சமாளிக்கும் பாஜக : தூண்டிவிடும் ஆர்எஸ்எஸ்

மதத்தின் பெயரால் நாட்டில் அதிகரித்துவரும் பதற்றமான சூழ்நிலையை அரசுக்கு உணர்த்தும்பொருட்டு கிட்டத்தட்ட 50 எழுத்தாளர்கள் தங்களுடைய விருதுகளை திரும்ப அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு 150 நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் இணைந்திருக்கும் ‘பென்’ அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, தாத்ரி படுகொலைக்கும் எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களுக்கும் வருத்தம் தெரிவித்தார்.

சமாளிக்கும் பாஜக

ஆனால் பாஜகவினர் விடுவதாகத் தெரியவில்லை. ஹரியாணா மாநில முதல் மனோகர் கத்தார், ‘முஸ்லிம் இந்தியாவில் வாழ வேண்டுமானால் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது’ என்று கூறினார். பீகார் தேர்தலில் பாஜக பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்குமோ என்கிற அச்சத்தில் இருந்த பாஜக தலைமைக்கு இந்தப் பேச்சுக்கள் மீண்டும் தலைவலியாக அமைந்தன.

பாஜக தலைவர் அமித் ஷா, இதைச் சமாளிக்கும் விதமாக, மனோகர் கத்தார், பாஜக எம்பி ஷாக்‌ஷி மகராஜ், மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான், பாஜக எம் எல் ஏ சங்கீத் சாம் ஆகியோரிடம் மாட்டிறைச்சி தொடர்பாக அவர்கள் பேசிய கருத்துக்கு விளக்கம் அளிக்கும்படி கேட்டிருக்கிறார். மேலும் அவர், பாஜக முன்னெடுக்கும் வளர்ச்சி அரசியலை இந்தப் பேச்சுக்கள் மறைப்பதாக பேசியிருக்கிறார்.

தூண்டிவிடும் ஆர்எஸ்எஸ்

இந்நிலையில் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி, உத்திரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் அடித்துக் கொல்லப்பட்ட முகமது அக்லக்கின் படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் “பசுவதை செய்வோரைக் கொல்லச் சொல்லி வேதங்கள் ஆணையிட்டுள்ளன” என்று ஆர்எஸ்எஸ் இதழான ‘பாஞ்ச சன்யா’வில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த இதழின் ஆசிரியர் ஹிதேஷ் சங்கர் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையில், இந்துக்களை முஸ்லிம்களாக மாற்றும் பொருட்டே மாட்டிறைச்சி உண்பது முஸ்லிம்களால் பரப்படுகிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் மூன்று, நான்கு தலைமுறைக்கு முன் இந்துக்களாக இருந்தவர்கள்தான். மாடுகளை பலியிடுபவர்கள் பாவிகளாக வேதங்களில் சொல்லப்படுகிறார்கள். நியூட்டனின் மூன்றாம் விதி சொல்வதுபோல ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு. அக்லக் கொல்லப்பட்டது இயற்கையான எதிர்வினையால் நடந்தது; அவர் செய்த பாவத்துக்கு பலியாக்கப்பட்டார்” என்று கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

தொடரும் சம்பவங்கள்

மாடுகளை கடத்தியதாகக் கூறி, ஜமீத் அகமது பட் என்ற 24 வயது இளைஞர் பஜ்ரங் தள் என்ற அமைப்பினரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் காஷ்மீரில் நடந்திருக்கிறது. இதேபோல் ஹிமாச்சல் பிரதேசத்தில் நோமன் என்ற 22 வயது இளைஞரும் மாடுகளைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.

மாட்டிறைச்சி அரசியல் வேகமாக ‘வளர்ச்சி’ கண்டு வருவதையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன. அதே சமயத்தில் மோடி பிம்பமும் வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

 

Advertisements