’மதராஸிகளை அடித்து விரட்டுங்கள்’

shiv sena

திங்கள் கிழமை இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்துக்கு வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணையாளர் மற்றும் பயிற்சியாளரை, அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டி வெளியேற்றியிருக்கிறார்கள் சிவ சேனா கட்சியினர். பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியை பாட அனுமதிக்க மாட்டோம் என மிரட்டல் விடுத்தது, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் புத்தக வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த சுதீந்திர குல்கர்னி மீது கருப்பு மைவீசியது என சிவ சேனா தன்னுடைய ‘பழைய’ வெறுப்பு அரசியலை மீண்டும் வெளியே விட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவ சேனாவின் ஆதரவில் ஆட்சியமைத்திருக்கும் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் அதன் பேரில் தன் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும் வெறுப்பு அரசியல் மீண்டும் கைக்கொடுக்கும் என நம்புகிறது சிவ சேனா. சிவ சேனாவுக்கு வெறுப்பு அரசியல் என்பது புதிதல்ல, சிவா சேனா கட்சி ஊறி வளர்ந்தே இந்த வெறுப்பை அடித்தளமாக வைத்துதான்.

* 1966-ஆம் ஆண்டு கார்ட்டூனிஸ்டாக இருந்த பால் தார்க்கரேவால் தொடங்கப்பட்டது சிவ சேனா. வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மகாராஷ்டிரத்தில் தொழில் தொடங்கவும் மகாராஷ்டிரா, மராட்டியர்களுக்கே என்கிற கோஷத்தை முன்வைத்து சிவ சேனாவைத் தொடங்கினார் தார்க்கரே.

* அக்டோபர் 30, 1966ல் சிவாஜி பார்க்கில் நடந்த தசரா விழாவில் பால் தார்க்கரே மண்ணின் மைந்தர்களே, தென்னிந்தியர்களையும் மதராஸிகளையும் அடித்து விரட்டுங்கள் என்று பேசினார். விழா முடிவில் கர்நாடகவினர் நடத்திய உடுப்பி ஓட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

* கம்யூனிஸ்டுகளையும் தலித்துகளையும் சிவ சேனா விட்டுவைக்கவில்லை. 1960களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பலவாய்ந்ததாக மராட்டியத்தில் இருந்தது. இந்தக் கட்சியைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர் ஆச்சார்யா அத்ரே பங்கேற்ற ஒரு கூட்டத்தில் அவர் மீது செருப்புகளை வீசினர் சிவா சேனாவினர்.

* 1970-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைப் பதவியில் கிருஷ்ண தேசாயை அடித்தே கொன்றனர் சிவ சேனாவினர். இப்படி அடித்துக் கொன்றவர்களை மேடைப் போட்டுப் பாராட்டினார் பால் தார்க்கரே. ஆனால் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

* தார்க்கரேவின் இனப் பற்று பிறகு மதப்பற்றாக விரிவடைந்தது. 1967-ஆம் ஆண்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்திவந்த இடத்தில், அதைப் பொதுவான இடம் என்று கூறி காவி கொடிபிடித்து இந்து-முஸ்லிம் கலவரமாக மாற்றினார் தார்க்கரே.

* தார்க்கரே முட்டிவிட்ட தீ 1970-ஆம் ஆண்டில் இந்து-முஸ்லிம் கலவரமாக வெடித்து இருதரப்பிலும் 250 பேர் பலிவாங்கியது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மும்பையின் புறநகர் பகுதியான பிவாண்டி என்ற இடத்தில் மராட்டிய மன்னன் சிவாஜி பிறந்த நாள் ஊர்வலம் நடத்த முயன்றால் உண்டானது இந்தக் கலவரம்.

* 1992-93களில் மும்பையில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரம் சிவ சேனாவின் பெயரை உலகறியச் செய்தது. சுமார் 900 உயிர்களை பலிவாங்கிய இந்தக் கலவரம் குறித்து விசாரித்த ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன், முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வளரவிட்டு இத்தனை பேரை பலிவாங்கியதற்கு சிவ சேனா காரணம் என அறிக்கை தந்தது.

* 1991 மற்றும் 1999- ஆம் ஆண்டுகளில் காஷ்மீரில் பதற்றம் நிலவிய சூழலில் நடைபெறவிருந்த இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நிறுத்தும்படி கிரிக்கெட் மைதானத்துக்குள் புகுந்து சேதப்படுத்தினர் சிவா சேனா ஆட்கள்.

Advertisements