நடிகர் சங்கத்துக்குள் புகுந்த திமுக!

dmk politics in nadigar sangam

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக உள்ளவர். அதிமுக ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர். இதன் அடிப்படையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு ஆதரவாக இருப்பதாக அறிக்கைவிட்டார். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த மற்ற நிர்வாகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிமுக கட்சியைச் சேர்ந்த ஜே.கே.ரித்திஷ், மனோபாலா போன்றோர் விஷால் அணியில் இருந்தனர். விஷால் அணி தாங்கள் எந்த கட்சிக்கும் சார்பானவர்களும் அல்ல, எதிரானவர்களும் அல்ல என்றும் அறிவித்தது. இந்நிலையில் விஷால் அணி அமோக வெற்றி பெற்றது. விஷால் அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினராக போட்டியிட்ட பூச்சி முருகன், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். விஷால் அணியின் வெற்றிக்கு அரசியல் சாயம் பூசப்படுகிறாதா என்கிற கேள்விக்கு, அவர் ஏற்கனவே திமுகவில் இருந்தவர், மரியாதை நிமித்தமாக திமுக தலைவரை சந்தித்தார் என்று பூச்சி முருகன் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

இந்நிலையில் திமுக எம் எல் ஏவும் தயாரிப்பளருமான ஜெ. அன்பழகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சங்க தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் S.தாணு ஒருதலைப்பட்சமாக யாரையும் கலந்து ஆலோசிக்காமல் சரத்குமார் அணிக்கு ஆதரவளித்து அனைத்து தயாரிபாளர்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார். இதனால் சங்க தலைவர் பதவியை கலைப்புலி தாணு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், “சரத்குமாரை நடிகர் சங்க தேர்தலில் கலைப்புலி S.தாணு ஆதரித்ததற்கான ஒரே காரணம் “எஸ்.பி.ஐ. சினிமாஸ் உடன் நடிகர் சங்கம் போட்டிருந்த ஒப்பந்தத்திற்கும் தாணுவுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம்”. அதேபோல் தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல் சாயம் இருக்கக்கூடாது, ஆனால் தாணு மூச்சுக்கு மூச்சு தமிழக முதல்வர் பெயரை உச்சரித்து அவரையும் ஏமாற்றி இந்த பதவியில் அமர்ந்து கொண்டு பிரபல நடிகர்களின் கால் ஷீட்டுகளை வலுக்கட்டயாமாக பெற்று பணம் சம்பாத்தித்து கொண்டிருக்கிறார்.

இவரை போன்ற சுயநல வியாபாரிகள் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் நீடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. எனவே தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவரை அப்பதவியிலிருந்து நீக்க ஒரு முடிவு எடுக்க வேண்டும். இது ஆரம்பம் தான், இது தொடர்பாக தயாரிப்பாளர் பலருடன் கலந்து ஆலோசித்து அவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி தயாரிப்பாளர்கள் சங்கம் நடுநிலையுடன் செயல்பட பாடுபடுவேன். தாணு முதலில் தி.மு.க வில் இருந்தார், பிறகு ம.தி.மு.க வுக்கு போனார், இப்போது அ.தி.மு.க வில் இருக்கிறார், நாளை ???” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டபோதும், வெற்றி பெற்ற பிறகும் விஷால் அணி தங்களை அரசியல் கட்சி சார்பற்றதாகவே சொல்லிவருகிறது. ஆனால், அரசியல் கட்சியில் இயங்கி சினிமா துறையிலும் உள்ள ஒரு சிலர் இந்த வெற்றியை தங்களுக்கு சாதகமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் திமுகவினர் முந்திக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் சினிமா பத்திரிகையாளர் ஒருவர்.

 

Advertisements