”அருண் ஜேட்லி இந்துவே அல்ல”

arun-jaitley

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும் ஆதரவளித்த சிவ சேனா கட்சிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியை பாட அனுமதிக்க மாட்டோம் என மிரட்டல் விடுத்தது, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் புத்தக வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த சுதீந்திர குல்கர்னி மீது கருப்பு மைவீசியது என சிவ சேனா கட்சியினர் கையில் எடுத்திருக்கும் வெறுப்பு அரசியல் மாநில, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், திங்கள் கிழமை இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்துக்கு வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணையாளர் மற்றும் பயிற்சியாளரை, அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டி வெளியேற்றியிருக்கிறார்கள் சிவ சேனா கட்சியினர்.

இதுகுறித்து கடுமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி. “கருத்து வெளிப்பாடு என்ற பெயரில் வன்முறையைக் கையாளுபவர்கள், தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நாட்டின் ஜனநாயகம் மேம்படுமா என்பதையும் இந்தியாவின் மீது உலக நாடுகள் வைத்துள்ள நன்மதிப்பு குறையுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாட்டின் நலன் குறித்து அக்கறை கொள்ளும் நல்லெண்ணம் கொண்டவர்கள் அனைவரும், வன்முறை நடவடிக்கைகளை அரங்கேற்றுவதிலிருந்து விலகி இருக்க வேண்டும். மாறுபட்ட கருத்துகளின் மீதான சகிப்புத்தன்மை குறைந்து வருவதும், வன்முறை நடவடிக்கைகள் அதிகரிப்பதும் கவலையளிக்கும்படியாக உள்ளது.

அண்டை நாடுகளுடனான சில பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமாகவும், ஆக்கப்பூர்வமான விவாதத்தின் வாயிலாகவும் மட்டுமே தீர்க்க வேண்டும். இதை அனைத்துக் கட்சிகளும், குறிப்பாக எனது நண்பர்களான சிவசேனைக் கட்சியினரும் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசிலும், மகாராஷ்டிர மாநில அரசிலும் அங்கம் வகிக்கும் சிவசேனைக் கட்சியினருக்கு சில பொறுப்புகள் உள்ளன என்பதை அவர்களிடத்தில் வலியுறுத்த மட்டுமே என்னால் முடியும்” என்று பேசியிருந்தார் அருண் ஜேட்லி.

இந்தக் கருத்தை முன்வைத்தும் சிவ சேனா கட்சியினரின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து புதிய தலைமுறைத் தொலைக்காட்சி செவ்வாய் அன்று நேர்படப்பேசு நிகழ்ச்சியில் விவாதம் நடத்தியது. அருண் ஜெட்லி பேசியது குறித்து சிவ சேனா கட்சி சார்பில் கலந்து கொண்ட ராதாகிருஷ்ணனிடம் நெறியாளர் தியாகச் செம்மல் கருத்து கேட்டார். அதற்கு ராதாகிருஷ்ணன், ‘அருண் ஜெட்லி நல்ல இந்துவே அல்ல, நல்ல இந்துஸ்தானியும் அல்ல, இன்னும் சொல்லப்போனால் நல்ல இந்துவே அல்ல, அவர் சொல்வதையெல்லாம் கேட்கமுடியாது’ என்றார்.

 

Advertisements