தேர்தல் நேரத்தில் மாற்றப்படும் தேர்தல் ஆணையர்கள்…ஏன்?

தேர்தலில் வெற்றி பெற கட்சிகளுடையே கூட்டணி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் ‘ஒத்துழைப்பும்’ மிக முக்கியம் என்ற எழுதப்படாத விதி இந்திய தேர்தல் நடைமுறைகளில் உள்ளது.

தற்சமயம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக உள்ள சந்தீப் சக்சேனா, தேர்தல் ஆணையத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்திப் சக்சேனா, டெல்லிக்கு மாற்றம் கோரி விண்ணப்பித்ததாகவும் அதன் பேரிலே அவரை விடுவித்துள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு தமிழக முதன்மை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட சந்தீப் சக்சேனா ஸ்ரீரங்கம், ஆர். கே.நகர் இடைத் தேர்தல்களில் ஆளும் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று கூறி அவரை மாற்ற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்து வந்தன.

“தேர்தலில் வன்முறை என்பது இந்தியாவெங்கும் ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. சமீப காலங்களில், கிட்டத்தட்ட இந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் தேர்தல் முறைகேடு அதிக அளவில் நடந்துள்ளது. முறைகேடுகளில் அரசியல்வாதிகள் ஈடுபடும் காலம் போய் வாக்காளர்களே வாக்குக்குப் பணம் பெற்றுக்கொள்ளும் முறைகேட்டில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். பீகார் தேர்தல் வன்முறைக்கு பெயர்பெற்றது. தமிழகத் தேர்தல் முறைகேடுகளுக்கு பெயர் பெற்றிருக்கிறது” என்கிறார் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆர். முத்துக்குமார்.

2009-ஆம் ஆண்டு திருமங்கலத்தில் நடந்த இடைத் தேர்தலின் போது அப்போதைய திமுக அரசு வாக்களர்களுக்கு பெருமளவில் பணம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி கண்டதால் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என சிறப்புப் பெயரையும் அந்தத் தேர்தல் பெற்றது. அப்போது தமிழக தேர்தல் ஆணையராக இருந்தவர் நரேஷ் குப்தா. நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர் என்றாலும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு முன் அவருடைய அதிகாரத்தால் வலுவாகப் போராட முடியவில்லை.

“இந்திய சுதந்திரம் அடைந்து முதல் தேர்தல் நடந்தபோது தேர்தல் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்றார் ஜவஹர்லால் நேரு. ஆனால் இப்போது தேர்தல் ஆணையர் என்றாலே ஆளும் அரசுக்கு ஆதரவாகத்தான் இருப்பார் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது” என்கிற முத்துக்குமார், தேர்தல் ஜனநாயகத்தை மீட்டெடுக்க தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் தேவை என்கிறார்.

“தேர்தல் ஜனநாயகத்தில் மாற்றம்கொண்டுவர வலுவான ஆயுதம் தேவை. சில சமயம் இந்த ஆயுதங்களே ஜனநாயகத்தை சீர்குலைத்திருப்பது கடந்தகால வரலாறு. இனியும் அப்படி நடக்காமல் தேர்தல் ஆணையம் தன்னுடைய சுதந்திரத்தன்மையை நிலைநிறுத்த முயல வேண்டும். கடந்த காலங்களில் தமிழக தேர்தல்களில் தேர்தல் ஆணையம் மீது விழுந்த மோசமான பிம்பத்தைக் களைய நேர்மையான, வலுவான தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்” என்கிறார் ஆர். முத்துக்குமார்.

இந்நிலையில், சுற்றுலாத் துறை செயலாளராக உள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹர்சகாய் மீனா தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்புக்கு நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர்கள் சிலரது பெயரும் பட்டியலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.