ராமஜெயம் கொலை வழக்கு என்ன ஆனது?

திருச்சி மாநகரின் ஒரு அதிகாலைப் பொழுதில் நடந்த அந்தக் கொலையின் மர்ம முடிச்சுகள் மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும் அவிழ்க்கப்படவேயில்லை. 2012-ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி படுகொலை செய்யப்​பட்டார் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி, கே.என்.ராமஜெயம். ரியல் எஸ்டேட்,கல்குவாரி கான்ட்ராக்ட், கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்பட பல்வேறு‘தொழில்’களைச் செய்து வந்தவர் இவர். அதோடு ‘அழகிரி பாணி’ அரசியலில் ராமஜெயம் கைதேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள்.சம்பவம் நடந்த அன்று காலை 5.30 மணிக்கு நடைப்பயிற்சி சென்றவர் 8.30 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேட ஆரம்பித்தனர். அடுத்த சில மணி நேரங்களில், கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில், ராமஜெயத்தின் உடல் ஸ்ரீரங்கம் பகுதியில் கிடப்பதைக் கண்டுபிடித்தது போலீஸ்.

திருச்சி மாவட்டத் தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் கே.என்.ராமஜெயம். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் முதுகெலும்பே ராமஜெயம்தான். திருச்சியில் திமுகவின் மூன்று மாநில மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியது, கட்சிக்குச் சொந்தமாக அறிவாலயம் கட்டியது என்று பிரம்மாண்​டங்களை அரங்கேற்றுவதில் கைதேர்ந்தவர். அதேநேரம், தீவிர அரசியலில் நேரடியாக இறங்காமல், ‘தொழில்’கள் செய்வதில்தான் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். ஆந்திராவில் சுரங்கத் தொழில், இந்தோ​னேஷி​யாவில் நிலக்கரி குவாரி, புதுக்​கோட்டை எல்லையோரம் கிரானைட் குவாரி, ஜனனி குரூப் ஆஃப் கம்பெனிகள், உயர் கல்வி நிறுவனங்கள் என்று மிகப்பெரிய தொழில் அதிபராக வலம் வந்தவர். அதனால், ராமஜெயத்தை ‘எம்.டி’ என்று மரியாதையுடன் திருச்சிவாசிகள் அழைப்பார்களாம்.

1996-2001ஆம் வரையான திமுக ஆட்சியின்போதுதான், ராமஜெயம் முழுநேர அரசியல்வாதி ஆனார். அடுத்து வந்த 2006 -2011 திமுக ஆட்சியின்போது மளமளவென வளர்ந்தது இவருடைய அரசியல் வாழ்வு. இவரின் தீவிர அரசியல் பற்றி நேருவின் கவனத்துக்குப் போனபோது, ராமஜெயத்தை அழைத்துக் கண்டித்ததாகவும் இதற்கிடையில், ராமஜெயத்தின் ஆதரவாளர்கள் அவரை நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூரில் போட்டியிடும்படி தூபம் போட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு நேரு சம்மதிக்கவில்லை. நடிகர் நெப்போலியனை நேரு முன்னிறுத்தினார். இதனால், அண்ணன் நேருவுடன் ராமஜெயத்துக்கு அரசியல்ரீதியான மோதல் வெடித்தது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு வழக்குகள் இவர் மீது போடப்பட்டன. இதனால் ராமஜெயம் தலைமறைவு ஆனார். கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு தப்ப முயன்றபோது இமிகிரேஷன் அதிகாரிகள் பிடித்து திருச்சிக் காவல் துறை வசம் ஒப்படைத்தனர். சில நாட்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்த பின்னர், அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியில் வந்திருக்கிறார்.

2007-ல் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜும் அவரது கார் டிரைவர் சக்திவேலும் காரில் வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். அதேதினத்தில், துரைராஜின் சகோதரர் தங்கவேலுவும் மர்மமான முறையில் இறந்தார். இந்த இரண்டு வழக்கில், ராஜெயத்தின் தலையீடு உள்ளதாக காவல்துறை சந்தேகித்தது. இந்நிலையில்தான் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்து வழக்கை விரைந்து முடித்து நீதி வழங்க வேண்டும் என துரைராஜ் குடும்பத்தினர் கோரிக்கை வைத்ததாகவும் அதன்பிறகும், வழக்கில் முன்னேற்றம் இல்லை என்பதால் துரைராஜின் ஆதரவாளர்கள்தான் ராமஜெயம் கொலையை கூலிப்படையை ஏவி நடத்தி இருக்க வேண்டும் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்தனர்.

திருச்சியில் பிரபல ரௌடி ஒருவர் திமுக ஆட்சியில் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதற்குப் பின்னணியில் இருந்து தூண்டியது ராமஜெயம். அந்த ரௌடியின் ஆதரவாளர்கள் இதனைச் செய்திருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. ‘ராமஜெயத்தின் உடல் இருந்த நிலையைப் பார்த்தால் அவர் கைதேர்ந்த தொழில் முறை கொலையாளிகளால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருப்பதைப் போல் தெரிகிறது. அதனால், வெளிமாநிலத் தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்குமா என்றும் அலசப்பட்டது. ஆனால் மூன்று ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில் சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கில் குற்றவாளி யாரும் சிக்கவில்லை.

தனது கணவர் கொலை வழக்கை சிபிசிஐடி சரியாக விசாரிக்கவில்லை. அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளிகளைக் கண்டறிய அக்டோபர் 28ந் தேதி வரை காவல் துறை அதிகாரிகளுக்கு அவகாசம் கொடுத்திருந்தனர்.

ராமஜெயத்துக்கு நெருக்கமான மூன்று நபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களைத் தருவதால் அவர்களை உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்த சிபிஐ உதவி கேட்டிருந்தது சிபிசிஐடி போலீஸ். இந்நிலையில் புதன்கிழமை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸ், ராமஜெயம் கொலையின் முடிச்சுகளை அவிழ்க்குமா? அல்லது நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமா? என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் கிளம்பியிருக்கிறது.