அணுகுண்டு, கேரள இல்லத்தில் மாட்டிறைச்சி, இந்தியாவின் மகள்

geetha q

நாட்டில் பரவிவரும் ஆபத்தான மதவாதத்தை தடுத்து நிறுத்துமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள் இந்திய அறிவியலாளர்கள். மதவாத செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களுடைய சாகித்ய அகாதமி விருதுகளைத் திருப்பி அளித்தார்கள் எழுத்தாளர்கள். அடுத்து ஓவியக் கலைஞர்கள்- விமர்சகர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். அதேபோல் சமூகவியலாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை சொல்லியிருந்தனர். இந்த வரிசையில் தற்போது அறிவியலாளர்களும் இணைந்திருக்கிறார்கள்.

அறிவியலாளர்கள் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி அணுகுண்டைவிட மோசமானது. அது எந்த நேரத்திலும் வெடித்து சமூகத்துக்கு மாபெரும் சேதங்களை நிகழ்த்தக்கூடியது.

பன்முகத்தன்மையுள்ள நமது கலாச்சாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் நிலைக்கு நாம் இப்போது தள்ளப்பட்டுள்ளோம். புத்தரும் காந்தியும் சொன்ன அறவழிகளை நாம் மறந்துவிட்டோமா என்கிற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. அமைதிக்காக எழுந்து நின்ற மாபெரும் அறிவியல் மேதையான ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கையின் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருடைய வழியில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறோம்.

மதவாத, பிரிவினைவாத சக்திகளின் சமீபத்திய நடவடிக்கைகள் அப்பாவிகளையும் பகுத்தறிவாளர்களையும் பலிவாங்கிக் கொண்டிருக்கிறது. இனியாவது அரசாங்கம் விழித்துக் கொண்டு மாட்டிறைச்சியின் பேரில் நடக்கும் கொலைகளையும் கருத்து சுதந்திரத்தை எதிர்க்கும் சக்திகளையும் ஒடுக்க நடவடிக்கை வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதத்தில் 16 அறிவியலாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

1. நரேஷ் தாதிச்

2. பேரா. ஜி.ராஜசேகரன்

3.பேரா. ஏ.பி. பாலச்சந்திரன்

4. பேரா. ஜி. பாஸ்கரன்

5. பேரா. வருண் சாஹ்னி

6. பேரா. டி.ஆர்.கோவிந்தராஜன்

7. பேரா.பார்த்தா மஜும்தார்

8. பேரா.தாபிஸ் குரேஷி

9. பேரா. அஞ்சன் அனந்த சென்

10. பேரா. சுரேஷ் கோவிந்தராஜன்

11. பேரா. விக்ரம் சோனி

12. பேரா. தாவூத் கோத்வாலா

13. பேரா. சுதிப்தா சராக்கர்

14. பேரா. எச். எஸ்.மணி

15. பேரா.சுமதி ராவ்

16. பேரா. அசோகி சென்

17. பேரா. அஜித் மோகன் ஸ்ரீவத்சவா

18. பேரா. டெபாசிஸ் கோஷல்

19. பேரா. என்.டி. ஹரிதாஸ்

 

திங்கள்கிழமை டெல்லி கேரள இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், கேரள இல்ல உணவகத்துக்குள் நுழைந்து சோதனை செய்தது டெல்லி காவல்துறை. இதுகுறித்து கேரள முதல்வர் கடும்கண்டனம் தெரிவித்திருந்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இதைக் கண்டித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: டெல்லி போலீஸ் பாஜக சேனைப் போல் செயல்படுகிறது:கெஜ்ரிவால்

செவ்வாய்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு, கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதியிருந்தார். அதில், கேரள இல்லத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்த டெல்லி காவல்துறையின் நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சகம் விசாரிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

மத்திய அமைச்சகத்தில் இருந்து பதில் ஏதும் வராத நிலையில்,கேரள முதல்வர் உம்மன் சாண்டி டெல்லி காவல் துறை மீது சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

காவல்துறை சோதனையைக் கண்டித்து கேரள எம்பிக்கள் போராட்டம்
காவல்துறை சோதனையைக் கண்டித்து கேரள எம்பிக்கள் போராட்டம்

தவறான புகாரை பதிவு செய்த இந்து சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த விஷ்ணு குப்தா, பாஜக தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்நிலையில், விஷ்ணு குப்தாவை கைது செய்திருக்கிறது டெல்லி காவல்துறை.

இதையும் படியுங்கள்: “காங்கிரஸ்+பசு=பாஜக”

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த சூழ்நிலையில் புதன்கிழமை முதல் வழக்கம்போல மாட்டிறைச்சி உணவுகள் பரிமாறப்படும் என அறிவித்திருக்கிறது கேரள இல்ல உணவக நிர்வாகம்.

இந்தியாவின் மகள் என்று கொண்டாடப்படும் கீதாவை காப்பாற்றி வளர்த்ததற்கு நன்றி சொல்லி ‘எதி’ என்ற பாகிஸ்தானிய அமைப்புக்கு ரூ. ஒரு கோடி நிதி அளிப்பதாக அறிவித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இதை வெளிப்படையான காரணங்கள் எதுவும் சொல்லாமல் வேண்டாம் என்று நாசூக்காக மறுத்திருக்கிறார் ‘எதி’அமைப்பின் நிறுவனர் ஃபைசல் எதி.

பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான எதி, 64 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 40 ஆயிரம் குழந்தைகளுக்கு உதவியிருக்கிறது. 50 ஆயிரம் ஆதரவற்றோர்களுக்கு வாழ்வளித்திருக்கிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் அளிப்பதாகச் சொன்ன கணிசமான நிதி, நிறுவனத்தின் மூலம் உதவி தேவைப்படும் பலரை சென்றடைந்திருக்கும். ஆனால், எதி அதை மறுத்திருக்கிறது. ஏன் மறுத்தது?

கடந்த மாதம் பாகிஸ்தானில் இருந்த வந்த ஒரு குடும்பம், மும்பை ஹோட்டல் ஒன்றில் தங்க இடம் கேட்டது. ஆனால் அந்த ஹோட்டல் தங்க இடம் தரவில்லை. இதனால் அந்தக் குடும்பம் ஓர் இரவை மும்பை வீதிகளில் கழிக்க நேர்ந்தது. ‘அதிதி தேவோ பவ’ என வெளிநாட்டு விருந்தினர்களை அன்போடு அழைக்கும் இந்தியாவில்தான் பாகிஸ்தானியர் என்ற காரணத்துக்காக குழந்தைகள், முதியவர்களைக் கொண்ட அந்தக் குடும்பம் இந்திய மண்ணில் அல்லல்பட்டிருக்கிறது.

இந்தியாவின் மகளை அன்பொழுக வரவேற்ற இந்திய பிரதமர்
இந்தியாவின் மகளை அன்பொழுக வரவேற்ற இந்திய பிரதமர்

பாகிஸ்தானுடம் கிரிக்கெட் விளையாடக் கூடாது, பாகிஸ்தானிய பாடகர்கள்-அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு வரக்கூடாது என ஆளும் பாஜகவின் உறவு அமைப்புகள் பிரச்சாரம் செய்வதும் அதை கட்டாயப்படுத்துவம், சில நேரம் வன்முறையில் இறங்குவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் முக்கியமான செய்தியை நிதிய மறுத்திருப்பதன் சொல்லியிருக்கிறது ‘எதி’ அமைப்பு.

15 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் வந்திறங்கிய பேச முடியாத கீதா என்ற பெண்ணைக் காப்பாற்றியது எதி அமைப்பு. எதி அமைப்பின் நிறுவனரின் குடும்பமே கீதாவைத் தத்தெடுத்து வளர்த்திருக்கிறது. இன்னொரு முக்கியமான தகவல் கீதாவை அவருடைய இந்து மத வழிபாட்டுப் பழக்கத்தையே இதுநாள் வரை, அந்த இஸ்லாமிய குடும்பத்தில் பின்பற்றி வந்திருக்கிறார் என்பதே அது. இஸ்லாமியர்கள் என்றாலே மதமாற்றம் செய்வதுதான் அவர்களுடைய வேலை என்று வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளும் இந்துத்துவ அமைப்புகளுக்கு நல்லதொரு செய்தி சொல்கிறது இது.

பெற்றோர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில், இந்தியர் என்ற ஒரே காரணத்துக்காக ‘இந்தியாவின் மகளை’ இந்தியாவுக்கு அழைத்து பெருமைத் தேடிக்கொள்ள நினைத்தது பாஜக அரசு. ஆனால், நாம் பாகிஸ்தானியரை எப்படி நடத்துகிறோம் என்கிற குற்றவுணர்வு கொள்ளும் கேள்வியைக் கேட்கிறார் இந்தியாவின் மகள்!

 

 

Advertisements