பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு: மன்னிப்புக் கேட்டது NDTV

prannoy roy

நடந்து முடிந்த பீகார் தேர்தலில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக அதிக இடங்களைப் பிடித்து ஆட்சி அமைக்கும் என்று சொல்லியிருந்தது NDTV. பாஜக 125 இடங்களைக் கைப்பற்றும் என்றும் மகா கூட்டணி 105 இடங்களைக் கைப்பற்றும் என்று NDTV கருத்துக் கணிப்பு சொன்னது. இந்நிலையில் அதற்கு நேர்மாறாக, சொல்லப்போனால் அதைவிட, அதிகமான இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றது மகா கூட்டணி. பாஜக படுதோல்வி கண்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரணாய் ராய், குழப்பம் ஏற்படுத்திய முடிவுகளுக்காக மன்னிப்புக் கேட்டார்.

“30 ஆண்டுகால அனுபவத்தில் பல தேர்தல்களை கண்டிருக்கிறோம்.தேர்தல் செய்திகளைத் தருவதிலும் அலசல்களைச் செய்வதிலும் NDTV தனிமுத்திரை பதிக்கிறது. இந்நிலையில் பீகார் தேர்தலில் தவறு நேர்ந்திவிட்டதை நாங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அதற்காக நாங்கள் பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம்” என்று பேசியிருக்கும் பிரணாய் ராய், கருத்துக் கணிப்புகளுக்கு இந்த ஆண்டு மோசமான ஆண்டு என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்.

“கிரீஸ் தேர்தலில் கருத்துக் கணிப்பு தோற்றது. அதேபோல பிரிட்டனில் கருத்துக் கணிப்பு பொய்த்தது. துருக்கியில் கருத்துக் கணிப்பு பொய்த்தது.

இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். செய்திகளை வழங்கும் நிறுவனங்களை நம்பித்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. இந்திய சேனல்கள் குறிப்பிட்ட ஒரு செய்தி ஏஜென்ஸியை நம்பியே உள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலையில் எல்லா செய்தி தொலைக்காட்சிகளும் ஒரு செய்தி ஏஜென்ஸி தந்த தகவலின் அடிப்படையில் பாஜக முன்னிலையில் இருப்பதாகவே செய்தி வெளியிட்டன. இதுவும் தவறுகள் நேர ஒரு காரணம்” என்றவர் NDTV, நடுநிலையான, தவறுகள் அற்ற செய்திகளைத் தருவதையே விரும்புவதாகத் தெரிவித்தார்.

NDTV வெளியிட்ட வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து, சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

 

Advertisements