தலித் குழந்தைகள் எரித்துக் கொலை:சாதி காரணமில்லையாம்!

hariyana children

துணியால் போர்த்தப்பட்டிருக்கும் இந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் உடலைப் பார்க்கும் எவருக்கும் இதயம் படபடக்கும். இந்தப் பிஞ்சுகளை கொடூரமாக எரித்துக் கொன்று ஆனந்தம் அடைகிறவர்கள் மனம் பேதலித்தவர்களாகத்தான் இருக்கமுடியும். இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்தை மனம் பேதலித்தவர்களாக சாதியும் மதமும் மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்களே மக்களை மனம் பேதலிக்கச் செய்து இந்தக் கொடூரங்களை நிகழ்த்த ஊக்கம் தருபவர்களாக இருந்தால்…

ஹரியானாவின் பாஜக முதல்வர் மனோகர் கட்டார், சில நாட்களுக்கு முன் “முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்க வேண்டுமானால் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது” என்று பேசினார். இவருடைய ஆட்சியின் கீழ்தான் தலித் குடும்பம் ஒன்று ஆதிக்க சாதியினரால் எரிக்கப்பட்டது. இரண்டு குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். அந்தக் குடும்பத்தின் கணவன், மனைவி தீக்காயங்களுடன் உயிர்தப்பியிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தால் வெகுண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திப்பதாக இருந்த மனோகர் கட்டார், அசம்பாவிதங்களுக்கு அஞ்சி, சந்திப்பை ரத்து செய்திருக்கிறார். ஆதிக்க சாதியினரால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பலமுறை காவல்துறையிடம் முறையிட்டு இறுதியில் இரண்டு உயிர்களை இழந்து நிற்கிறது இந்தத் தம்பதி. ஆனால் மாநில முதல்வர் மனோகர் கட்டார், இந்தச் சம்பவத்துக்கு சாதி காரணமில்லை என்கிறார்.

மாட்டிறைச்சி சாப்பிட்டால் இந்தியாவை விட்டு போய்விடுங்கள் என்று முஸ்லிகளுக்குச் சொல்வதும், தலித் வீடுகளை எரித்துவிட்டு அதற்கு சாதி காரணமில்லை என சொல்வதும் சிறுபான்மையினர், தலித்துகளை துச்சமாக எண்ணும் மனநிலையிலிருந்து வருபவை. பலரை மனம் பேதலிக்கச் செய்து கொடூரங்களைச் செய்யத் தூண்டிவிடும் தெளிவான மனநிலை இது.

 

Advertisements