சோட்டா ராஜனுக்கு உதவிய புலனாய்வுத் துறை

chota-rajan

ஆள் கடத்தல், ஆயுத கடத்தல், போதைப் பொருள் விற்பனை, வட்டித்தொழில் என அத்தனை கிரிமினல்தனங்களும் செய்து வந்த சோட்டா ராஜன் மிகப் ‘புகழ்’ பெற்றது காண்ட்ராக்ட் கில்லிங் எனப்படும் கொலைத் தொழிலுக்காகத்தான்! கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஓட்டத்துக்குப் பின் இப்போது ‘ஓய்வெ’டுக்க இந்தியா அழைத்து வரப்பட்டிருக்கிறார் என்கின்றன புலனாய்வுத் துறை வட்டாரங்கள்.

புலனாய்வுத் துறை வட்டாரங்களில் இருந்து இன்னொரு செய்தியும் வெளிவந்திருக்கிறது. மும்பை குண்டுவெடிப்புக்குப் பிறகு ‘நாட்டுப்பற்று’ காரணமாக தாவூத் இப்ராஹிமை பிடிக்க இந்திய புலனாய்வுத் துறைக்கு சோட்டா ராஜன் உதவியதாகவும் அதன் பேரிலேயே சோட்டா ராஜனை தாவூத்தின் கொலை விரட்டல்களிலிருந்து காப்பாற்ற இந்திய புலனாய்வுத் துறையே அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் புறநகர் பகுதி ஒன்றில் வசித்துவந்த சோட்டா ராஜனை விரட்டிப் பிடித்த தாவூத்தின் ஆட்கள் அவரைக் கொல்ல பல முறை முயன்றதாகவும் அதிலிருந்து தப்பிக்க இந்தோனேஷியாவின் பாலிக்கு வந்து கைதாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவை அத்தனையும் இந்திய புலனாய்வுத் துறை ஆலோசகர் அஜித் நோவலின் கட்டளைப்படி நடந்ததாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய புலனாய்வுத் துறை சோட்டா ராஜனுக்கு உதவியதற்கான ஆதாரங்கள்..

* வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் இந்திய தூதரகத்தில் பாஸ்போர்ட் பெற வேண்டுமானால் கடுமையான விதிமுறைகளை பின்பற்றியாக வேண்டும். ஆனால் சோட்டா ராஜனுக்கு அப்படி எந்த விதிமுறைகளும் இல்லாமலேயே பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

* 2008-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி சிட்னியில் உள்ள இந்திய தூதரகம் சோட்டா ராஜனுக்கு மோகன் குமார் என்ற பெயரில் பாஸ்போர்ட் வழங்கியிருக்கிறது.

* இந்தியாவின் தேடப்படும் முக்கிய நபராக உள்ள ஒருவருக்கு எளிதாக பாஸ்போர்ட் கிடைத்திருப்பது ஆச்சரியத்துக்குரியது.

* அக்டோபர் 12-ந் தேதி பாலிக்கு சோட்டா ராஜன் வரும்போது கைது செய்ய வேண்டும் என்பதை இந்தோனேஷியா அரசுக்கு தெரிவித்திருக்கிறது இந்திய புலனாய்வுத் துறை. இதன் மூலம் இது திட்டமிடப்பட்ட கைது என்று நிரூபணமாகியுள்ளது.

சோட்டா ராஜனை வைத்து தாவூத்துக்கு வலைவீச்சு

சோட்டா ராஜனை கைது செய்திருப்பதன் மூலம் தாவூத்தை பிடித்துவிடலாம் என்கிற கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. தாவூத்திடமிருந்து ஓடி தப்பித்துக்கொண்டிருக்கு சோட்டா ராஜனால் எப்படி தாவூத்தை பிடிக்க உதவு முடியும் என்கிற அடிப்படை கேள்வி எழுகிறது.

ஓடி ஓய்ந்த சோட்டா ராஜன்

சோட்டா ராஜனுக்கு சர்க்கரை வியாதியும் சிறுநீரகத்தில் பிரச்சினையும் உள்ளது. சிறுநீரகப் பிரச்சினையால் டயாலிசிஸ் செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்கிற நிலைமை. இந்நிலையில் விடாமல் துரத்திக்கொண்டிருந்த தாவூத்தின் பிடியில் இருந்து தப்பித்து பாதுகாப்பான இடத்தில் இருக்க விரும்பினார் சோட்டா ராஜன். அதன் அடிப்படையிலே இந்திய புலனாய்வுத் துறையும் மத்திய அரசும் சோட்டா ராஜனுக்கு ‘உதவி’யிருக்கின்றன.

மங்களூருவில் விரிந்த சோட்டா ராஜனின் ராஜ்ஜியம்

தாவூத்தின் துரத்தல்களுக்குப் பயந்து வெளிநாடுகளுக்குப் பறந்தாலும் சோட்டா ராஜன் தன்னுடைய சாம்ராஜ்யத்தை கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் விரிவுபடுத்தியிருக்கிறார். 90களுக்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழில் வேகமாக வளர்ச்சியடைந்ததைப் பயன்படுத்தி மங்களூரு போன்ற கர்நாடக கடலோரப் பகுதிகளில் தன்னுடைய ‘தொழில்’களை செய்ய ஆட்களை நியமித்திருக்கிறார் சோட்டா ராஜன். தன்னுடைய ஆட்கள் மூலம் தாவூத்தின் போதைப் பொருள் கடத்தல் தொழிலை முடக்கியதாகவும் தற்போது செய்தி வெளியாகியிருக்கிறது.

 

Advertisements