அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நிதிஷ்-லாலு வெற்றி ஃபார்முலா!

bihar-lalu-nitish

சமீப ஆண்டுகளில் இரண்டு தேர்தல்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. ஒன்று டெல்லி சட்டப்பேரவை தேர்தல், இரண்டாவது பீகார் தேர்தல். இரண்டுமே எதிர்ப்பார்ப்புகளைத் தாண்டி டெல்லியில் ஆம் ஆத்மியும் பீகாரில் மகா கூட்டணியும் வெற்றியைக் குவித்த தேர்தல்கள்.

பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழலற்ற, மதவாதம் இல்லாத, வளர்ச்சி நோக்கிய மாற்றுத் திட்டங்களுடன் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. ஆனால் அவற்றால் ஏன் வெற்றி பெறமுடிவதில்லை? டெல்லி, பீகார் தேர்தல்கள் சொல்லும் பாடம் என்ன? நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி-லாலு கூட்டணியின் வெற்றி ஃபார்முலா என்ன?

ஒற்றுமையே பலம்

பீகாரில் வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்த நிதிஷ், ஊழலுக்குப் பெயர்பெற்ற தன்னுடைய பரம எதிரியாக இருந்த லாலு பிரசாத்துடன் கூட்டணி வைத்தது சந்தர்ப்பவாதம் என்று பாஜகவினரால் குற்றம்சாட்டப்பட்டது. 2014-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் அமோக வெற்றிக்கு அடுத்தபடியாக லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் அதிக இடங்களைப் பிடித்திருந்தது. அதனுடைய வாக்கு வங்கியும் அதிகமாகியிருந்தது.

லாலுவும் நிதிஷும் வி.பி.சிங்கிடம் அரசியல் பாடம் கற்றவர்கள். இருவருடைய கட்சிக் கொள்கைகளுக்கும் பெரிதாக வித்தியாசமில்லை. அதனால் அவர்கள் இருவரும் கொள்கைகளில் பாரதூரத்தில் இருந்த பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்ததை சந்தர்ப்பவாதமாக பீகார் மக்கள் பார்க்கவில்லை. அதைத் தேர்தல் வெற்றி மூலம் அங்கீகரித்திருக்கிறார்கள்.

நம்மூரில் அதிமுக, திமுகவின் ஊழல்களை விமர்சிக்கும் விஜயகாந்துக்கு ஊழலுக்கு எதிரான மாற்றாக சொல்லிக்கொள்ளும் மக்கள் நலக் கூட்டணியில் இணைய யோசிப்பதில் குறுகிய கால நலன்கள் மட்டுமே உள்ளன. தேமுதிகவுக்கு மட்டுமல்ல தமிழக மாற்று அரசியல் முன்னெடுக்கும் பல கட்சிகளின் நிலைப்பாடும் அத்தகையதே. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தலை இணைந்து சந்திப்பார்களா என்பதே சந்தேகத்துக்குரியதுதான்!

ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்தல்

நிதிஷ்-லாலு கூட்டணியின் மிக முக்கியமான வெற்றி ஃபார்முலா, அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து வாக்குகளாக மாற்றிக்கொண்டார்கள் என்பதே. பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் என சாதி, வர்க்கத்தைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற ஒரே குடையின் கீழ் இவர்கள் அளித்த வாக்குகளே மகா கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தந்திருக்கிறது. பள்ளிச் செல்லும் பெண்களுக்கு இலவச சைக்கிள் திட்டம், பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு போன்ற நிதிஷின் திட்டங்கள் பெண்களின் வாக்குகளை கணிசமாகப் பெற்றன. அதோடு இந்தத் தேர்தலில் அரசு வேலைகளில் பெண்களுக்கு 35 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தது மகா கூட்டணி.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு, மகா கூட்டணிக்கு தூண்டில் இரையாகப் பயன்பட்டது. இடஒதுக்கீட்டால் பலனடைந்த பீகார் மக்களுக்கு ஏற்பட்ட பயம், மகா கூட்டணிக்கு வாக்குகளாக மாறியது. லாலு பிரசாத் மேடைக்கு மேடை இந்தப் பிரச்சினையை முன்வைத்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியல் கட்சிகள் எந்த விதத்திலும் சமூக மாற்றத்துக்கு வித்திடாத இலவச பொருட்களைத் தருவதையே விரும்புகின்றன. குறுகிய கால நோக்கம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பலன் தருவதில்லை. டிவி தருவதோ, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் தருவதோ இனிமேலும் பலன் தருமா என்பதை அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும். அதிமுக அரசின் இலவச சைக்கிள், மடிக்கணினி திட்டங்கள், கிராமப்புற மக்களுக்கு ஆடு, மாடு வழங்கும் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. இத்தகைய திட்டங்களோடு சமூக மாற்றத்தை உண்டாக்கும் அரசுப் பணிகளில் பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு போன்றவற்றை கொண்டுவருவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

திறமையாளர்களை பயன்படுத்துதல்

தொழிற்நுட்ப மேலாண்மை வல்லுநரான பிரசாந்த் கிஷோரும் டெல்லி பல்கலைக் கழகத்தின் சமூகவியல் பேராசிரியரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசிய செய்தித் தொடர்பாளருமான பிரகாஷ் ஜா ஆகிய இருவரும் மகா கூட்டணியின் வெற்றி ஃபார்முலாவை வடிவமைத்தவர்களாக கைக்காட்டப்படுகிறார்கள்.

மகா கூட்டணியின் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலிருந்து, சமூகத்தின் வேர் வரைச் சென்று மக்களின் பிரச்சினைகளை தேவைகளை சேகரித்து அதை வைத்து தேர்தல் பிரச்சார உத்தியை வடிவமைத்தவர்கள் இவர்கள். சமூகத்தின் வேர்களைத் தேடிச் சென்றதே டெல்லியில் ஆம் ஆத்மியின் வெற்றிக்காரணமாக அமைந்தது என்பது இந்த இடத்தில் சுட்டிக்காட்டத் தகுந்தது.

தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள வைகோ அநேகமாக மக்களை பாதிக்கும் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலித் பிரச்சினைகளை அறிந்து வைத்திருக்கிறது(தலித் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கிறதா என்பது கேள்விதான்) அதேபோல மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலித், சிறுபான்மையினர், விவசாயிகள், தொழிலாளர் பிரச்சினைகளுக்கு களத்தில் இறங்கிப் போராடுகிறது. ஆனால், இவர்களால் இந்த அடித்தள மக்களை ஒன்றிணைக்கும் வல்லமை இல்லை. அதை வசமாக்க சரியான திட்டமிடல் தேவை, அதை நிபுணர்களால் மட்டுமெ செய்ய முடியும்.

எதிரியைப் பேச விடுங்கள்

எதிரியை பேச விட்டுப் பார்ப்பது ஒரு வகை தந்திரம். அதை சரியாகச் செய்தார்கள் லாலுவும் நிதிஷும். நாட்டின் பிரதமே நேரடியாக களத்தில் இறங்கில் 40 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் என்றால் எத்தகைய தலைவருக்கும் கலக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை மிக சாதுர்யமாகக் கையாண்டது மகா கூட்டணி.

மோடியின் பேரணி, பொதுக்கூட்டம் நடந்த பிறகே, நிதிஷின் கூட்டம் நடக்கும். மோடி என்ன பேசினாரோ அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்தக் கூட்டத்தில் நிதிஷ் பேசுவார். லாலு தன்னுடைய நகைச்சுவையான பேச்சு மூலம் பாஜகவினரை விமர்சனம் செய்தார். படோபடமாக நடந்த மோடியின் கூட்டங்களைப் போல் அல்லாமல் நிதிஷின் கூட்டங்கள் இயல்பாக இருந்தன.

பாக்சர் என்ற இடத்தில் நரேந்திர மோடியின் பேச்சும், அமித் ஷா ரக்சல் என்ற இடத்தில் பேசியது மக்களை பிளவுபடுத்தக் கூடியவையாக இருந்தன. பிரதமரின் மாண்பை குலைப்பவையாக அவை இருந்தன என்று விமர்சனம் வைக்கப்பட்டது. நிதிஷின் பதிலடி பேச்சு அவரை மரியாதைக்குரிய அரசியல்வாதியாக மக்கள் முன் நிறுத்தியது.

தமிழக அரசியலில் பதிலடி, விமர்சனம் என்பது சில நேரங்களில் கீறங்கிவிடுவதுண்டு. அதற்கொரு உதாரணம் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஜெயலலிதா குறித்த விமர்சனம். தமிழகத்தில் சரிந்திருந்த காங்கிரசின் செல்வாக்கை சரிசெய்துகொண்டிருந்த இளங்கோவனின் மோடி-ஜெயலலிதா சந்திப்பு குறித்த பேச்சு அவருடைய இமேஜை சரித்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஊடகத் தொடர்பு அவசியம் மன்னரே!

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு பெரும்பாலான ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து செய்திகளை வெளியிட்டன. நரேந்திர மோடியின் பீகார் தேர்தல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் தேசிய தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. தாத்ரி படுகொலைக்கும் எழுத்தாளர்கள் சகிப்பின்மைக்கு எதிராக அறிவிஜீவிகள் முன்னெடுத்த போராட்டத்துக்கும் வாய்த் திறக்காத மோடி, தேர்தல் பிரச்சார மேடைகளில் இடைவிடாமல் பேசினார்.

ஆனால் நிதிஷ் தனக்குக் கிடைத்த ஊடக வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். தனது உறுதியான தெளிவான கருத்துக்களை ஊடகங்கள் முன்வைத்தது மகா கூட்டணி. ஊடகங்களில் பேசியது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

தேமுதிக தலைவர் எங்களுக்கு ஊடகங்களின் தயவு தேவையில்லை, நாங்கள் மக்களிடம் நேரடியாகப் பேசிக் கொள்கிறோம் என்கிறார். ஊடகமே வாழ்க்கையாகிவிட்ட இந்தக் காலத்தில் இப்படி பேசுவதற்குப் பெயர்தான் அறியாமை. நேரடியாக எல்லா மக்களையும் தேவையான நேரத்தில் சந்திக்க முடிவதில்லை. அதை ஊடகங்கள் எளிமையாக்குகின்றன. ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் சமூக வலைத்தளங்கள் மூலம் இன்னும் பல லட்சம் பேரை சென்றடைகின்றன. இதை உணராமல் 20 ஆண்டுகள் பிந்தைய அரசியல் செய்தால், 10, 20 சீட்டுகளுக்காகத்தான் கணக்குப் போட வேண்டியிருக்கும்.

விஜயகாந்த் மட்டுமல்ல, தமிழக அரசியல்வாதிகள் பெரும்பாலானவர்கள் ஊடகத்தொடர்பில் மோசமான நிலையில் இருக்கிறார்கள். செய்தி தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின் இந்த நிலை மாறியிருக்கிறது என்றாலும் ஊடகத் தொடர்ப்பு இன்னும் பலப்பட வேண்டும் என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 

Advertisements

One thought on “அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நிதிஷ்-லாலு வெற்றி ஃபார்முலா!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.