ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் மீது முகநூலில் தாக்குதல்

vijayasankar

தமிழ்நாட்டிலிருக்கும் இலங்கை அகதிகள் முகாமின் நிலை, அவர்களின் எதிர்காலம் குறித்து புதன்கிழமை சென்னையில் கருத்தரங்கு நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் எம்.கே. நாராயணன் மீது காலணிகளை வீசினார் புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஃப்ரண்டலைன் ஆங்கில இதழின் ஆசிரியர் ஆர். விஜயசங்கர் தன்னுடைய முகநூலில் இதுபற்றி எழுதியிருந்தார்.

“தமிழ்நாட்டிலிருக்கும் இலங்கை அகதிகள் முகாமின் நிலை, அவர்களின் எதிர்காலம் குறித்து Frontline இதழில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் The Hindu Centre for Policy Research ஒரு அருமையான கருத்தரங்கை சென்னையில் நடத்தியது. நிகழ்வு முடிந்தவுடன் அதில் பங்கேற்ற முன்னாள் தேசிய பாதுகாப்புச் செயலாளர் கூட்டத்திலிருந்த ஒருவனால் தாக்கப்பட்டார். “அம்மா நிறைவேற்றிய தீர்மானத்தை நீ மதிக்கவில்லை” என்று கூச்சலிட்ட அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அதிர்ச்சியளித்த இந்த வன்செயல் கண்டனத்திற்குரியது” என்ற விஜயசங்கரின் அந்தப் பதிவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து பின்னூட்டமிட்டிருந்தனர். அதில் ஒரு பின்னூட்டம் ஆட்சேபத்துக்குரிய வகையில் இருந்ததாகச் சொல்லியிருக்கிறார் விஜயசங்கர்.

“எதிர்வினையாக ஒரு நபர் “உனக்கும் ஒரு மகள் இருக்கிறாள்” என்று சொல்லி என் மகளின் படத்தைப் போட்டு இசைப்பிரியாவை நினைவிருக்கிறதா என்று கேட்டிருந்தார். அதை நான் அழித்துவிட்டு அந்த நபரையும் பிளாக் செய்துவிட்டேன்” என்றவர் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தன்னுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

“இசைப்பிரியாவிற்கும் பிற இலங்கைத் தமிழ் மக்களுக்கும் நிகழ்ந்த கொடுமைகள் உலகில் வேறு யாருக்குமே நடக்கக்கூடாது. 1983-இல் வெளிக்கைடைச் சிறையில் தமிழர்கள் மீது நடந்த கொடூரத் தாக்குதலுக்கு எதிராகத் தமிழகமே பொங்கி எழுந்தது. திருச்சியில் நடந்த மாணவர் போரட்டங்களில் நான் கலந்து கொண்டேன். பல போராளிக்குழுக்களுக்கு ஆதரவாக நிதியும் திரட்டிக் கொடுத்திருக்கிறேன்” என்று சொன்னவர், இதுபோன்ற அவதூறு, மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

“1984- இல் சீக்கியருக்கு எதிரான வன்முறை நடந்தபோது மிகவும் அபாயகரமான சூழலில் பல சீக்கியர்களை நானும் என்னுடைய இந்திய மாணவர் சங்க தோழர்களும் காப்பற்றியிருக்கிறோம்.
பள்ளியில் படிக்கும் போதெ எமர்ஜென்சி அக்கிரமங்களைச் சந்தித்த அனுபவமும் உண்டு. அதனால் இந்த மாதிரி மிரட்டல்களுக்கு அஞ்சுபவன் நானல்ல. அச்சம் இருந்தால் நான் பத்திரிக்கைத் துறைக்கு வந்திருக்கவே மாட்டேன்” என்று தனது முகநூல் பதிவில் எழுதியிருக்கிறார்.