நிறைவேறியது யுவராஜின் லட்சியம்

கொங்கு பகுதியில் உள்ள கவுண்டர் சாதி மக்கள் நலனை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லிக்கொள்ளும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையில் சில காலம் இருந்தவர் யுவராஜ். பிறகு, அதன் தலைவர் தனியரசுவிடம் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக அந்தக் கட்சியிலிருந்து விலகி தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பின் நோக்கம், கவுண்டர் சாதி தூய்மையைக் காப்பாற்றுவது. இந்தப் பகுதியில் கவுண்டர் சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்ற சாதியினரை குறிப்பாக தலித்துகளை காதலிக்கக்கூடாது என வலியுறுத்துவது இந்த அமைப்பின் நோக்கம். இந்த அடிப்படையிலே கவுண்டர் சாதி பெண்ணுடன் பேசிய,கோகுல்ராஜை இந்த அமைப்பினர் யுவராஜ் தலைமையில் மிரட்டினர். அந்த சம்பவம் நடந்த அடுத்த நாள், கோகுல்ராஜ் தலை அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கை விசாரித்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப் பிரியா சந்தேகத்துக்குரிய வகையில் மரணமடைந்தார்.

யுவராஜ் மீது கோகுல்ராஜ் கொலை வழக்கையும் சேர்த்து எட்டு வழக்குகள் உள்ளன. இந்த எட்டு வழக்குகளிலும் அவர் தேடப்படும் குற்றவாளி; அத்தனையும் கிரிமினல் வழக்குகள்…

எட்டு வழக்குகள் என்னென்ன?

* பெருந்துறை காவல் நிலையத்தில் பணம் கேட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இவர் மீது 2013-ஆம் ஆண்டு இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

* சங்ககிரி,கரூர் காவல் நிலையங்களில் கொலை முயற்சியுடன் அடித்ததாக மூன்று வழக்குகள் போடப்பட்டுள்ளன.

* திருச்செங்கோடு காவல் நிலையத்தில் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.

* ஈரோடு காவல்நிலையத்தில் மிரட்டல் வழக்கு ஒன்றும், குமாரபாளையத்தில் கிரிமனல் வழக்கு ஒன்றும் பதியப்பட்டுள்ளது.

‘யுவராஜின் லட்சியம் நிறைவேறியது!’

இத்தனை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தபோதும் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்த யுவராஜை வரவேற்க பெரும்திரளான கூட்டம் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகம் முன்பு கூடியது.

“கடந்த 100 நாட்களில் யுவராஜின் முகத்தைக்கூட பார்க்காத பல இளைஞர்கள் அவரைக் கதாநாயகனாகப் பார்க்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் ‘நான் யுவராஜை ஆதரிக்கிறேன்’ என்று வெளிப்படையாகவே ஹேஷ் டாக் போட்டு எழுதினார்கள். இறுதியாக எதை நினைத்து கோகுல்ராஜ் படுகொலை நடந்ததோ அது நிறைவேறிவிட்டது. கொங்கு சாதி அரசியலை முன்னெடுத்த தனியரசு, நாகராஜ், ஈஸ்வரன் ஆகியோரை மிஞ்ச வேண்டும், தன்னுடைய சமூகத்தைக் காப்பாற்ற வந்த நாயகனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற இலக்கு, லட்சியத்தை யுவராஜ் அடைந்துவிட்டார். அதற்கு அவருக்கு சில ஊடகங்களும் அவருக்கு உதவின” என்கிறார் செள. பாவேந்தன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவுடன் கோகுல்ராஜின் தாய் சித்ரா, கோகுல்ராஜ் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க இருப்பதாகவும் இவர் தெரிவித்தார்.

“கோகுல்ராஜ் கொலைக்கு நீதி கிடைக்கும் என்று நாங்கள் நூறு சதவீதம் நம்பவில்லை. அதனால்தான் சிபிஐ விசாரணையைக் கேட்கிறோம்” என்கிறார் சித்ரா.

Advertisements

One thought on “நிறைவேறியது யுவராஜின் லட்சியம்

  1. இந்த விசயத்தில் உங்கள் அளவிற்கு வேகமும், ஆர்வமும்
    தொல் திருமா, பு த கிருஷ்ணசாமி , பூவை மூர்த்தி ஜெகன் ,
    சிவகாமி ஐ ஏ எஸ், சாத்தை பாக்கியராஜ் , மூ மு மு தலைவர்கள்
    ஆகியோர் காட்டாதது ஏனோ . சிறையில் இருந்தே/ ஜாமீனில் இருந்தே வரும் சட்ட மன்றத் தேர்தலில் திரு யுவராஜ் / அவர் மனைவி வெற்றி பெறுவார் என்றே உங்களைப் போன்றே நானும் நம்புகிறேன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.