கருணாநிதியின் எகனாமிக் டைம்ஸ் பேட்டி

சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ‘எகானமிக் டைம்ஸ்’ இதழுக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி பேட்டியளித்திருந்தார். இதன் தமிழ் வடிவம் இங்கே…

கேள்வி :- திராவிட இயக்கங்களில், திராவிட முன்னேற்றக் கழகம், மிகப் பழமையானதும், நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதும், வலிமை மிக்கதுமான இயக்கமாகும். அது எதிர்காலத்தைச் சந்திப்பதற்கு ஏற்ற வண்ணம் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு வருகிறதா?

பதில் :- திராவிட இயக்கம் என்பது நூறாண்டைக் கடந்தது. அதன் வழித் தோன்றலான திராவிட முன்னேற்றக் கழகம் 66 ஆண்டுகளைக் கடந்து மேலும் வளர்ந்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு அறிவிப்பும், செயல் திட்டமும், வருங்காலத் தலைமுறையை மனதிலே கொண்டு, எதிர்கால இளைஞர் சமுதாயம் பின்பற்றி வளர்வதற்கான வழிமுறைகளை வகுத்து அந்த நல்ல நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. எதிர்கால ஏற்றத்திற்கான செயல் திட்டங்கள் கழகத்தில் ஏராளமாக இருப்பதால் தான் இலட்சக்கணக்கான இளைஞர்கள் கழகத்தின்பால் ஈர்க்கப்பட்டு, அதன் காரணமாகவே கழகத்தின் இளைஞர் அணி வலிவும் பொலிவும் பெற்று விளங்குகிறது!

கேள்வி :- மத்தியில் உள்ள பா.ஜ.க. மாநிலங்களில் வேரூன்ற மேற்கொள்ளும் முயற்சிகளின் காரணமாக மாநிலக் கட்சிகளுக்கு அது அச்சுறுத்தலாக இருக்குமா?

பதில் :- மற்ற அரசியல் கட்சிகளுக்கு எப்படியோ; தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க., எந்நாளும் ஒரு அச்சுறுத்தலாக அமைவதற்கு வாய்ப்பே இல்லை. தி.மு. கழகம் ஆரம்பக் காலந்தொட்டு, ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகவே இருந்து வருகிறது. தமிழ்நாடு, தந்தை பெரியார் அவர்களாலும், அண்ணா அவர்களாலும் பெரும்பாடுபட்டுப் பண்படுத்தப்பட்ட தன்மான பூமி என்பதால், பா.ஜ.க.வின் அடிப்படைவாதக் கொள்கைகளால், தி.மு. கழகத்திற்கோ, தமிழகத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதில் நான் உறுதியாகவே இருக்கிறேன்.

modi

கேள்வி :- இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 16 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற இந்த 16 மாதங்களில், ஏராளமாக பயணம் செய்திருக்கிறார். நிறைய பேசியிருக்கிறார். நரேந்திர மோடி அவர்களின் அமைச்சரவையிலும் பா.ஜ.க. விலும் உள்ளவர்கள், அவருடைய பேச்சைக் கேட்டு நடக்கிறார்களா என்பதே சந்தேகம் தான்! ஏனென்றால் அவர்களின் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் அப்படித் தான் உள்ளன.

கேள்வி :- 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை மோடி காப்பாற்றுவார் என்று நினைக்கிறீர்களா?

பதில் :- பா.ஜ.க., 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது நாட்டு மக்களிடம் சொன்ன உறுதி மொழிகளை நிறைவேற்றுவதை விட, சொல்லாதவற்றை, அதாவது தேவையில்லாதவற்றை ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு அதிகமாகச் செய்து வருகிறது.

கேள்வி :- காங்கிரஸ் கட்சி எதிர்க் கட்சியாகச் செயல்பட்டு வருவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் அவர்கள் செய்து வருவது நியாயப்படுத்தப்படக் கூடியதா?

பதில் :- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க் கட்சியாக இருந்து பணியாற்றுவது என்பது புதியதல்ல. கடந்த காலங்களிலும் எதிர்க் கட்சியாக இருந்திருக்கிறது. ஜனநாயகத்தில் ஓர் எதிர்க் கட்சியின் செயல்பாடு, வினை – எதிர்வினைத் (Action – Reaction) தத்துவத்தையொட்டி, பெருமளவுக்கு ஆளுங்கட்சியின் அணுகுமுறையைப் பொருத்தே அமைகிறது. பா.ஜ.க. அரசின் பழி வாங்கும் மனோபாவத்திற்குப் பதிலளித்திடும் வகையில் எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சியின் நடைமுறைகள் வகுக்கப்பட்டுச் செயல் படுத்தப்படுவதாகவே கருதுகிறேன்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடுத்திடும் வகையில் காங்கிரஸ் கட்சி பல நிகழ்வுகளில் நடந்து கொள்வதை நியாயப்படுத்திட முடியுமா அல்லது முடியாதா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதை விட, பா.ஜ.க. எதிர்க் கட்சியாக இருந்த போது, நாடாளுமன்றம் எவ்விதத் தடங்கலுமின்றி நடக்க வேண்டும் என்பதில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டி ஒத்துழைத்தது என்பதை எண்ணிப் பார்த்தால், இந்திய அரசியல் எந்தத் திசை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் செய்வது, ஜனநாயகத்தையே முடமாக்குவதற்கு ஒப்பானதாகும்.

ராகுல்காந்தி தலைமை ஏற்பாரா?
ராகுல்காந்தி தலைமை ஏற்பாரா?

கேள்வி :- ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியை முன்னின்று நடத்தி வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக ஆவதற்குரிய தகுதி படைத்தவர் தானா?

பதில் :- இது உட்கட்சி விவகாரம்; எனினும் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைமையினை ஏற்று நடத்திட முடியுமா என்பது அனுமானத்தின் அடிப்படையிலான கேள்வி . இது போன்ற கேள்வி ராஜீவ் காந்தி தலைமைப் பொறுப்பினை ஏற்கவிருந்த நேரத்திலும் எழுப்பப்பட்டது. ராகுல் காந்தி தலைமை யேற்று கட்சியை நடத்துவதற்குத் தேவையான அறிவையும், ஆற்றலையும், அனுபவத்தையும் பெற்றிருப்பதாகக் காங்கிரஸ் கட்சி கருதுவதால் தான் அவரை முன்னிலைப்படுத்துகிறார்கள். வெற்றிடம் எப்போதும் வெற்றிடமாக இருந்து விடுவதில்லை; வெற்றிடம் ஏற்பட்ட உடனேயே நிரப்பப் பட்டு விடுகிறது என்ற இயற்கை விதியினை நினைவில் கொள்ள வேண்டும். ராகுல் காந்தியைப் பற்றி எழுப்பப்படும் கேள்வி ஏன் பா.ஜ.க. தலைமை மாற்றத்தைப் பற்றி எழுப்பப்படவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டு மென்று விரும்புகிறேன்.

கேள்வி :- அ.தி.மு.க. மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கு தமிழகத்திலே உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

பதில் :- ஜனநாயக விரோத, மக்கள் விரோத, ஊழல் நிறைந்த, செயல் திறனற்ற அ.தி.மு.க. வுக்கு எதிரான ஒவ்வொரு நாளும் பல்கிப் பெருகி வரும் வாக்குகள் சிதறி விடக் கூடாது என்பது ஒரு நல்ல நோக்கத்தின்பால் பட்டது தான். எனினும் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்தால் தான், அதிமுக வைத் தோற்கடிக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த அளவுக்கு அ.தி.மு.க. வின் பலமும் செல்வாக்கும் இமயம் போன்றதில்லை. 1996 சட்டப் பேரவைத் தேர்தலில் 27 சதவிகித வாக்குகளையும், 2006 தேர்தலில் 33 சதவிகித வாக்குகளையும் மட்டுமே பெற்று தோல்வியடைந்த கட்சி தான் அ.தி.மு.க. என்பதையும்; 1996 சட்டப் பேரவைத் தேர்தலில் 53 சதவிகித வாக்கு களையும் 2006 தேர்தலில் 45 சதவிகித வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்த கட்சி தான் தி.மு.க. என்பதையும்; மறந்து விடக் கூடாது.

ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள். நால்வரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனைக் கண்டு அவர் மிகவும் வருத்தமடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் முடியாதென கூறி விட்டார்கள். ஒரு நாள் அவர்களுக்குப் பாடம் புகட்ட ஒரு போட்டியை வைத்தார். நால்வரையும் ஆளுக்கொரு கொம்பு கொண்டு வரச் சொன்னார். அவர்களும் கொண்டு வந்தார்கள். மூத்த மகனை அழைத்து நான்கு கொம்புகளையும் ஒன்றாகக் கட்டச் சொன்னார். பிறகு ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து, கட்டிய அந்தக் கொம்புகளை உடைக்கச் சொன்னார். யாராலும் முடியவில்லை. பிறகு அந்தக் கட்டுகளை அவிழ்த்து, அந்தக் கொம்புகளை ஒவ்வொன்றாகக் கொடுத்து உடைக்கச் சொன்னார். அனைவரும் சுலபமாக உடைத்தார்கள். ஒற்றுமையோடு பலம் என்னவென்று இப்போது புரிந்திருக்கிறதா என்று கேட்டார். அவர்களும் புரிகிறது என்று கூறினார்கள். இந்தக் கதையை தமிழகத்திலே உள்ள எதிர்க் கட்சிகள் புரிந்து கொண்டால் சரி!

மக்கள் நலக் கூட்டணி பற்றி...
மக்கள் நலக் கூட்டணி பற்றி…

கேள்வி :- பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., வி.சி.க. மற்றும் இடதுசாரிக் கட்சிகள் போன்ற சிறிய கட்சிகள் முதல் முறையாக தாங்கள் அ.தி.மு.க. வுக்கும், தி.மு.க. வுக்கும் எதிரானவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களே; அதைத் தாங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில் :- இப்போது சொல்வதை வைத்து எதையும் அறுதியிட்டு உறுதியாகக் கூறி விட முடியாது. அதைத் தான் “ஆரம்ப சூரத்தனம்”“ என்று அண்ணா சொன்னார். தேர்தல் நெருங்க நெருங்க, ஒவ்வொரு கட்சிக்கும் நிலைமை தெளிவாகும்; மாற்றங்கள் நிகழும். பொறுத்திருந்து பாருங்கள்! நீங்களே கேள்வியில் சில கட்சிகளைக் குறிப்பிட்டு சிறிய கட்சிகள் என்று கேட்டிருக்கிறீர்கள். சிறிய கட்சிகளுக்கும், வளர்ந்து பெரிய கட்சியாக ஆக வேண்டுமென்ற எண்ணம் இருப்பது இயல்புதானே?

கேள்வி :- தமிழகத்திலே உள்ள பா.ஜ.க., அ.தி.மு.க. வுக்கு தாங்கள் தான் எதிரானவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, அ.தி.மு.க. வின் தலைவி வீட்டுக்கே நேராகச் சென்று உணவருந்தினார். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில் :- “வெளிப்படைத் தன்மை” என்று சொல்லிக் கொண்டே திரை மறைவு காரியங்களில் திறமையைக் காட்டுகிறது பா.ஜ.க. மர்மங்கள் நிறைந்தது அ.தி.மு.க. இந்த நிலையில் நான் எப்படி கருத்துச் சொல்ல முடியும்? இவர்கள் அவர்களை ஏமாற்றுகிறார்களா? அல்லது அவர்கள் இவர்களை ஏமாற்றுகிறார்களா? என்பதைக் காலம் தான் கணித்துக் கூறும்.

ஸ்டாலின் வழிநடத்துவார்
ஸ்டாலின் வழிநடத்துவார்

கேள்வி :- அண்மைக் காலத்தில் மு.க. ஸ்டாலின் நடத்தி வரும் பேரணி களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அந்தப் பேரணிகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தமிழகத்தின் எதிர் காலத் தலைவராக மு.க. ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறார் என்று நினைக்கிறீர்களா?

பதில் :- கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கும் “நமக்கு நாமே”“ விடியல் மீட்புப் பயணம் தமிழக மக்களின் பேராதரவோடும், பாசம் மிகுந்த வரவேற்போடும், மாற்றாரும் மருளும் வகையில், மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு ஸ்டாலின் அன்றாடம் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடந்தன என்பதையெல்லாம் விரிவாகக் கூறி வருகிறார். “தி.மு. கழகத்தின் எதிர்காலம்”“ என்று நான் ஏற்கனவே கூறியதை அட்சரம் பிசகாமல் மெய்ப்பிக்கும் வகையில் தான் மக்களின் வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

கேள்வி :- கட்சித் தலைமைக்கு வாரிசாக ஸ்டாலினை நியமித்து அறிவிப்பதை எது தடுக்கிறது?

பதில் :- கழகம் நியமனக் கட்சியல்ல; மிகப் பெரிய ஜனநாயக இயக்கம்; பெரும்பான்மை விருப்பப்படியே இங்கு எல்லாம் நடக்கும்; என்று பல முறை சொல்லியாகி விட்டது. கழகத்தின் பொதுக் குழுவும், செயற்குழுவும் கூடி மேற்கொள்ள வேண்டிய முடிவினை, நான் ஒருவன் மட்டும் தனித்து எடுத்து அறிவித்து விட முடியாது. நான் அறிவிக்காமலேயே கழகத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தகுதி மிக்கவராக ஸ்டாலின் விளங்குகிறார் என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மை தான்.

2 ஜி வழக்கு தேர்தலில் தாக்கம் செலுத்துமா?
2 ஜி வழக்கு தேர்தலில் தாக்கம் செலுத்துமா?

கேள்வி :- 2 ஜி அலைக்கற்றை விவகாரம் 2016 பொதுத் தேர்தலில் தி.மு.க. வுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமா?

கலைஞர் :- 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கருத்தியலான இழப்பு (Notional Loss) குறித்து தனி நீதி மன்றம் விசாரித்து வருகிறது. இது 2016 சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நான் நம்புகிறேன்.

கேள்வி :-2016 பொதுத் தேர்தலில் தமிழகத் தேர்தலின் மிக முக்கிய மான பிரச்சினையாக தாங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

பதில் :- தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வெறுத்து ஒதுக்கும் செயல் திறனற்ற அதிமுக ஆட்சி தொடர வேண்டுமா? செயல் திறனை ஏற்கனவே ஐந்து முறை நிரூபித்துக் காட்டியிருக்கும் தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர்ந்திட வேண்டுமா? என்பது தான் 2016 சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் முக்கியமான பிரச்சினையாகும்.

கேள்வி:- வரும் தேர்தலில் ஊழல் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கக் கூடும். இந்த நிலையில் தி.மு.க. வின் இரண்டாம் நிலை தலைவர்கள் நீதி மன்ற வழக்குகளைச் சந்தித்து வரும் சூழ்நிலையில் – ஊழலுக்கெதிராக தாங்கள் வலுவான பிரச்சாரத்தை மேற்கொள்ள இயலுமா?

பதில் :- அ.தி.மு.க. வின் தலைவியே வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கை உச்ச நீதி மன்றத்திலே சந்தித்துக் கொண்டிருப்பதை மறந்து விட்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்!

Advertisements