’மோடியின் ஆட்சி விரைவில் முடியப்போகிறது’

மாட்டிறைச்சி விவகாரம், எழுத்தாளர் படுகொலைகள் குறித்து சிறுபான்மையினரை அச்சப்படுத்தும் வகையில் பாஜக-அதனுடன் தொடர்புடைய இந்துத்துவ அமைப்பினரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை பிரதமர் மோடி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கடந்த வாரம் எச்சரித்தது. இந்த அசாதாரண சூழல் நீடித்தால் தனது மதிப்பை உள்நாட்டு அளவிலும் உலக அளவிலும் இந்தியா இழக்க நேரிடும் என்றும் அது கூறியது.

இந்நிலையில் பொருளாதார நிபுணரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண்ஷோரி, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “தாத்ரி படுகொலை, ஹரியானாவில் தலித் குழந்தைகள் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் மோடி வேண்டுமென்றே மவுனம் காத்து வருகிறார். அவரது சகாக்கள் சர்சைக்குரிய வகையில் பேசுவதை தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர். மோடி இந்தியாவை அடிப்படைவாதச் சாக்கடைக்குள் தள்ளுகிறார்” என தனது கருத்தினை பதிவுசெய்தார்.

ஆனால், நாட்டில் நடந்துவரும் அசாதாரண சம்பவங்கள் குறித்து கருத்தோ, விளக்கமோ தெரிவிக்காத பிரதமர் மோடி,“சகிப்புதன்மை பற்றி பேசும் காங்கிரஸ்காரர்களுக்கு 1984–ம் ஆண்டு நவம்பர் 2–ந் தேதி நினைவு இருக்கிறதா? டெல்லியில் என்ன நடந்தது? சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சீக்கியர்கள் படுகொலை நடந்த இந்த நினைவு நாளில் சகிப்புத்தன்மை பற்றி பேச காங்கிரசுக்கு எந்த தகுதியும் இல்லை’ என்று திங்கள்கிழமை பேசியிருக்கிறார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இந்த சந்திப்புக்குப் பின் மாட்டிறைச்சி விவகாரம், எழுத்தாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி டெல்லியில் செவ்வாய்கிழமை பேரணி நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

பேரணியைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து வகுப்புவாத பிரச்னை, எழுத்தாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட சகிப்புத் தன்மைக்கு எதிரான நிகழ்வுகள் குறித்து முறையிட காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி பேசாத நிலையில் குடியரசுத் தலைவர் நான்கைந்து முறை இந்தியாவின் பன்முக கலாச்சாரம் குறித்து பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

“மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும்; பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளே, மத்தியில் காங்கிரஸ் கட்சியை விரைவில் ஆட்சிக்கு வரச் செய்யும்” என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“தலித் குழந்தைகள் கொலை செய்யப்பட்டதை நாய் மீது கல்லெறிதல் சம்பவத்துடன் ஒப்பிட்டு மத்திய அமைச்சர் பேசியிருக்கிறார். அந்தக் குழந்தைகள் ஒன்றும், நாய்கள் கிடையாது. அவர்கள், நம் நாட்டின் குடிமக்கள். நமது நாட்டின் எதிர்காலம். பாஜக, ஆர் எஸ் எஸ் அமைப்புகளின் எண்ணமே மக்களை பிரித்து ஆள்வதுதான்” என்று கடுமையாக சாடியிருக்கிறார்.

பாஜகவின் மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி மூன்று மாதங்களுக்கு முன் எமர்ஜென்ஸி போன்ற சூழல் நிலவுவதாக சொன்னது, தீர்க்க தரிசனம் மிக்க வார்த்தைகள் என்பதை தற்போதைய சூழலை நோக்கும்போது தெரிகிறது. மோடியை ஆதரித்த நாராயணமூர்த்தி போன்ற தொழிலதிபர்கள், ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார நிபுணர்கள், உலக அமைப்புகள் ஒருபுறம் இருந்தாலும் மோடிக்கு முன்னோடியாக இருந்து ரத யாத்திரை நடத்தி புகழ்பெற்ற அத்வானியின் வார்த்தைகளை புறம்தள்ளிவிட முடியாது. கடந்த மூன்று மாத சம்பவங்களும் அதையே சொல்லவருகின்றன. ராகுலின் பேச்சும் அதையே உணர்த்துகிறது!

 

 

Advertisements

One thought on “’மோடியின் ஆட்சி விரைவில் முடியப்போகிறது’

  1. 50 வருடம் இந்தியாவை ஆட்சி செய்தும் காங்கிரேஸ்காரர்களின் பதவிமோகம் குறையவில்லை இன்னும் 50 வருடத்திற் இதே கனவோடஉலாவ சொல்லுங்கள் உங்களுடைய ராகுலிடம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.