நீதித்துறையின் சுதந்திரத்தை நிலைநிறுத்திய தீர்ப்பு!

supremecourt

இந்திய நாடாளுமன்றம் ஏகமனதாக உருவாக்கிய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பைச் சொல்லியிருக்கிறது.

நீதிபதிகள் நியமனத்திற்கான தேசிய சட்ட ஆணையம் அமைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வெள்ளிக்கிழமை மிக முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது. நீதிபதிகள் J.S. கெஹர், மதன் B. லோகூர், சலமேஷ்வர், குரியன் ஜோசஃப், A.K. கோயல் ஆகியோர் அடங்கிய ஐந்து நபர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

அதில் “நீதிபதிகள் நியமனத்திற்கான தேசிய ஆணையத்தை உருவாக்கும் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நாடாளுமன்றம் ஏகமனதாக உருவாக்கிய இந்த நியமன ஆணையம் சட்டவிரோதமானது. நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது. நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறை என்பது 99-வது அரசமைப்பு திருத்தச் சட்டத்திற்கு முன்பிருந்தே வழக்கத்தில் உள்ளது. எனவே, தற்போது நடைமுறையில் இருக்கும் கொலிஜியம் முறையே தொடர்ந்து அமலில் இருக்கும்” என்று தீர்ப்பளித்தனர். மேலும் இந்த வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றக்கோரிய மத்திய அரசின் மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்கவும், நீதிபதிகள் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் போன்றவற்றை இறுதி செய்யவும், கொலிஜியம் எனப்படும் தேர்வுக்குழு முறை பின்பற்றப்பட்டு வந்தது.

நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதும் இந்த முறையை மாற்றி, நீதிபதிகள் நியமனத்திற்கான தேசிய ஆணையத்தை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தது. முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி லோதா, தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச். எல்.தத்து உள்பட பல நீதிபதிகள் இந்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இந்த சட்டத்திற்கு எதிராகவும், சட்டத்திற்கு அரசியல் அங்கீகாரம் அளிக்கும் சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும், உச்சநீதிமன்றத்தில் பதிவு பெற்ற வழக்கறிஞர்கள் சங்கம், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சில தனிநபர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மனுதாரர்கள் சார்பாக பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமனும், மத்திய அரசு சார்பாக தலைமை வழக்கறிஞர் முகல் ரோஹத்கியும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பு குறித்து உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துருவிடம் இப்போது.காம் கருத்து கேட்டது ‘இது சரியல்ல’ என்று ஒற்றை வாக்கியத்தில் முடித்துக்கொண்டார் அவர்.

வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், இந்தத் தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். எந்த ஒரு அமைப்பிலும் தங்களுடைய சுதந்திரத்தில் தலையீடு வருவதை விரும்பமாட்டார்கள் என்று சொன்னார்.

மேலும் அவர், “கொலிஜியம் முறைக்கு மாற்றாக மத்திய அரசாங்கம் கொண்டு வந்த நியமன ஆணையத்தில் பிரபலமானவர்கள் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது. அந்தப் பிரபலமானவர்கள் யார் என்பதும் அவர்களுடைய பின்னணி என்ன என்பது பற்றியும் நமக்குத் தெரியாது. இந்த ஆணையத்துக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் தலைமை வகிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. இதில் இரண்டு பேர் அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்பதும் இது நீதித்துறையின் செயல்பாட்டில் தலையிடுவதாக இருக்கும் என்பதும் நீதித்துறை சார்ந்தவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பிலும் நீதிபதிகள் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

அரசியல் தலையீடு அதிகமாக இருந்த 90களில் கொண்டுவரப்பட்ட கொலிஜியம் முறை, ஆரம்பித்த காலக்கட்டத்தில் மிகச் சரியாகவே இயங்கியது. நல்ல நீதிபதிகளை நீதித்துறையில் இருக்கிறவர்கள்தான் கண்டுபிடிக்க முடியும் என்பதுபோல பல நல்ல நீதிபதிகள் கிடைத்தார்கள். போகப்போக எல்லா அமைப்புகளும் புரையோடிப் போவதுபோல நீதித்துறை நியமனங்களிலும் பல கோளாறு ஏற்பட ஆரம்பித்தது.

வேண்டியவர்களை நியமிப்பது, நீதிபதி பதவிக்காக லாபி செய்வது, சாதி, மதம், பணம் போன்று பல்வேறு காரணங்களால் கொலிஜியம் முறையில் நீதிபதிகளை நியமிக்கு முறையில் குறைகள் தோன்ற ஆரம்பித்தன.
இந்தக் குறைகளைக் கருத்தில் கொண்டே வரும் நவம்பர் மாதம் மீண்டும் கூடி கொலிஜியம் முறையை எப்படி மேம்படுத்தலாம் என்று பேச இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். அந்தவகையில் இந்தத் தீர்ப்பு முக்கியமானது, வரவேற்கக்கூடியது” என்கிறார் மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

மத்திய சட்ட அமைச்சர் சதானந்த் கவுடா இந்தத் தீர்ப்பை மிகவும் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீட்டைக் கொண்டு வந்து அதைச் சட்டமாகவும் இயற்றி பல தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது மோடி அரசு. அந்தவகையில் இந்தத் தீர்வு நீதிமன்றத்தின் சுதந்திரத்தை நிலைநிறுத்தியிருப்பதாக பலரும் வரவேற்றிருக்கிறார்கள்.

 

Advertisements