அரச மர வழிபாட்டை மறுத்த உத்தபுர தீண்டாமை!

உத்தபுரம்…புதிய நூற்றாண்டில் சாதியத்தின் சுவர் எழுப்பி காப்பாற்றி ‘புகழ்’ பெற்ற ஊர். 2008-ஆம் ஆண்டு இந்த ஊர் பிள்ளைமார் சாதி மக்கள், தலித்துகள் தங்கள் குடியிருப்புக்குள் வந்துவிடக்கூடாது என தீண்டாமைச் சுவர் எழுப்பியிருந்தனர். உலகின் கவனத்துக்கு வந்தபின், அரசு உத்தரவின் பேரில் அந்தத் தீண்டாமைச் சுவர் இடித்துத் தள்ளப்பட்டது.

ஆனாலும் உத்தபுர ஆதிக்க சாதி மக்கள், தலித் மக்களை ஊர்க் கோயிலுக்கு நுழையவோ, வழிபடவோ விடவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் நீண்ட போராட்டம் செய்து, 2011-ஆம் ஆண்டு தலித்துகளின் வழிபடும் உரிமையை மீட்டுத் தந்தனர். ஆனாலும் ஆதிக்க சாதியினரிடைய புகைந்துகொண்டிருந்தது சாதித்தீ. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடந்த கோயில் திருவிழாவில் இருதரப்பினருக்கும் இடையே பூசல் மூண்டது.

18 ஊர் சேர்ந்து கொண்டாடும் திருவிழா

உத்தரபுரம் அருகே எழுமலை என்ற ஊரில் 18 கிராமங்கள் சேர்ந்து முத்தாலம்மன் திருவிழாவை நடத்துவர். 18 ஊர்களைச் சேர்ந்தவர்களும் அவரவர் ஊரிலிருந்து ஒரு அம்மன் சிலை செய்து, அதை எழுமலைக்கு எடுத்துவந்து வழிபட்டு, பின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். சொந்த ஊரில் உள்ள கோயிலில் வைத்து பூஜித்த பிறகு, கண்மாய் நீரில் கரைத்தோ போட்டு உடைத்தோ திருவிழா சடங்கை நிறைவு செய்வார்கள்.

அரச மர வழிபாடு

இந்த 18 கிராமங்கள் சாதிய அடையாளத்துடன் இருப்பவை. தலித்துகள்-ஆதிக்க சாதியினரிடையே மோதல்கள் இருந்துவரும் நிலையில், திருவிழாவை முடித்த உத்தரபுரத்தைச் சேர்ந்த தலித்துகள் ஊரில் இருக்கும் முத்தாலம்மன் கோயிலில் போய் வழிபட்டுள்ளனர். அங்கிருந்த அரச மரத்துக்கு மாலையிட்டபோது, ஆதிக்க சாதியினர் அதை எடுத்துவீசி நீங்களெல்லாம் இங்கு வழிபடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் இருதரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு காவலர்கள் வந்து கோயிலுக்குப் பூட்டுப் போட்டுச் சென்றுவிட்டார்கள்.

கிடைக்காத உரிமை

“குத்தாலம்மன் கோயில் அரச மரம்தான் தாங்கள் வழிபடும் தெய்வம் என்று சொல்கிறார்கள் தலித் மக்கள். இந்த இடம் அமைந்துள்ள பொதுநிலம், புறம்போக்கு நிலம். இந்தக் கோயிலை நிர்வகித்துவரும் ஆதிக்க சாதியினர் கோயிலைச் சுற்றி சுவர் எழுப்பியுள்ளனர். அரச மரத்தையும் சுற்றி சுவர் எழுப்பிவிட்டனர். இதற்கொரு கேட் போட்டு, பூட்டும் போட்டுவிட்டனர். தீண்டாமை சுவரை உடைக்க வேண்டும், தங்கள் வீதிகளுக்கு திருப்பிவிடப்பட்ட கழிவுநீர் குழாயை வேறுபக்கம் திருப்பிவிட வேண்டும் என்பதோடு இந்தக் கோயிலின் வழிபடும் உரிமையும் தலித் மக்கள் வைத்த கோரிக்கை. மூன்றுமே பல போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்து வைக்கப்பட்டன. ஆனால், இன்னமும் அந்த உரிமை அவர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பதையே சமீபத்திய சம்பவம் காட்டுகிறது” என்கிறார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த சாமுவேல் ராஜ்.

ஆத்தங்கரையில் வன்முறை

“உத்தப்புரம் அருகே உள்ள இன்னொரு ஊரான ஆத்தங்கரைப் பட்டியில் தலித்துகளின் உடைமைகளை கொளுத்தியுள்ளனர் ஆதிக்கசாதியினர். 300 தலித் குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில் வெவ்வேறு ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த 30 குடும்பங்களும் வசிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எழுமலையில் நடக்கும் திருவிழாவுக்கு இவர்கள்தான் சிலை எடுத்துச் செல்வார்கள். இந்த ஆண்டு தலித்துகள் நாங்களும் உங்களுடன் வருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆதிக்க சாதியினர் நீங்கள் வேண்டுமானால் எடுத்துப் போங்கள் நாங்கள் வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். இந்நிலையில் எழுமலையில் சிலை வைத்து வழிபாடு செய்து சொந்த ஊருக்கு வந்து சடங்கை முடித்திருக்கிறார்கள்.

ஆனால், எழுமலையைச் சேர்ந்த மறவர் சாதியினர் எங்கள் மக்கள் உங்களால்தான் திருவிழாவுக்கு வரவில்லை என்று சொல்லி ஆத்தங்கரைப் பட்டிக்கு வந்து தலித்துகளுக்கு கார், பைக்குகளுக்கு தீவைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால் இந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்” என்கிறார் சாமுவேல் ராஜ்.

Advertisements