டெல்லி போலீஸ் பாஜக சேனைப் போல் செயல்படுகிறது:கெஜ்ரிவால்

கடந்த வாரம் டெல்லி பத்திரிகையாளர் மன்றத்துக்கு வந்த ஜம்மு-காஷ்மீர் சுயேட்சை எம்எல்ஏ இன்ஜினியர் ரஷீத் மீது கருப்பு மை தெளித்த இந்து சேனா என்கிற இந்துத்துவ அமைப்பு, திங்கள்கிழமை டெல்லி கேரள இல்லத்தில் பசு இறைச்சி பரிமாறப்பட்டதாகக் கூறி வன்முறையில் இறங்கியது. இதற்கு டெல்லி போலீசும் உடந்தையாக இருந்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்து சேனா ஆட்களுடன் டெல்லி போலீஸ் உணவகத்துக்குள் சென்று பசு இறைச்சி பரிமாறப்படுகிறதா என்று விசாரித்ததாகவும் இனி பசு இறைச்சி பரிமாறப்பட்டால் உணவகத்தை அடித்து நொறுக்குவோம் என்று அவர்கள் மிரட்டியதாகவும் உணவக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் உம்மன் சாண்டி, “டெல்லி போலீசார், தங்கள் விருப்பத்துக்கு உள்ளே நுழைய இது ஒன்றும் தனியார் ஹோட்டல் அல்ல. இது கேரள அரசினுடைய இல்லம். ஏதேனும் புகார் இருந்தால் அதை விசாரிப்பதற்கு என்று ஒரு முறை இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

arvin tweet

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “கேரள இல்லத்துக்குள் நுழைய டெல்லி காவல்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. பாஜகவின் சேனைப் போல டெல்லி காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒருவேளை மோடிக்கும் பாஜகவினருக்கும் பிடிக்காத உணவு மாநில இல்லத்துக்குள் இருக்கிறது என்று தகவல் வந்தால், அங்கேயும் இப்படித்தான் காவலர்கள் நுழைவார்களா?” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

கேரள இல்லத்தில் சமைக்கப்படும் இறைச்சியை அரசு அங்கீகரித்த கடைகளில் இருந்து வாங்குவதாகவும் மாட்டிறைச்சி எனும் பொதுப்பெயரில் விற்கப்படும் எருமை மாட்டின் இறைச்சிதான் அது என்றும் கேரள இல்ல உணவக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisements