பாலியல் வன்கொடுமை குற்றம் செய்தவருக்கு ஆண்மை அகற்றம் தண்டனை சரியா?

Untitled

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பலாத்காரர்களுக்கு கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சட்டத்தை அமல்படுத்துவதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பரிந்துரைத்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தால் குற்றம் குறைந்துவிடுமா என்று சர்ச்சை கிளம்பியதுபோல் நீதிபதியின் ‘ஆண்மை அகற்ற’க் கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2011–ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் காப்பகத்துக்கு வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர், அந்த காப்பகத்தில் தங்கியிருந்து 9–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் ஒருவருக்கு கல்வி வாய்ப்பு வழங்குவதாக கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் பின்னர் ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற நிறுவனத்தின் மூலம் (Justice and Care Organisation) அச்சிறுவன் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அந்த நபரை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்திய தண்டனைச் சட்டம், சிறார் நீதி பாதுகாப்புச் சட்டம் கீழ் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தனக்கு எதிராக கீழ் கோர்ட் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி பிரிட்டனைச் சேர்ந்த அந்த நபர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், “பாலியல் அச்சுறுத்தல்களை கையாள்வதில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் பயனற்றதாக இருக்கும்போது, இந்த நீதிமன்றம், நாடு முழுவதும் நடக்கும் மிகக் கொடூரமான குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை, கூட்டு பலாத்காரங்களை கண்டும் காணாமல் கைகட்டி வேடிக்கைப் பார்க்க முடியாது.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பலாத்காரர்களுக்கு கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சட்டத்தை அமல்படுத்தினால், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வெகுவாக குறையும்” எனக் கூறி, குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் அவர், “கட்டாய ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை முறை என்பது காட்டுமிராண்டித்தனமாகத் தெரியலாம். ஆனால், காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு அதே பாணியில்தான் தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். தண்டனையை நினைத்துப் பார்க்கும்போதே ஒருவர் அந்த குற்றத்தைச் செய்வதை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். நீதிபதியின் கருத்து சமூக ஊடகங்களிலும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

“ஆண்மை அகற்றம் செய்வதால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை அந்தத் துறைச் சார்ந்த மருத்துவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் எனக்குப் பல அடிப்படைக் கேள்விகள் உள்ளன. பாலியல் வன்கொடுமை என்பது மட்டும்தான் இங்கே மிகப் பெரிய குற்றமா? ஆண்மை நீக்கப்பட்ட ஒருவன், ஒரு பெண்ணை பொதுவெளியில் நிர்வாணமாக்கி, துன்புறுத்தினால்-கொலை செய்தால் அது எவ்வகையான குற்றமாகப் பார்க்கப்படும்?

இயல்புக்கு மீறிய பாலியல் செயல்பாடு இருந்தால் அதற்குரிய மருத்துவத்தை அளிப்பதை ஒரு வழியாக மேற்கொள்ளலாமே தவிர, ஆண்மை அகற்றம் செய்வதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. 17 வயதில் ஒரு இளைஞன் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை செய்து அதற்குத் தண்டனையாக ஆண்மை அகற்றம் செய்யப்படுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் அடுத்து வாழப்போகும் 50 ஆண்டுகளில் எப்படிப்பட்ட மனிதனாக வாழ்வான்? திருந்தி வாழ்வானா? அல்லது வெறிப்பிடித்தவனாக மாறுவானா?” என்று கேட்கிறார் பெண்ணிய சிந்தனையாளர் ஓவியா. பாலியல் குற்றங்கள் தனி மனிதச் செயல்பாடாகப் பார்க்கப்படக்கூடாது. ஒட்டுமொத்த சமூகமும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் ஓவியா.

“பாலியல் வன்கொடுமை தண்டிக்கப்பட வேண்டிய, இந்தச் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய குற்றம்தான். ஆனால், ஒருவன் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுவதற்கு அவன் மட்டுமே காரணமா? என்னைப் பொருத்தவரை இந்தச் சமூகம்தான் காரணம் என்பேன்.

இந்தச் சமூகத்தில் எங்குப் பார்த்தாலும் பாலியலை மிகைப்படுத்தும் சம்பவங்கள்…உதாரணத்துக்கு ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் அரைகுறை ஆடைகளுடன் பாலுணர்வுகளை வெளிப்படுத்தும் சினிமா பாடல்களுக்கு சிறுவர், சிறுமியர் நடன ஆடுகின்றனர். அதைப் பெற்றோர் பார்த்து ரசிக்கின்றனர். பாலுணர்வுகளை மிகைப்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் இவர்கள்தான் பாலியல் வன்கொடுமை செய்தால் ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும், அவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று கர்ஜிக்கிறார்கள்” என்று கூறினார் ஓவியா.

நீதிபதியின் ஆண்மை அகற்றக் கருத்து, சமூகவியலாளர்களால் பிற்போக்குத்தனமாகப் பார்க்கப்பட்டாலும் அவரே பாலியல் கல்வி குறித்தும் பேசிகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். “பதின்ம பருவக் குழந்தைகள், பாலியல் சார்ந்த விவரங்களை தங்களது நண்பர்கள், இணையம், சினிமா ஆகியனவற்றின் மூலம் அரைகுறையாக தெரிந்துகொள்கின்றனர். தவறான புரிதல் ஆபத்தானது. எனவே அவர்களுக்கு பாலியல் தொடர்பாக அறிவியல்பூர்வமான தகவல்களை பாலியல் கல்வி மூலம் வழங்க வேண்டும்” என்கிறார் நீதிபதி கிருபாகரன்.

“பாலியல் குறித்த சரியான புரிதல்களை சமூகத்தில் ஏற்படுத்துவதை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட நபருக்கு தண்டனை கொடுத்துவிடுவதால் மட்டும் பாலியல் குற்றங்கள் குறைந்துவிடாது. சாமானியரைப் போல இயல்புக்கு ஒத்துவராத ஆண்மை அகற்றம் போன்ற பரிசீலனைகளை உயர்நீதிமன்ற நீதிபதியே செய்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது” என்கிறார் ஓவியா.

அண்மையில் டெல்லியில் நடந்த சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும்வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறுவர் குற்றவாளிகளுக்கான தண்டனை பெறும் வயதை 18லிருந்து 15ஆக குறைக்கும் சட்டத் திருத்தம் கொண்டுவருவது குறித்து தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை எப்படி குறைப்பது என்கிற விவாதம் எழுந்துகொண்டிருக்கும் நிலையில் நீதிபதி கிருபாகரனின் கருத்து மற்றொரு விவாதத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

ஓவியா சொல்வதுபோல சமூகத்தின் அடித்தள சிந்தனைகளில் மாற்றம் கொண்டுவராதவரை கடுமையான சட்டங்கள் போட்டு பாலியல் குற்றங்களை குறைத்துவிட முடியாது என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும்.

 

 

One thought on “பாலியல் வன்கொடுமை குற்றம் செய்தவருக்கு ஆண்மை அகற்றம் தண்டனை சரியா?

  1. எத்தனை சட்டங்கள் வந்தாலும் எத்தனை கொடிய தண்டனை கொடுக்கபட்டாலும் சட்டமீறல்களும் எல்லாவித கொடுமைகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும் என்பது காலாகாலமாக பார்த்துவரும் பரிதாபத்திற்குரிய நிதர்சனம். வளைகுடா நாடுகளில் இருக்கும் கடுமையான தண்டனைகள் தொடர்வதன் அர்த்தமே குற்றங்கள் தொடர்கின்றன /குறைய வில்லை என்பதுதானே.

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது – இது ஒரு சின்ன உதாரணம்தான்.

    கோ

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.