பெண்களே இல்லாத நடிகர் சங்க தலைமை!

பத்தாண்டுகளுக்குப் பின் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகள் பட்டியல், முக்கியமான விஷயம் நம்முன் எழுகிறது. பெண் சமத்துவமின்மையும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல் அதிகம் நடக்கும் துறைகளில் சினிமாத் துறையும் ஒன்று. அப்படியிருக்க பெண்ணின் குரலை பதிவு செய்யும் வகையில் ஒரு பெண்கூட தலைவர், பொதுச்செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் போன்ற முக்கியமான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்தப் பதவிகளுக்கு இந்த இரண்டு அணியின் சார்பிலும் எந்த பெண்களும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிதாத தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விவரம்:

நாசர் – தலைவர்

விஷால் – பொதுச்செயலாளர்

பொருளாளர் – கார்த்தி

துணைத் தலைவர்கள் – பொன்வண்ணன், கருணாஸ்

செயற்குழு உறுப்பினர்கள்

அயூப்கான்
கோவை சரளா
சங்கீதா
பால தண்டபாணி
பூச்சிமுருகன்
ராஜேஷ்
சோனியா
ஜுனியர் பாலையா
நந்தா
ரமணா
தளபதி தினேஷ்
குட்டி பத்மினி
பசுபதி
உதயா
பிரேம்குமார்
ஸ்ரீமன்
விக்னேஷ்
பிரகாஷ்
சிவகாமி
ராம்கி
நிரோஷா
நளினி
டி.பி.கஜேந்திரன்

24 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களில் ஏழு பேர் மட்டுமே பெண்கள். மூன்றில் ஒரு பங்கு. நடிகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரு அமைப்பில் அதிகமாக பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்படும் நடிகைகளின் குரல்களை ஒலிக்கும் பெண் பிரதிநிதிகளின் பங்கு ஏன் குறைவாக இருக்கிறது? நடிகை குஷ்பூவிடம் இப்போது.காம் இதுகுறித்து கேட்டது…

“முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான நடிகைகள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வந்திருந்தார்கள். இதுவே மாற்றத்துக்குரிய விஷயம்தான். சங்கீதா, கோவை சரளா மாதிரியான ஆட்களெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் நிச்சயம் நடிகைகளின் பிரச்சினைகளைப் பேசுவார்கள். தலைமை பொறுப்புக்கு வந்திருக்கக்கூடியவர்களும் பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, செயலாற்றக்கூடியவர்களே. நான் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதால் நடிகர் சங்க தலைமை பதவிகளுக்குப் போட்டியிடவில்லை. அரசியல் கட்சி சாராமல் இருந்திருந்தால் நிச்சயம் நான் தலைமை பதவிக்குப் போட்டியிட்டிருப்பேன்” என்கிறார்.

குஷ்பூ சொல்வதுபோல நடிகைகள் பலர் வாக்களிக்க வந்திருந்தாலும் முன்னணி நடிகைகள் எவரும் வாக்களிக்க வரவில்லை. நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, ஸ்ருதி ஹாசன், காஜல் அகர்வால், ஹன்ஷிகா, தமன்னா, அனுஷ்கா, எமி ஜாக்சன் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவில்லை. ஆண் நடிகர்களுக்கு சமமான சம்பளம் வேண்டும் என்கிற கோரிக்கைகளை அவ்வவ்போது சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களின் வாயிலாகவும் எழுப்பிவரும் இவர்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள நடிகர் சங்கம் என்கிற அமைப்பை பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஆனால் நடிகையும் இயக்குநருமான லஷ்மி ராமகிருஷ்ணன் மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார்..

“நிச்சயம் சம்பள வித்தியாசத்தை நடிகர் சங்கத்தால் தீர்த்து வைக்க முடியாது. அதுதானாக எல்லா மட்டத்திலும் நடக்க வேண்டும். மெல்ல அந்த மாற்றம் வந்துக்கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். பாலிவுட்டில் வித்யா பாலனை பெண் சல்மான் கான் என்று அழைக்கிறார்கள். கேரளத்தில் மஞ்சு வாரியருக்கென்று தனிப்பட்ட மார்க்கெட் இருக்கிறது. தமிழில் ‘36 வயதினிலே’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நயன்தாரா நடித்த ‘மாயா’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் அனுஷ்காவுக்கு தவிர்க்க முடியாத இடம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது பெண்கள் சார்ந்த கதை இருந்தால் சொல்லுங்கள் என்று தயாரிப்பாளர்களே கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. இதையும் பெண்களுக்கு சம வாய்ப்பை, சம பங்கை அளிக்கும் விஷயமாகக் கருதலாம்” என்றவரிடம் நடிகர் சங்கப் பதவிகளில் பெண்களின் பங்களிப்பு வேண்டாம் என்கிறீர்களா? என்றோம்.

“நாசர் போன்ற நல்ல மனிதர்கள் தலைமை பொறுப்புகளில் இருக்கும்போது, பெண்களின் குரல்களுக்கு மதிப்பிருக்கும் என்று நம்புகிறோம். இனி வரும்காலங்களில் நடிகர் சங்கத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். அது நடக்கும் என்றும் நம்புகிறேன்” என்கிறார் லட்சுமி.