வித்யாவுக்கு நீதி கிடைத்ததா?

2013-ஆம் ஆண்டு ஜனவரி 30ந் தேதி சென்னை புறநகர் பகுதியான ஆதம்பாக்கத்தில் இண்டர்நெட் பிரவுசிங் செண்டரில் வேலைப்பார்த்த வித்யா மீது, விஜயபாஸ்கர் தனது வெறித்தனத்தைத் தீர்த்துக்கொள்ள ஆசிட்டை ஊற்றினார். காதலிக்க மறுத்தார் என்பதே காரணம்.

ஐடி நிறுவனம் ஒன்றில் சமையல் பிரிவில் வேலைப்பார்த்த விஜயபாஸ்கர், வித்யாவை காதலிப்பதாக சொல்லியிருக்கிறார். அதை வித்யா மறுக்கவே, அவர் வேலைப்பார்த்து வந்த இடத்திற்கு யாரும் இல்லாத நேரத்தில் வந்து, மிகக் கொடூரமாக வித்யா தப்பிவிடக்கூடாது என்ற முனைப்பில் அவருடைய முகத்தில் ஆசிட்டை ஊற்றி தேய்த்திருக்கிறார். இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட வித்யா அலறியிருக்கிறார். வித்யாவின் அலறலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த கடைக்காரர்கள் விஜயபாஸ்கரை விரட்டிப் பிடித்திருக்கிறார்கள்.

கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வித்யா சிகிச்சைப் பலனின்றி ஒரே மாதத்தில் இறந்தார். காவல்துறையால் கைது செய்யப்பட்ட விஜயபாஸ்கர் மீதான வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியிருக்கிறது நீதிமன்றம். தமிழகம் முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட விஜயபாஸ்கருக்கு ஆயுள் தண்டனையு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி செல்வகுமார்.

வித்யாவின் உடலைக் கண்டு கதறும் அண்ணனும் அம்மாவும்
வித்யாவின் உடலைக் கண்டு கதறும் அண்ணனும் அம்மாவும்

“என் மகள் எப்படிப்பட்ட வலியை அனுபவித்திருப்பாள் என்பதை ஆயுள் முழுவதும் சிறை தண்டனை பெற்று அந்தக் குற்றவாளி உணர வேண்டும். அதனால் ஆயுள் தண்டனை தீர்ப்பை நான் வரவேற்கிறேன்” என்று சொல்கிறார் வித்யாவின் அம்மா சரஸ்வதி.

“வித்யாவின் இறுதி ஆசை அவளுடைய கண்களை தானமாக தரவேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்றிவிட்டோம். அதுபோல தன்னுடைய வாழ்நாளில் நிறைவேற்ற அவளுக்கு ஆயிரம் ஆசை இருந்தது” என்கிறார் சரஸ்வதி அழுகையை அடக்கிக் கொண்டு.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ஆசிட் விற்பனையை முறைப்படுத்தியது தமிழக அரசு. ஆனாலும் சமூக ரீதியாக பெண்ணுக்கு எதிரான குற்றங்களை ஏவும் மனோபாவம் குறையும்வரையில் இந்தச் சம்பவங்களும் குறையப் போவதில்லை.