நாட்டில் நடக்கும் சகிப்புத்தன்மையற்ற சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எழுத்தாளர்கள், சினிமா கலைஞர்கள், அறிவியலாளர்கள் தங்களுடை விருதுகளை திருப்பி அளித்துக்கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து நடிகர் கமல் ஹாசனிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
“நான் எனக்கு அளித்த தேசிய விருதுகளைத் திருப்பித் தரமாட்டேன். சகிப்புத்தன்மை என்பது கொடுத்து வாங்குவதாகும். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை சகிப்புத்தன்மையற்ற சூழல் குறித்து நாம் விவாதம் செய்யவேண்டும். சகிப்புத்தன்மையற்ற போக்கு என்னிடம் கிடையாது. கடவுள் பக்தி இல்லாவிட்டாலும் எல்லா மதங்களிடமும் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்வேன்.
விருதுகளைத் திருப்பித் தருவதால் ஒன்றும் நடக்காது. நமக்கு விருதை அன்புடன் அளித்த அரசு அல்லது மக்களை அவமானப்படுத்துவதாகத்தான் இருக்கும். இதனால் உங்களுக்குக் கவனம் கிடைக்கும். ஆனால், கவனம் ஈர்க்க பல வழிகள் உள்ளன. விருதைத் திருப்பி அளித்தவர்கள் மிகவும் திறமைசாலிகள். விருதைத் திருப்பி அளிப்பதை விடவும் தங்கள் கருத்தைக் கட்டுரையாகப் பதிவு செய்தால் இன்னும் அதிக கவனம் கிடைக்கும். அவர்கள் விருதுகளைத் தங்களிடம் வைத்துக்கொண்டு நம்மைப் பெருமைப்படுத்தவேண்டும். அதேசமயம் தொடர்ந்து போராடவேண்டும்” என்று கூறியிருந்தார். வழக்கமான கமல் பாணி மழுப்பல் பதிலாக இருக்கிறது என விமர்சனங்கள் வந்தன.
“கமல், ரஜினி முதலானோர் எந்த அரசுடனும் தமக்கு விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் சமர்த்தர்கள். எனவே விருதை திருப்பித்தர அவசியமில்லை என்று கமல் கூறியதில் எனக்கு எந்த வியப்புமில்லை” என்கிற பத்திரிகையாளர் ஞாநி,
“திரைப்படம் முறையாகக் கற்பிக்கப்படவேண்டும் என்று பல தருணங்களில் பேசிவரும் கமல், திரைப்படக் கல்விக்கென்று இந்தியாவில் இருக்கும் முதன்மையான கல்வி அமைப்பான புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் 150 நாள் நடத்திய போராட்டம் பற்றி மோடி ஸ்டைலில் மௌனமாகவே இருந்தார் என்பதை மறக்கவேண்டாம்” என்றும் கமலின் கருத்து பற்றி பதிவு செய்திருக்கிறார்.
விஸ்வரூபம் திரைப்படம் வெளிவரும் தருவாயில் முஸ்லிம்களை மோசமாக சித்தரிப்பதாகக் கூறி முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகக் கூறிய கமல்ஹாசன், இந்த நிலை நீடித்தால் தான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்துத்துவ அமைப்புகளின் அச்சுறுத்தலால் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் அதுபற்றி கமல்ஹாசன் பேசவில்லை.
“விஸ்வரூபம் திரைப்படத்தினால் முஸ்லிம்கள் தங்களுக்கு ஆபத்து வரும் என்று நினைத்து எதிர்த்தபோது, கமல்ஹாசன் அதுகுறித்து கவலைப்படாமல், ஆத்திரப்பட்டார். வெளிநாட்டுக்குப் போய்விடுவேன் என்று வீரம் பேசினார். ஆனால், இன்று இந்திய அளவில் 70க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் திரைத்துறையினர், கலைஞர்கள் எல்லோரும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சகிப்பின்மை சூழலுக்கு எதிராக தங்கள் விருதுகளை திரும்பத் தந்துக்கொண்டிருக்கிறார்கள். இது உலக அளவில் கவனம் பெற்ற புரட்சியாக நடந்துகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் கமல்ஹாசன் விருதை தரமாட்டேன் என்று சொல்வதுகூட பிரச்சினை இல்லை. அதை நியாயப்படுத்துவதும் அதையே கொள்கை போல அறிவிப்பதும் மிகவும் வேதனை தரக்கூடிய செயல்” என்கிறார் மனித உரிமை செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான அ.மார்க்ஸ்.
மேலும் அவர், “மார்லன் பிராண்டோ போன்ற உலகத்தின் தலைச் சிறந்த கலைஞர்கள் திரைத் துறையில் நடக்கும் அநீதிகளைச் சுட்டிக்காட்டி, திரைத்துறையின் பெரிதும் மதிக்கப்படும் ஆஸ்கார் விருதை வேண்டாம் என மறுத்தார்கள். ரவீந்திரநாத் தாகூர் பிரிட்டீஷார் தனக்கு வழங்கிய சர் பட்டத்தை ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்துத் துறந்தார்.
ஆனால் சக எழுத்தாளர்கள், கலைஞர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தியாவின் புகழ்பெற்ற புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கிட்டத்தட்ட 5 மாத காலம் போராட்டம் நடத்தி, இன்னும்கூட உள்ளிருப்பு நிலையில் போராட்டத்தைத் தொடர்கிற சூழலில் எள்ளளவும் இரக்கம் இல்லாமால் கமல்ஹாசன் பேசி இருப்பது வழக்கமான அவருடைய மேட்டிமைத் தனத்தைத்தான் காட்டுகிறது. அவர் தன்னை பெரியாரியவாதியாகவும் பகுத்தறிவு கருத்தாளர் போலவும் அவ்வப்போது சொல்லிக்கொள்வது எத்தனை அபத்தம் என்று இதன் மூலம் வெளிப்படுகிறது” என்று தனது கருத்தை இப்போது.காமிடம் தெரிவித்தார் அ.மார்க்ஸ்.
நடிகர் கமல்ஹாசன் 1992-ஆம் ஆண்டு தயாரித்த தேவர் மகன் சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற இந்தியாவின் உயரிய கௌரவ பட்டங்களைப் பெற்றவர்.