நயன்தாரா செகலின் எதிர்ப்புணர்வை நாயின் ஊளையாக வர்ணிக்கும் தமிழ் எழுத்தாளர்!

சாகித்ய அகாடமி விருதுகள் திரும்ப அளிப்பது குறித்து நேரடி பதில் ஏதும் தராமல், சாகித்ய அகாடமி எழுத்தாளர்களின் கொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர் , சாகித்ய அகாடமி விருது வாங்கிய 16 எழுத்தாளர்கள்.

சாகித்ய அகாடமி விருது திரும்ப அளிக்கப்படுவதை ஒரு வரலாற்று நிகழ்வாகப் பார்ப்பவர்கள் மத்தியில் ஏன் சாகித்ய அகாடமி விருதைத் திரும்ப தர வேண்டும் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். தமிழின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், சென்ற ஆண்டு தன்னுடைய கால்கள் நாவலுக்காக யுவ புரஸ்கார் விருதுபெற்ற அபிலாஷ் சந்திரனும் தன்னுடைய கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். அவற்றைக் கீழே தருகிறோம்…

ஜெயமோகன் தன்னுடைய வலைதளத்தில் எழுதியுள்ள பதிவு:

சாகித்ய அக்காதமி விருதுகளை சில எழுத்தாளர்கள் திரும்ப அளித்திருக்கிறார்கள். அதைப்போல மற்ற எழுத்தாளர்களும் திரும்ப அளிக்கவேண்டும் என்று வற்புறுத்தி, அளிக்காதவர்களை அவமதித்து வசைபாடி ஒரு கும்பல் எழுதிக்கொண்டிருக்கிறது.

ஒரு சில எழுத்தாளர்களுக்குச் சாகித்ய அக்காதமி விருதை திரும்ப அளிப்பது ஒரு போராட்ட வடிவமாகத் தென்படுவதனால் அதை அவர்கள் செய்வதில் எந்தப் பிழையும் இல்லை. ஜனநாயகத்தில் எந்தப்போராட்ட வடிவமும் மக்களிடம் ஒரு தரப்பை வலுவாக எடுத்துச்செல்வதேயாகும். இவ்வகையில் விருதுகளை திரும்ப அளிப்பதன் வழியாக அவர்கள் ஊடகங்களில் இடம்பெறுகிறார்கள், அச்செய்திவழியாக தங்கள் கருத்துநிலையை, எதிர்ப்பை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். எல்லா வகையிலும் அது ஒரு ஏற்கத்தக்க போராட்ட வடிவமே.

ஆனால் இதில் எந்த வகையான மனமயக்கங்களுக்கும் இடமிருக்கவேண்டியதில்லை. ஒன்று இது ஒன்றும் தியாகம் அல்ல. சாகித்ய அக்காதமி விருது பெறும்போது இவர்களுக்குக் கிடைத்தவை என்னென்ன? ஒன்று ஊடகக் கவனம் மற்றும் இலக்கிய முக்கியத்துவம். இரண்டு, இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் வாய்ப்பு. மூன்று பணம். இவற்றில் எவற்றையும் இப்போது இவ்விருதை துறப்பதனால் இவர்கள் இழக்கப்போவதில்லை.ஊடகக் கவனத்தைப்பொறுத்தவரை ஏற்றபோது அடைந்ததற்கு மேலாகவே அடைகிறார்கள்
.
அத்துடன் அன்றுமுதல் இன்றுவரை சாகித்ய அக்காதமி அரசியல் சார்ந்ததாகவே இருந்தது, இருக்கிறது என்பதையும் அனைவரும் அறிவர். அன்றைய அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்களே அதில் பதவிகளில் அமர்ந்தனர். இன்றுள்ள அதிகாரவர்க்கத்துக்கு நெருக்கமாகி பதவிகளில் அமரத்தவிக்கின்றார்கள்.

தங்கள் அதிகாரப்பின்புலம் இல்லாமலாகிப்போனதை நயனதாரா செகலும், சச்சிதானந்தனும் உணர்ந்தே இருப்பார்கள். இந்த அரசு வந்ததும் பழைய அதிகார அமைப்பைச் சார்ந்தவர்களை தொடர்ச்சியாக வெளியே தள்ளி தங்களவர்களை நியமித்துவருகிறார்கள். ஆகவே இந்த எதிர்ப்பு முற்றிலும் அரசியல் சார்ந்தது. பல்லாயிரம் சீக்கியர் டெல்லித் தெருக்களில் கொல்லப்பட்டபோது இவர்கள் ஏன் பரிசைத் துறக்கவில்லை என்ற கேள்விக்கே இடமிலை, இது இவர்களின் தெளிவான அரசியல். அதை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

இங்குள்ள முக்கியமான சிக்கல் இலக்கியவாதிகளை நோக்கி வரும் வசைகள்தான். இலக்கியம் மீதும் இலக்கியவாதிகள் மீதும் எந்த மதிப்பும் இல்லாதவர்கள், எவ்வகையிலேனும் அவர்களை அவமதிக்க வாய்ப்புதேடி அலைபவர்கள் இத்தருணத்தையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை பச்சோந்திகள் சுயநலவாதிகள் என்று வசைபாடுகிறார்கள். அதன் வழியாக தங்களைப் பெரும் போராட்டக்காரர்களாகச் சித்தரித்துக்கொள்கிறார்கள்.

எந்த ஒரு நூலையும் வாசித்து நாலுவரி எழுதும் தகுதி அற்றவர்கள் இலக்கியவாதிதான் கேடுகெட்ட சுயநலமி என்று கூவிக்குதிக்கிறார்கள். இதில் வெறும் சில்லறைபொறுக்கும் நோக்குடன் ஊழலில் மூழ்கிய அரசியல்கட்சிகளுக்கு அடியாளாகப்போன இலக்கியவாதிகளின் ‘தார்மீகக்’ கோபத்தைக் காண சிரிப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
இலக்கியவாதிகளில் பலவகையினர் உண்டு. அரசியலீடுபாடுள்ளவர்கள் உண்டு. அரசியலையே உள்வாங்காதவர்களும் உண்டு. எழுத்தாளர்களின் தேடல் அவர்களின் இயல்பு சார்ந்தது. முற்றிலும் தத்துவார்த்தமான அல்லது உணர்வுசார்ந்த உலகங்களில் மட்டும் வாழும் இலக்கியவாதிகள் உலகமெங்கும் உண்டு. அன்றாட அரசியலுக்கு அப்பால் ஆர்வமில்லாதவர்கள் நாலாபுறமும் சூழ்ந்து நின்று இலக்கியவாதிகளை தெருமுனை அரசியலுக்கு இழுத்து கூச்சலிடும் அவலம் வேறெங்கும் உண்டு என தோன்றவில்லை.

இங்குள்ள ஊடகங்களும் அரசியல்வாதிகளும் ஒவ்வொரு பத்துநாளுக்கும் ஒருமுறை ஒரு புதிய விவாதத்தை கிளப்புகிறார்கள். இலக்கியவாதியின் தேடலும் உணர்வுநிலைகளும் அவற்றை மட்டுமே சார்ந்து இருந்தாகவேண்டும் என்பதில்லை. தன் கவனம் எங்கு குவியவேண்டும் என்பதை அவனே முடிவுசெய்யவேண்டும். அதற்காக முழு புறவுலகையும் அவன் முற்றாகத்தவிர்த்தால்கூட அது இயல்பே.

இன்று ஓர் இலக்கியவாதி இசைக்கும் மொழிக்குமான உறவைப்பற்றி மட்டும் இருபதாண்டுக்காலம் சிந்த்தித்து எழுத முடியும் என்றால், அதற்கான இடமும் வசதியும் அவனுக்குண்டு என்றால், அவனுக்குரிய அங்கீகாரம் அவனைத் தேடிவரும் என்றால் மட்டுமே இங்கே இலக்கியம் உள்ளது என்று பொருள். இலக்கியவாதியை சில்லறை ஆசாமிகளின் கட்சியரசியல் நோக்கங்கள்தான் வழிநடத்தவேண்டும் என துடிப்பது போல கேவலம் பிறிதொன்றில்லை.

இவர்கள் வாராவாரம் போடும் கூச்சல்களில் ஈடுபட்டு இவர்களின் அரசியலுக்கேற்ப உடனடியாக நிலைப்பாடு எடுத்து கருத்துச்சொல்லும் கட்டாயத்தை இலக்கியவாதிகள் மேல் சுமத்துவோம் என்றால் அதன்பின் இங்கே இலக்கியமே இல்லை. நயன்தாரா செகலோ சச்சிதானந்தனோ சாரா ஜோசப்போ அரசியல்வாதிகளும் கூட. அவர்கள் இதையெல்லாம் செய்யலாம். எழுத்தாளன் அவனை ஆட்கொண்டுள்ள சவாலிலேயே இருப்பான். சிலர் வெளியேவந்து பேசலாம். சிலர் மௌனமாக இருக்கலாம். அது அவர்களின் தெரிவு.

நான் அறிந்த பல தமிழ் எழுத்தாளர்களால் மிகச்சிறிய விவாதங்களைக்கூட தாளமுடியாது. சாதாரணமான மறுகருத்துக்களைக்கூட அவர்கள் எண்ணி எண்ணி ஏங்குவதை, நிலைகுலைவதைக் கண்டிருக்கிறேன். விவாதங்களைத் தவிர்ப்பதற்காகவே எங்கும் குரலெழுப்பாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குரலெழுப்பும் முறை அவர்களின் எழுத்தே. பலசமயம் அதுவே பலசுவர்களில் முட்டி எதிரொலிகளாகவே எழுகிறது, அவர்களே அறியாமல். இதெல்லாம் கலையின் மாயவழிகள். எழுத்தின் இயல்புகளையும் சாத்தியங்களையும் அரசியல் சில்லுண்டிகளால் உணர முடியாது.
சாகித்ய அக்காதமி விருது என்பது அரசால் அளிக்கப்படுவதல்ல. அதைப்பெற்றவர்கள் அனைவரும் அரசியல்வாதிகளோ அவ்விருது அரசியலுக்காக அளிக்கப்பட்டதோ அல்ல.அவ்விருது ஒரு நடுவர் குழுவால் தேர்வுசெய்யப்பட்டு ஒரு காலகட்டத்தின் அடையாளமாக வழங்கப்படுகிறது. அதை நிராகரிக்கையில் எவ்வகையிலோ அந்த நடுவர்களும் அவ்விருதை ஏற்றுப்பாராட்டியவர்களும் நிராகரிக்கப்படுகிறார்கள். அதை காங்கிரஸோ அன்றைய அரசோ அளித்தது என எண்ணுபவர்கள்தான் இன்று அதை நிராகரிக்கும் படி அறைகூவுகிறார்கள்.

இந்த அற்ப அரசியல்வாதிகளுக்கு அப்பால் சென்று சிந்திக்க இலக்கியவாசகனால் முடியவேண்டும். இலக்கியவாதிகள் அவர்களின் உலகில் வாழட்டும். அரசியலிருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி. உங்கள் நிபந்தனைகளை அவர்கள்மேல் சுமத்தவேண்டாம்.

அபிலாஷ் சந்திரன் தன்னுடைய முகப்புப்பக்கத்தில் எழுதியுள்ளது…

இதுவரை மூன்று எழுத்தாளர்கள் மோடி அரசை கண்டித்து தம் சாகித்ய அகாதெமி விருதை திரும்ப கொடுத்திருக்கிறார்கள். விருதை திரும்ப அளிக்கும் மனநிலை ஒரு தொற்றுநோய் போல், தற்கொலை விருப்பம் போல் பரவுகிறது. தமிழில் எழுத்தாளர்களும் திரும்ப கொடுப்பார்களா என கேட்கிறார்கள். எனக்கு இது ஒரு கவன ஈர்ப்பு, குறியீட்டு நடவடிக்கையை நாம் தவறாய் புரிந்து கொள்வதன் விளைவு என தோன்றுகிறது.

நான் ஏற்கனவே சாஹல் பற்றி ஒரு விசயம் எழுதியிருந்தேன். கூட்டங்கூட்டமாய் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட இரு வருடங்கள் கழித்து காங்கிரஸ் அரசாட்சியின் போது அவர் எந்த தயக்கமும் இன்றி சாகித்ய அகாதெமி விருதை பெற்றார். இத்தனைக் காலமும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அரசுகளின் ஆட்சிகளில் பல தவறுகள், குற்றங்கள், பாதகங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சாஹல் அப்போதெல்லாம் பொறுத்தார். இப்போது அவர் அவநம்பிக்கையின் உச்சிக்கு சென்று விட்டார். இந்த அரசுடன் விவாதிக்கவே முடியாது எனும் கசப்புணர்வில் அவர் விருதை திருப்பி அளிக்க போவதாய் சொல்கிறார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் விருதை திரும்ப அளிக்கிறார்கள்.

ஆனால் இது ஒரு போராட்ட முறைமை அல்ல. பாதிக்கப்பட்ட பெண்களூக்கு நீதி வேண்டி பெண்கள் மேலாடை இன்றி பொதுவில் சென்று போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இதற்காய் ஊரிலுள்ள மிச்ச பெண்களிடம் எல்லாம் போய் நீங்களும் மேலாடை இன்றி நடக்க வேண்டும் என கேட்க முடியாது. ஒரு பிரச்சனை கொழுந்து விட்டு எரியும் போது சிலர் தம்மை தீக்கிரையாக்குவார்கள். அதற்காய் போராடுபவர்கள் எல்லாரும் தம்மை எரிப்பதில்லை. அப்படி எரித்தால் போராட ஆட்களே இருக்க மாட்டார்கள். வறுமையின்/மணவாழ்க்கையின் கொடுமை தாளாமல் குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் குதித்து சாகும் அம்மாக்கள் உண்டு. அதற்காய் பிரச்சனை ஏற்படும் போது எல்லாரும் பிள்ளைகளை கிளற்றில் எறிய வேண்டுமா? உணர்ச்சி மேலிடும் போது நாம் நம் உடைமை, அங்கீகாரம் அல்லது உயிரை கூட தியாகம் செய்ய நினைக்கலாம். அதற்கு ஒரு மதிப்பு நிச்சயம் உண்டு. ஆனால் ஒரு குறியீடு என்பதைக் கடந்து இச்செயல்களுக்கு அர்த்தம் இல்லை. எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப கொடுப்பதால் இந்துத்துவா படுகொலைகள் நின்று விடும் என எதிர்பார்ப்பது பத்தாம்பசலித்தனம்.
மதப்படுகொலைகள் மற்றும் மனித உரிமை குற்றங்களுக்கு எதிராய் சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைவது தான் சரியான போராட்ட முறைமை. ஒருவர் விருதை திரும்ப அளிப்பது துவக்கமாய், உணர்ச்சிகரமான இணைப்பு புள்ளியாய் இருக்கலாம். ஆனால் எழுத்தாளர்கள் மொத்தமாய் விருதுகளை திரும்ப அளிப்பது என்பது இப்போராட்டத்தை நீர்த்து போகவே வைக்கும். அடுத்த வாரத்துடன் மக்களூம் மீடியாவும் இதில் ஆர்வம் இழந்து விடுவார்கள். பத்து நாள் கழித்து நீங்கள் விருதை திரும்ப அளிப்பதாய் சொன்னால் ஒருவரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் நீங்கள் வாங்கிய போதே அவர்கள் பொருட்படுத்தவில்லையே!

ஆனால் எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக மீடியாவிலும் பொதுவெளியிலும் இந்துத்துவா அடக்குமுறைக்கு எதிராய் செயல்படுவதற்கு ஒரு நீடித்த தாக்கம் இருக்கும். இந்தியாவில் முற்போக்காளர்கள் ஒரு சிறிய கூட்டம் மட்டுமே. அவர்களுக்கு அதிகாரமோ மக்கள் பின்புலமோ குறைவு. ஆனால் சமூக மனசாட்சியிடம் தொடர்ந்து உரையாட அவர்களால் மட்டுமே முடியும். ஒருவேளை ஒருவர் தீக்குளிப்பது போன்றோ விருதை திரும்ப கொடுப்பது போன்றோ இவ்வுரையாடல் பரபரப்பாய் இருக்காது. ஆனால் நீதியை காப்பாற்றுவதற்கு நீண்ட கால போராட்டங்களும் உரையாடல்களும் தான் அவசியமே அன்றி தற்காலிக சலசலப்புகள் அல்ல. வா.கீதாவோ, அ.மார்க்ஸோ தீக்குளிக்கவோ நிர்வாண ஊர்வலம் செல்லவோ மாட்டார்கள். அவர்களுக்கு என்று ஒரு நீடித்த போராட்ட பாணியும் வரலாறும் உள்ளது. நாம் இன்று நின்று பேசும் களத்தை அவர்கள் உருவாக்கி அளித்தார்கள். ஒரு பரபரப்பின், திடீர் கோபத்தின் அடிப்படையில் கிளம்பும் சமூக போராட்டம் சீக்கிரமே பிசுபிசுத்துப் போகும். டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் போல. கடைசியில் எல்லாமே மீடியா யானைக்கு கவளங்களை ஊட்டும் வேடிக்கை செயலாக மாறி விடும்.

இடதுசாரி இயக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நிலப்பிரபுத்துவ குடும்பங்களை சேர்ந்தவர்களும் தான் கணிசமாய் கலந்து தீவிரமாய் போராடினார்கள். அவர்கள் தம் சொத்துக்கள் அனைத்தையும் கைவிட்டு நிலங்களை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கவில்லை. அப்படியான ஸ்டண்டுகளுக்கு நடைமுறையில் இடமிருப்பதில்லை. ஒரு அமைப்புக்குள் இருந்தபடி சிறுக சிறுக அதனுடன் உரையாடி அதை மாற்றுவது தான் நம்மால் சாத்தியமான ஒன்று. ஒரு சமூக பிரச்சனைக்கு மீடியா இரண்டு நாள் அவகாசம் மட்டுமே அளிக்கும். அதற்காய் இரண்டே நாளில் அது முடிந்து போகாது. இரண்டு நாட்களுக்குள் எல்லாரும் தத்தம் ஆடைகளை களைந்து, உயிரை துறந்து, விருதுகளையும், அங்கீகாரங்களயும் விட்டுக் கொடுத்து, குழந்தைகளை கிணற்றில் எறிந்து மீடியா ஆவேசத்தில் பங்கு கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் பத்தினி இல்லை என வற்புறுத்துவது என்ன அபத்தம்!

அதனால் நண்பர்களே சில நாட்களில் இப்பிரச்சனை முடிந்ததும் விருதை திரும்ப அளித்த எழுத்தாளர்கள் தம் சோலியை பார்க்க போய் விடுவார்கள். இந்துத்துவாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறவர்கள் எந்த சத்தமும் இன்றி அதை தொடர்ந்து நடத்துவார்கள். மதவாத அநீதிகள் அடுத்த நூற்றாண்டிலும் தொடரும். அப்போதும் அதற்கு எதிராய் காத்திரமாய் செயல்படுகிறவர்கள் இருந்து கொண்டிருப்பார்கள். நடுநடுவே ஸ்டண்ட் அடிப்பவர்களும் வருவார்கள். இது நிதர்சனம்.

நயன்தாரா செகலை தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவரும் எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன், அதன் உச்சமாக அவருடைய எதிர்ப்புணர்வை மிகத் தாழ்ந்து கிண்டலடித்திருக்கிறார். அவர் எழுதியது கீழே…

நயன்தாரா சாஹல்: சாகித்ய அகாதெமிக்கு திரும்ப கொடுக்க வேண்டிய ஒரு லட்ச ரூபா செக்கை ரெடி பண்ணிட்டீங்களா?
மேலாளர்: ரெடி பண்ணி வச்சிட்டேம்மா…

நயன்தாரா சாஹல்: எந்த நிதியில இருந்து எடுத்தீங்க? அடுத்த மாசம் அமெரிக்கா போக வச்சிருந்தேனே அந்த பணத்தில இருந்தா?

மேலாளர்: இல்லம்மா

நயன்தாரா சாஹல்: நம்மோட செல்ல நாய்களுக்கு பொரை வாங்க வச்சிருந்த காசில இருந்தா?

மேலாளர்: இல்லம்மா

நயன்தாரா சாஹல்: என்னோட ஒரு மாத பியூட்டில் பார்லர், ஸ்பா செலவில இருந்தா?

மேலாளர்: இல்லம்மா… என்ன கொஞ்சம் பேச விடுங்களேன். நீங்க செருப்பு வாங்க வச்சிருந்த காசில இருந்து கொஞ்சம் எடுத்துக் கிட்டேன். எப்படியும் உங்க கிட்ட நூத்துக்கும் மேல செருப்பு இருக்கே?

நயன்தாரா சாஹல்: குட். கணக்கு எப்பவுமே சரியா இருக்கணும். ஆத்தில போட்டாலும் அளந்து போடணும். அடுத்த வாரம் சிம்லாவில நம்மளோட சொகுசு பங்களாவில நடக்கிற பார்டிக்கு நம்முடைய பணக்கார எழுத்தாளர் சபையினரை இன்வைட் பண்றதுக்கு போகணும். அருந்ததி ராய், சல்மான் ரஷ்டி இவங்களோட செக்ரரிட்டரிங்க கிட்ட உடனே பேசுங்க. அவங்க வரதுன்னா நம்ம பங்களா சரிப்படாது. பைவ் ஸ்டார் ஹோட்டல் பார்க்கணுமே? ஏகப்பட்ட வேலை இருக்கு. அவங்களுக்கான பயண ஏற்பாடுகள், தங்குற ஏற்பாடுகள் எல்லாம் பண்ணியாச்சா?
மேலாளர்: பண்ணிட்டேம்மா.

நயன்தாரா சாஹல்: எவ்வளவு உத்தேசமான பட்ஜெட்?
மேலாளர்: பத்து லட்சமுன்னு ஒரு கணக்கு போட்டிருக்கேன். கூட மாட ஆகலாம். ரஷ்டி, ராய் எல்லாம் வராங்கன்னா கோடியை தாண்டலாம்.

நயன்தாரா சாஹல்: பத்து லட்சம் ஒரு மேட்டரில்ல. கோடின்னா கொஞ்சம் கையை கடிக்கும். பார்க்கலாம்.

மேலாளர்: நம்ம பார்டிக்கு வர விருந்தினர்களில கூடவே சாகித்ய் அகாதெமி வாங்கின நாலு பேரையும் சேர்த்துப்போம். ஏற்கனவே நம்மள எலைட்டிஸ்டுன்னு சொல்லிக்கிறாங்க.

நயன்தாரா: அப்படியா சரி தான். விருது வாங்கினவங்களில பிச்சைக்காரங்களா பார்த்து ஒரு பட்டியல் போடு. தமிழ்நாட்டில அந்த மாதிரி நிறைய பேர் கிடைப்பாங்க. எல்லாரையும் விருது திரும்ப கொடுக்கும்படியா அந்த பார்ட்டியின் போது கன்வின்ஸ் பண்ண போறேன். என் உபசரிப்பை பார்த்து கண்டிப்பா ஒத்துப்பாங்க

மேலாளர்: அம்மா அப்புறம் தம்பி ராகுல் எதிர்பாராத விதமா பார்ட்டியில கலந்துக்க பிரியப்படுதுங்க. அது அவருக்கு பரபரப்பும் பாப்புலாரிட்டியும் கொடுக்குமுன்னு பெரியம்மாவும் நினைக்கிறாங்க.

நயன்தாரா சாஹல்: ஏற்கனவே நான் அவங்க குரூப்புன்னு பேசிக்கிறாங்க. வேணும்னா அவனை சுடிதார் போட்டு பெண் வேஷத்தில வரச் சொல்லுங்க.

மேலாளர்: சரிம்மா. அவரு ராத்திரி ஏதாவது ஏழைங்க குடிசையில தங்கி சாப்டிட்டு பன்னெண்டு மணிக்கு மேலே நம்ம பார்ட்டியில ஜாயின் பண்ணிடுவாரு…

நயன்தாரா: சரி சரி பப்பிம்மா குலைக்குது. அதுக்கு பசிக்குதுன்னு நெனைக்கிறேன். செக்கை குடுத்துட்டு வரும் போது ரெண்டு கிலோ பிஞ்சு மாட்டுக் கறியா வாங்கிட்டு வாங்க. தடைக்கு எதிராக நம்ம பப்பிம்மாவோட குரல் ஓங்கி ஒலிக்கட்டும். அதோட ஊளை கேட்டு இந்த அரசாங்கத்தோட குலை நடுங்கும்!

Advertisements