“கோகுல்ராஜ் கொலை விசாரணை சரியான திசையில்” : சிபிசிஐடி அதிகாரி

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி பள்ளிபாளையம் வெள்ளிக்குட்டை என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்தார். இதுதொடர்பாக, கடந்த 3 மாதங்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் முதல் எதிரியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் (35) தலைமறைவாக இருந்தார்.

இதைப் படியுங்கள்: யுவராஜின் லட்சியம் நிறைவேறியது…எப்படி?

இந்த வழக்கை விசாரித்த திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுப் பிரியா கடந்த மாதம் 18-ஆம் தேதி சந்தேகத்துக்கு இடமான வகையில் மரணமடைந்தார். இதையடுத்து, விஷ்ணுப் பிரியா மரண வழக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கும் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே யுவராஜ், விஷ்ணுப் பிரியா கொலைக்கு மேல் அதிகாரிகளின் அழுத்தமே காரணம் என்றும் கோகுல்ராஜ் கொலையில் தனக்கு தொடர்பில்லை என்றும் வாட்ஸ் அப் மூலமாகவும் ஊடகங்கள் வழியாகவும் பேசி வந்தார்.

யுவராஜைப் பிடிக்க சிபிசிஐடி போலீஸார் மூன்று தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.பி. நாகஜோதி முன்னிலையில் யுவராஜ் சரணடைந்தார். பின்னர், அவர் நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் 2-ஆவது முக்கியக் எதிரியாகச் சேர்க்கப்பட்டிருந்த யுவராஜின் கார் ஓட்டுநர் சங்ககிரியைச் சேர்ந்த அருண் (21), கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.

அவரை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரணை செய்ய மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கார் ஓட்டுநர் அருணை மூன்று நாள் சிபிசிஐடி போலீஸார் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை தொடர்பாக யுவராஜிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். வெள்ளிக்கிழமை காலை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு அழைத்துச் சென்று, கோகுல்ராஜ் மற்றும் அவருடன் வந்த பெண் கோயிலில் இருந்தபோது யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கோகுல்ராஜை அழைத்துச் செல்லும் விடியோ காட்சிகளைக் காட்டி விசாரணை நடத்தினர். மேலும், கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட பள்ளிபாளையம், கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை ஆறு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது.

இந்நிலையில் கோகுல்ராஜ் கொலையை சிபிசிஐடி விசாரணையின்போது யுவராஜ் ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை யுவராஜின் வழக்கறிஞர் பழ.ஆனந்த், மறுத்துள்ளார். இது போன்ற தகவல்களை வேண்டுமென்றே சி.பி.சி.ஐ.டி போலீசார் கசியவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே கோகுல்ராஜின் சகோதரர் கலைச்செல்வன், அவரது தாத்தா கணேசன் ஆகியோரிடம் சிபிசிஐடி எஸ்.பி. நாகஜோதி தலைமையிலான குழு விசாரணை நடத்தி இருக்கிறது.  கலைச்செல்வனைத் தொடர்பு கொண்டு விசாரணைக் குறித்து கேட்டபோது, “விசாரணை எல்லாம் எதுவும் இல்லை. எஸ்.பி. நாகஜோதி, கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது. விரைவில் உண்மையைக் கண்டுபிடித்துவிடுவோம் என்று சொன்னார். மற்றபடி, எங்களை எதுவும் விசாரிக்கவில்லை” என்றார். கோகுல்ராஜ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என்று வழக்குத் தொடுப்பதாக சொன்னது குறித்து கேட்டபோது, “இப்போதைக்கு அதை ஒத்திவைத்திருக்கிறோம். விசாரணையின் முடிவைப் பொறுத்து பிறகு, அதுகுறித்து யோசிக்கலாம்” என்றார்.

 

Advertisements