‘பீகார் தீர்ப்பு என் தந்தைக்கு கிடைத்த அஞ்சலி’ முகமது அக்லக்கின் மகன்

alaqe

கடந்த மாதம் உத்தர பிரதேச மாநிலத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முகமது அக்லக் அடித்துக் கொல்லப்பட்டார்; அவருடைய இளைய மகன் கடுமையாக தாக்கப்பட்டார். உலகம் முழுவதில் கடும் கண்டனத்துக்கு உள்ளானது இந்தச் சம்பவம். இதைக் கண்டித்து இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள், கலைஞர்கள் தங்களுடைய மதிப்பிற்குரிய விருதுகளை துறந்தனர்.

இந்நிலையில், பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் ஆளும் பாஜக அரசுக்கு மிகக் கடுமையான சோதனையாக அமைந்தது. அந்தச் சோதனையில் கடும் தோல்வியைச் சந்தித்தது வெறுப்பு அரசியலை முன்னெடுத்த பாஜக.

பீகார் மக்கள் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது அக்லக்கின் மூத்த மகன் முகமது சர்தாஜ், “பீகார் மக்கள் தன்னுடைய தந்தைக்கு மிகச் சிறந்த அஞ்சலியைச் செலுத்தியிருக்கின்றனர்” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“வெறுப்பு அரசியலுக்கு இந்தியாவில் இடமில்லை என்பதையே பீகார் தேர்தல் உணர்த்துகிறது. மதவாதத்துக்கு எதிராக மக்கள் தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள். மதத்தை முன்வைத்து சண்டை போடுவதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். அரசியல் அதிகாரத்துக்காக நாட்டை பிளவுபடுத்தி விடாதீர்கள் என்று இந்த நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார் சர்டாஜ்.

 

Advertisements