பீகார் தேர்தல் : கூட்டணிகளின் பலமும் பலவீனமும்

நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் பீகாரின் தேர்தல் முடிவுகள் இதோ நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மத்தியில் ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்கு இது சோதனையான தேர்தல். 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நிதிஷ்குமாரும் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்கிற கேள்வியை எழுப்பிய தேர்தல். பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் நிதிஷ்குமார் தலைமையில் ஒரு கூட்டணியும் இந்தத் தேர்தலில் மோதினார்கள். இந்தக் கூட்டணிகளின் பலம், பலவீனம் என்ன?

பாஜக கூட்டணி:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி,ஹிந்துஸ்தானி அவாம் மோட்சா போன்ற கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன.

பலம்:

* மக்களவைத் தேர்தலில் மொத்தமிருந்த 27 தொகுதிகளில் 22 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றியைக்கண்டது பாஜக. ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் இருந்தபோது துணை முதல்வராக இருந்த சுஷில்குமார் மோடி பாஜகவின் முக்கியமான பலம். அந்த பலம் மக்களவைத் தேர்தலில் பலன் கொடுத்ததுபோல சட்டப்பேரவைத் தேர்தலிலும் பலம் கொடுக்கும் என்று பாஜக நம்புகிறது.

* மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் வளர்ச்சித் திட்டங்கள் விரைவாக நடக்கும் என்கிற கோஷம்.

* பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட சிரத்தையுடன் பீகார் தேர்தலில் வாக்கு சேகரித்தது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட பிரச்சாரக் கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.

* பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்.

பலவீனம்

* துணை முதல்வராக நிதிஷ் குமாரின் ஆட்சியில் பங்பெற்ற சுஷில்குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தது.

* பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர்களின் படங்களே தேர்தல் பேனர்களில் பயன்படுத்தப்பட்டதால் உள்ளூர் பாஜகவினரிடையே ஏற்பட்ட அதிருப்தி.

* அடிக்கடி ரத்தான தேர்தல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள். நரேந்திர மோடி பங்கேற்க இருந்த மொதுக்கூட்டங்கள் மூன்று முறை ரத்தாகின. ஜார்க்கண்ட் பாஜக முதல்வர் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் ரத்தானதால் தொண்டர்கள் நாற்காலி, மேசைகளை அடித்து நொறுக்கினர்.

* இடஒதுக்கீடு கூடாது என்று பாஜகவின் நெருங்கிய தொடர்புள்ள அமைப்புகள் தொடர்ந்து சொல்லிவருவது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் உள்ள பீகாரில் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரதமரே இடஒதுக்கீட்டுக்கு பங்கம் ஏற்படாது என்று அறிவித்த பின்னும் மக்கள் அச்சம் விலகுமா என்பது சந்தேகமே..

* வளர்ச்சியை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த பாஜக, அதைச் செய்யாமல் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வந்ததும் சமீப காலமாக மாட்டிறைச்சியை முன்வைத்து நடந்து வரும் அரசியலும் நிச்சயம் பாஜகவுக்கு பின்னடைவைத் தரும் முக்கிய பலவீனமாக இருக்கும்.

மகா கூட்டணி:

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரஸ் இணைந்து மகா கூட்டணியை அமைத்தன.

பலம்:

* பாஜக ஆதரவுடன் பீகாரில் ஆட்சியமைத்திருந்த ஜக்கிய ஜனதா தளம், நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, பாஜகவுடன் தன்னுடைய உறவை முறித்துக்கொண்டார்.வெறுப்பு அரசியல் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இது நிதிஷ் தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துவிட்டது.

* தலித்துகள், முஸ்லிம்களை கணிசமான அளவில் கொண்டிருக்கும் பீகாரில் சிறுபான்மையினரின் நலனில் அக்கறையுள்ள கூட்டணியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டது மகா கூட்டணி.

* 10 ஆண்டுகால நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி மீது மக்களுக்கு பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்பதும் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாகப் பார்க்கப்படுகிறது.

* பெண்களுக்கு முக்கியத்துவம் தந்த நிதிஷின் திட்டங்கள் தேர்தலில் முக்கிய பங்காற்றும் என்று சொல்லப்பட்டது. மேடை தோறும் நிதிஷ், பெண்களை வாக்குச் சாவடிக்கு வரும்படி அரைகூவல் விடுத்தார். அதுபோலவே ஆண்களைவிட பெண்களின் வாக்கு அளிப்பு சதவிகிதம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பலவீனம்

* மத்திய அரசை பகைத்துக்கொண்டு மாநில மக்களுக்கு பெரிய நன்மைகள் எதுவும் விளைந்துவிடாது என்று பாஜக கூட்டணி முன்வைத்த வாதம்.

* முன்பு பரம எதிரிகளாக நின்ற லாலுவும் நிதிஷும் கைக் கோர்த்தது.

* மக்களவைத் தேர்தலில் சந்தித்த பின்னடைவு

* ஊழல் செய்த லாலுவுடன் கூட்டணி, மீண்டும் காட்டாட்சியை ஏற்படுத்திவிடுமோ என்கிற பயம்.

 

Advertisements