“காங்கிரஸ்+பசு=பாஜக”

பாஜகவின் மூத்த தலைவர் அத்வானிக்குப் பிறகு, நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறார் பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் அருண் சோரி.

“மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தை எல்லோரும் இப்போது நினைவு கூற ஆரம்பித்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் காங்கிரஸ்+பசு என்பதாகவே உள்ளது. காங்கிரஸ் வழியிலேயே பாஜக அரசும் செயல்படுகிறது” என்று திங்கள் கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார் அருண் சோரி.

மேலும் அவர், “முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பலகீனமான பிரதமர் நாட்டை ஆள்வதாக நான் உணர்கிறேன். பொருளாதார நிர்வாகம் என்பதை இந்த அரசு தலைப்புச் செய்திகளை நிர்வகிப்பது என்று தவறாக புரிந்துகொண்டிருக்கிறது” என்கிற அருண் சோரி, வாஜ்பாயி தலைமையிலான பாஜக அரசில் தகவல் தொழிற்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர். பத்திரிகையாளர், பொருளாதார நிபுணர்.

“வரி நிர்வாகத்தில் மாற்றம், வங்கித் துறை சீர்திருத்தம் போன்றவை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த காரணமும் இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சியைப் பற்றி தொழிலதிபர்கள் வெளிப்படையாக பேச பயப்படுகிறார்கள். மோடியை சந்திக்கும் தொழிலதிபர்கள் அவரைச் சந்திக்கும்போது ஏதாவது செய்யுங்கள் என்கிறார்கள். சந்திப்பு முடிந்து செய்தியாளர்களைச் சந்திக்கும்போது மோடியை புகழ்ந்து தள்ளுகிறார்கள்” என்று அருண் சோரி பேசியிருப்பது சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.

Advertisements