லாத் துறைகளையும் போலவே திரைப்படத்துறையிலும் ஆணாதிக்கம்தான். நடிப்புக் களத்தைப் பொறுத்தவரையில் ஆண்கள் மட்டுமே பல ஆண்டுகள் நடித்துக்கொண்டிருக்க, பெண்கள் வெகு விரைவில் மறக்கடிக்கப்பட்டுவிடுவார்கள். அதிலும் நகைச்சுவை நடிப்பில் எத்தனையோ பெண்கள் கொண்டுவரப்பட்டார்கள், சில படங்களுக்குப் பிறகு வெளியேற்றப்பட்டார்கள். ஆச்சி ஒரு விதிவிலக்கு. நாடகமேடையில் தொடங்கிய அவரது நடிப்பு, உடல் நலியும் வரையில் தொடர்ந்தது. தில்லானா மோகனாம்பாளில் வேறு யாரும் ஜில்ஜில் ரமாமணிக்கு உயிரூட்டியிருக்க முடியுமா?

பிற்காலத்தில் நல்ல குணச்சித்திர நடிகராகவும் புகழ்பெற்றார். பாடல் வானிலும் சிறகடித்தவர். சொந்த வாழ்க்கையில் பல சோதனைகளைக் கடந்து தனக்கென ஒரு இடத்தை நிலைநாட்டியவர். புதிய பெண் நடிகர்களுக்கு – குறிப்பாக நகைச்சுவை நடிகர்களுக்கு – ஒரு ஈர்ப்புவிசையாக என்றும் அவரது பெயர் நினைவுகூறப்படும்”