பேசக் கற்றுக்கொள்ளுங்கள் ஸ்டாலின்…

stalin

‘முடியட்டும் விடியட்டும்’ என்று தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கினார் திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின். யார் பாணியை யார் பின்பற்றுவது என்கிற ஆரம்பக்கட்ட போஸ்டர் சர்ச்சைகளுக்கிடையே ஒபாமா, மோடியின் வெற்றிப் பாணியைப் பின்பற்றி ‘நமக்கு நாமே’ என்கிற பாணியைத் தேர்ந்தெடுத்தார்.

மு. க. ஸ்டாலின் ஏற்கனவே ஒரு அரசியல் பிரபலம், அவர் வீதியில் நடந்து வருவதை, ஆட்டோ ஓட்டுவதை, ஜிகிர்தண்டா சாப்பிடுவதை, சாமி கும்பிடுவதை, நடனம் ஆடுவதை மக்கள் கூட்டம் கூடி நின்று ரசித்தனர். சிலர் சமூக வலைத்தளங்களில் கொண்டாடினார்கள், சிலர் கலாய்த்தார்கள். முதல் இரண்டு நாட்கள் ஊடகங்கள் ‘வித்தியாசமான’ சந்திப்பு என்றன. அடுத்தடுத்த நாட்களில் சத்தத்தையே காணோம்.

திமுகவைச் சேர்ந்த இ.பரந்தாமன் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், “மு.க. ஸ்டாலின் பயணத்தை எந்தத் தொலைக்காட்சியும் ஒளிபரப்புவதில்லை. 12 நாட்களாக 11 மாவட்டங்களுக்குச் சென்று 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவர் மக்களைச் சந்தித்தார். கட்சிக்காரர்கள் கரை வேட்டியை கழற்றிவிட்டு, சாதாரணமாக மக்களோடு மக்களாக வந்தார் என்று கொண்டாடினார்கள். ஆனால் ஊடகங்களோ போனார், சென்றார், செய்தார் என்றுதான் செய்தி போட்டார்கள். அந்த நிகழ்வில் ஊடகங்கள் பங்கெடுக்கவில்லை. நடுநிலை ஊடகங்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எத்தனை மணித்துளிகள் மு. க. ஸ்டாலின் நிகழ்ச்சியை ஒளிப்பரப்பின? உங்களுடைய கனிமை, இரக்கத்தை நாங்கள் யாசகம் கேட்கவில்லை.

ஆனால் இதையே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜெயலலிதா சென்றபோது அவர் வீட்டு வாசலிலிருந்து கிளம்பியது முதல், ஒவ்வொருத் தெருவாகக் கடந்து ஆர்.கே.நகரை அடையும்வரை லைவ்வாக அத்தனையையும் ஒளிபரப்பினார்கள்” என்று கடுமையாக விமர்சனம் வைத்தார்.

மோலோட்டமாகப் பார்த்தால் பரந்தாமன் கேட்பது நியாயமாகத்தான் தோன்றும். ஆனால் பரபரப்புச் செய்திகளை விரும்பும் மக்களுக்கு எப்போதுமே காணக்கிடைக்காத ஜெயலலிதா தெருவுக்கு வந்தால் அதுதான் முக்கியச் செய்தி. அதைத்தான் ஊடகங்களும் செய்கின்றன. எங்கேயும் கேட்காத ஒன்றையும், யாரும் பார்க்காத ஒன்றை சொல்வதுதானே செய்தியின் தத்துவமே.

நமக்கு நாமே பயணத்தில் ஏன் மு.க.ஸ்டாலின் ஊடகங்களால் கவனிக்கப்படவில்லை? போனார், சென்றார், செய்தார் அவ்வளவுதான். ஓர் எதிர்க்கட்சிக்கு உண்டான எந்தவித அரசியலும் அவர் செய்யவில்லை. எதிர்க்கட்சிகள் சாத்வீக அரசியல் செய்து வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

“ஸ்டாலின் கன்னியாகுமரிக்குப் போனார், மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் இறந்ததன் தாக்கமாக மதுஒழிப்புக் குறித்து பேசினார். மதுரைக்கு வந்தார் ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்படும் என்றார். கோவைக்குப் போனார் மின்வெட்டுப் பற்றிப் பேசினார். இதில் என்ன புதுமை இருக்கிறது? மதுஒழிப்பு எல்லோரும் பேசி ஓய்ந்துவிட்ட விஷயம். ஆளும் கட்சியேகூட மதுவை ஒழிக்கத்தான் விரும்புகிறோம் என்று சொல்லிவிட்டது. அடுத்து ஜல்லிக்கட்டு, தமிழக முதலமைச்சர் ஏற்கனவே செய்வேன் என சொன்ன விஷயம்தான். அதுபோல மின்வெட்டு, திமுக ஆட்சியை இழந்ததே மின்வெட்டுப் பிரச்சினையால்தான். இப்படி அரைத்த மாவையே அரைப்பது அரியணைக் கனவை நிறைவேற்றுமா?” என்கிறார் அந்த மூத்த பத்திரிகையாளர்.

எளிமையான உடையும் பேச்சும் கூட்டத்தை வேண்டுமானால் கூட்டலாம். ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தாது. தாக்கம் ஏற்படுமானால் அதிரடி அரசியல் செய்யுங்கள் ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சி என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள், ஊழல் பேர்வழிகளுக்கு தேர்தல் சீட்டு இல்லை என்று அறிவியுங்கள். மதுவிலக்கு என்று சொல்லி, திமுகவினர் மதுஆலைகளை நடத்துகிறார்களே என்கிற கேள்விக்கு மழுப்பலாக பதில் சொல்லாதீர்கள். மதுஆலைகளை இழுத்து மூடச்சொல்லுங்கள். ஊழல் செய்கிறார்கள் என்று ஆளும் ஆட்சியை குறை சொன்னால், இன்னார் இந்த ஊழல் செய்தார், இதுதான் ஆதாரம் என்று மக்கள் முன் நீட்டுங்கள். ஊழல் அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டு, அதை ஆளுநரிடம் மனுவாகத்தரும் பாமகவுக்கும் காங்கிரஸுக்கும் உள்ள துணிச்சல் உங்களுக்கும் வேண்டும்தானே!

மோடி என்ன செய்தார், ஒபாமா என்ன செய்தார் என்பதைக் காப்பியடித்தால் சரியாகக் காப்பியடியுங்கள். அவர்கள் பேசிய பேச்சுதானே அவர்களை அரியணை ஏற்றியது. எனவே, பேசக் கற்றுக்கொள்ளுங்கள் ஸ்டாலின்!

 

Advertisements