பீகார் தேர்தல்: எடுபடாத மோடி மந்திரம்!

modi in bihar

நரேந்திர மோடியை முன்வைத்து பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்த பாஜக, அடுத்தடுத்து வந்த மாநில தேர்தல்களில் வெல்லும் முனைப்புடன் இருக்கிறது. பாஜக ஏற்கனவே பலத்துடன் இருந்த மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வெற்றி பெற முடிந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கணிசமான வெற்றியைப் பெற்று கூட்டணி ஆட்சியமைத்திருக்கிறது. மத்தியில் பெரும்பான்மைக்கு வித்திட்ட மோடி மந்திரத்தைப் பயன்படுத்தி டெல்லியில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என பாஜக கணக்குப் போட்டது. ஆம் ஆத்மியில் இருந்த கிரண் பேடியை அழைத்து வந்து, பாஜக முதல்வராக முன்நிறுத்தி வாக்கு கேட்ட போதும் பாஜகவுக்கு கடும் தோல்வியே மிஞ்சியது. மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு கிடைத்த மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது இது.

அதனால் பீகார் தேர்தலைப் பொறுத்தவரை வென்றாக வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது பாஜக. தேர்தல் வருவதற்கு சுமார் ஒரு வருட காலத்துக்கு முன்பே தனது தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது பாஜக தலைமை. பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மன்ஜிஹியை முன்வைத்து ஐக்கிய ஜனதா தளத்தை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டது. இறுதியில் ஜிதன் ராம் பதவி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் முதல்வரானார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார். ஜிதன் ராம், இந்துஸ்தானி அவாம் மோட்சா என்ற புதுக்கட்சியைத் தொடங்கி பாஜக கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம் என்று அறிவித்தார்.

தேர்தல் அறிவிப்பு வரும் முன்பே அரசியல் எதிரிகளாக இருந்த லாலு பிரசாத்தும், நிதிஷ் குமாரும் ஒன்றிணைந்து பீகார் தேர்தலை சந்திப்பதாக அறிவித்தார்கள். இதில் காங்கிரஸும் சேர்ந்துகொள்வதாக அறிவித்தது. இந்த மகா கூட்டணியால் பாஜகவுக்கு வேலை கூடியது. பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடுகளுக்கு அடுத்தபடியாக பயணம் போகும் மாநிலமாக பீகார் ஆனது. “காட்டு தர்பாருக்கு முற்றுப் புள்ளி வைப்போம்” என்று அறைகூவல் விடுத்தார் பிரதமர். அரசியல் காரணங்களால் பீகாரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, வளர்ச்சிப் பணிகளுக்காக பீகாருக்கு ரூ.50 ஆயிரம் கோடியை அளிப்பதாகச் சொன்னார் பிரதமர். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசு ஆட்சியில் இருந்தால் மக்கள் நலப்பணிகள் விரைவாக நடக்கும் என்றார்.

“மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ன சொன்னார், கடந்த ஒன்றரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் என்ன செய்திருக்கிறார் என்பதை நாட்டு மக்கள் பார்த்து வருகிறார். வளர்ச்சி என்பது பணக்காரர்களுக்கானதாக இருக்கிறது, ஏழைகளை அது வஞ்சித்துக் கொண்டிருக்கிறது” என்று சனிக்கிழமை நடந்த பீகார் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. எனவே, மோடியின் ‘வளர்ச்சி’ மந்திரமும் பீகாரில் எடுபடுவதாகத் தெரியவில்லை.

அதோடு, பத்தாண்டு கால நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசின் மீது பீகார் மக்களுக்கு அதிருப்தி எதுவும் இல்லை என்பதும் நிதிஷ் குமார் மீது தனிப்பட்ட முறையில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்பதும் பாஜக கூட்டணி, பீகார் தேர்தலை எதை வைத்து முன்னெடுப்பது என்பதில் குழம்பித் தவிக்கிறது. அதனால்தான் பீகாரின் முன்னாள் முதல்வர் லாலுவின் ஊழல் விவகாரங்களை கிளறி மோடி முதல்கொண்டு அனைத்து தலைவர்களும் காட்டமாக பிரச்சார மேடையில் பேசி வருகிறார்கள். நிதிஷ் குமார்தான் முதல்வர் வேட்பாளர், அவர்தான் ஆட்சியை வழிநடத்தப்போகிறார் என்ற தெளிவான அறிவிப்பின் பின்னால் அந்தக் குற்றச்சாட்டுகளும் பலமிழந்து விட்டன.

உ.பி. தாத்ரியில் நடந்த படுகொலையை முன்வைத்து மோடி கையில் எடுத்த மாட்டிறைச்சி அரசியலும் அவருக்கு பூமராங் ஆக திரும்பி வந்தது. லாலு இந்துக்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்றார், அதற்கு மோடி, லாலு இந்துக்களை கேவலப்படுத்துகிறார் என்றார். தலித்துகளையும் முஸ்லிம்களையும் கணிசமாகக் கொண்ட பீகாரின் பிரிவினையைத் தூண்டுவதாக அமைந்தது மோடியின் பேச்சு.

தொடக்கத்தில் வந்த கருத்துக் கணிப்புகள் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்லின. அடுத்தடுத்த கருத்துக் கணிப்புகள் மீண்டும் நிதிஷ் தலைமையே ஆட்சியமைக்கும் என்கின்றன. பாஜக கூட்டணியின் முதல்வர் யார் என்கிற தெளிவான அறிவிப்பு இன்றி களம் இறங்கியதும் பாஜக கூட்டணியின் பின்னடைவுக்கான காரணங்களாக சொல்லப்படுகின்றன.

இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கும் நிலையில் அடுத்தக் கட்ட வாக்குப்பதிவு பிரச்சாரத்தில் மோடி பங்கேற்பதாக இருந்த பிரச்சாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. பாஜக எம்.பி.யும் நடிகருமான சத்ருஹன் சின்ஹா, பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகரான மோடியின் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ட்விட்டரில் பகிரங்கமாகப் பேசியிருக்கிறார்.

முதல் இரண்டு கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகு தேர்தல் பிரச்சார பேனர்களில் மோடி-அமித் ஷா படங்களுடன் மாநில பாஜகவினர் படங்களை அச்சிட்டிருப்பதும் மோடியின் தாரக மந்திரமான ஆப் கி பார் மோடி சர்க்கார் என்பது நீக்கப்பட்டு, மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியின் மூலம் வேகமான வளர்ச்சி காணுவோம் என்கிற வாசகங்கள் இடம் பெற்றிருப்பதும் தேசிய-மாநில கட்சித் தலைமைக்குள் சுமுக உறவில்லை என்பதைக் காட்டுகின்றன. மோடியை அளவுக்கு மீறி முன்னிலைப்படுத்திவிட்டதாகக் கருதுவதாகவும் மாநில பாஜகவினர் சொல்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிதிஷ் குமார், தன்னுடைய ஆட்சியில் இதுவரை பீகார் கண்டிருக்கும் வளர்ச்சியை மீண்டும் ஆட்சி அமைத்தால் அதிகப் படுத்துவேன் என்கிறார். பெண்களை முன்வைத்து அவர் செய்யும் பிரச்சாரம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மாணவிகளுக்கு இலவச சைக்கிள், பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு சரிபாதி இட ஒதுக்கீடு என பல திட்டங்களை முன்வைத்து பெண்களை கவரும் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் நிதிஷ்.

“பீகார் முழுக்க பயணித்துக் கொண்டிருக்கிறேன். மக்கள் மத்தியிலும் ஏன் பாஜகவினருக்குக் கூட நிதிஷ்குமார் பற்றி எதிர்மறையாக சொல்ல எதுமில்லை. பீகார் மக்கள் அவரை வணக்கத்துக்கு உரியவராகவே பார்க்கிறார்கள்” என்கிறார் பத்திரிகையாளர் ஸ்மித்தா குப்தா.

 

Advertisements