மோடியால் அல்ல… மானமிகு எழுத்தாளர்களால் உயர்கிறது இந்தியா!

இந்தியா மிக நெருக்கடியான காலக்கட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒரு பக்கம் பகுத்தறிவு பேசிய அறிவாளர்கள் கொல்லப்படுகிறார்கள்; ஒரு பக்கம் உணவின் பெயரால் சாதாரண குடிமகன் கொல்லப்படுகிறார். இத்தனை நாளும் நாம் எதை உணவாக நினைத்துக் கொண்டிருந்தோமோ அதைச் சாப்பிடுவதேகூட நம் உயிரைப் பறிக்கலாம் என்கிற அச்சம் சாமானியனிடத்தில் ஏற்பட்டிருக்கிறது. எதைச் செய்யக்கூடாது, எதை எழுதக்கூடாது என்று நீட்டப்படுகிற பட்டியல் எழுத்தாளனிடம் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவுக்கு ‘இந்து’ என்கிற ஒற்றை அடையாளத்தைக் கொண்டுவருவதில் லட்சியத்தோடு இருக்கும் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து இந்துத்துவத்தை முன்நிறுத்தி வெறுப்பை விதைக்கும் அமைப்புகள் சுதந்திரமாக எதைச் செய்ய விரும்பினார்களோ அதைச் செய்ய ஆரம்பித்தார்கள். மதச்சிறுபான்மையினரை இத்தனை பிள்ளைகள்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுவதும் அவர்களின் வழிபாட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அரங்கேறின. தங்களுடைய கதைக் கட்டல்களுக்கும் பழமைவாத கருத்துகளுக்கும் எதிராக பகுத்தறிவால் கேள்வி கேட்டவர்களை எதிரிகள் என்றார்கள். கல்புர்கி என்ற பகுத்தறிவாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். பன்மைத்தன்மைக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து அவர்கள் எதையாவது பேசிக்கொண்டே இருந்தார்கள். அதற்கு ஊடக வெளிச்சமும் கிடைத்தது.

இறுதியாக அவர்கள், ஒடுக்கப்பட்ட-மதச் சிறுபான்மையினரின் உணவுப் பழக்கத்தில் குறை கண்டார்கள். உத்திரப் பிரதேசத்தில் முகமது அக்லக் என்ற முஸ்லிம் பெரியவர் அடித்தே கொல்லப்பட்டார். சர்வதேச சமூகம் இந்தியாவை இழிவாகப் பார்த்தது.

இதையும் படியுங்கள்:“வெறுப்பை வளரவிட்டு, இந்தியாவை அழிக்கிறார்கள்”

“நான் தலைமையேற்றப் பிறகுதான் இந்தியா வளர்ச்சிக்கான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது” என்று செல்லுகிற தேசமெங்கும் முழங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தன் சகாக்கள் செய்கிற அரசியலில் உடன்பாடு இருக்கலாம். அதுவே இவரின் எதிர்ப்பார்ப்புமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பிரதமராக அதைச் செய்யக்கூடாது என்பதே ஜனநாயகத்தின்பால் நம்பிக்கைக் கொண்டோர் சொல்கிறார்கள்.

இந்து தீவிரவாத குழுக்களின் பங்கு பகுத்தறிவாளர்கள் கொலையில் தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்ட பின்னும் அவர் மவுனம் காக்கிறது. அடித்தே கொல்லப்பட்ட ஒருவரின் மரணம் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களை எத்தகைய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பார்கள்? அவர்களுக்கு இந்திய நாட்டின் பிரதமராக சில வார்த்தைகளை ஆறுதலாக கூறியிருக்கலாமே? பிரதமர் யாரைக் காப்பாற்ற மவுனம் காக்கிறார் என்று கர்நாடக இசைப் பாடகர் கேட்பது எத்தனை அர்த்தங்கள் பொதிந்தது.

இந்நிலையில்தான் எழுத்தாளர்கள் என்கிற சமூகத்தின் மனசாட்சி கையில் எடுத்திருக்கும் ஆயுதம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் முதன்மையான இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருதை வரிசையாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, பல மொழியில் எழுதும் எழுத்தாளர்கள், திரும்ப அளித்துக்கொண்டிருக்கிறார்கள். காந்தியின் பேரனும் ஆய்வறிஞருமான கோபாலகிருஷ்ண காந்தி, இதை ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல்’ என்று இதை வர்ணிக்கிறார். மேலும் அவர்,

“முகமது அக்லக் போன்ற மதசிறுபான்மையினரும், பகுத்தறிவாளர்களும் ‘மற்றவர்கள்’ என்கிற வகையின் கீழ் வருகிறார்கள். அவர்கள் ‘மற்றவர்கள்’ என்றா காரணத்தாலே கொல்லப்பட்டவர்கள்.

இதற்கு முன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப அளித்ததில்லை. இதைப் புதிய எழுச்சியாகப் பார்க்கிறேன். மேலும் பல எழுத்தாளர்கள் தங்களுடைய விருதுகளை திரும்ப ஒப்படைத்தால், இந்தப் போராட்டம் இன்னும் மேலும் வலுப்பெறும்” என்கிறார் இந்தியா டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில்.

இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்களைக் கண்டித்தும் அதைப் பற்றி வாய்த்திறக்காத பிரதமரைக் கண்டித்தும் அரசின் செயல்களைக் கண்டிக்காத சாகித்ய அகாடமி போன்ற தன்னிச்சையான அரசு அமைப்புகளின் தலைவர்களைக் கண்டித்தும் 15க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கோபம் என்று சொல்வதைவிட, பேனாக்களின் அறச்சீற்றம் என்றும் இதைச் சொல்லலாம்.

மோடி சொல்வதுபோல ஊழலால் மட்டும் இந்தியா தலைகுனிவைச் சந்திக்கவில்லை. அடிப்படை உரிமையை நசுக்கும் ஒற்றைத் தன்மையை நிறுவ முயலும் பயங்கரவாத செயல்களும் தலைக்குனிவை ஏற்படுத்துபவையே. தன்னால் இந்தியா உயர்வதாக மோடி நம்புகிறார். உண்மையில், அறச்சீற்றம் மிக்க எழுத்தாளர்களால்தான் இந்தியா ஒளிர்கிறது!

Advertisements