’பின்னூட்டமிடுவதற்கென்றே பணிக்கப்பட்ட ஆட்கள்’ பங்கஜ் மிஸ்ரா சொன்னது நிஜமானது!

கார்டியனில் வெளியான எழுத்தாளர் பங்கஜ் மிஸ்ராவின் கட்டுரையின் சில பகுதிகளை வெளியிட்டிருந்தோம். அதற்கு பின்னூட்டமிட்டிருந்த சிவா என்கிற நபர் ‘மோடி மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். தேசத்திற்கு எதிரான உங்களை போன்றோரை ஒடுக்கினலே தேசம் நன்றாக வளரும். எங்கள் போன்றோரின் அதரவு எப்போதும் ஒரு தன்மானம் உள்ள எங்கள் இந்திய பிரதமருக்கு உண்டு. உங்களை போன்ற நாலாம் தர பத்திரிக்கைகளால் எங்கள் மோடியை ஒன்றும் செய்ய முடியாது. அடக்கி வாசியுங்கள் புல்வுருவிகளே’ என்று குறிப்பிட்டிருந்தார்.

கார்டியனில் பங்கஜ் மிஸ்ரா தன்னுடைய கட்டுரையில் ‘மோடி துதிபாடி’ என்று இவர்கள் குறித்தும் எழுதியிருந்தார். அவர் இப்படி எழுதுகிறார் “வெள்ளையர்களின் தேசத்தில் மரியாதைக் குறைவாக நடத்தப்படும், பெரும்பாலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இனி வரும் காலம் இந்தியர்களுக்கானது என்று ஊதிப் பெருக்கப்பட்ட மோடி பலூனில் தங்களுடைய சுயத்தை தேடிக்கொள்கிறார்கள். மோதி துதிபாடிகள் என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கப்படும் அவர்கள் எல்லா இடங்களிலும் உருவாகியிருக்கிறார்கள். சிறு நகரங்களில் இந்து – முஸ்லிம் காதலுக்கு எதிராக கொடி பிடிக்கும் வெறியர்களிலிருந்து பத்திரிகையாளர் ஸ்வபந்தாஸ் குப்தா போன்றோர் வரை இந்த வகையில் அடங்குவர்.

நரேந்திர மோடியை முன்னெடுத்த APCO போன்ற மத்திய ஆசிய அதிகார மையத்துடன் இணைந்து பணியாற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்கள், சமூக வலைத்தளங்களில் ‘ராணுவம்’ போன்ற ஆட்களை நியமித்திருக்கிறது. இவர்களுடைய பணியே மோடி மீது எழும் விமர்சனங்களுக்கு அத்தகைய விமர்சனம் எழுதும் பகுதிகளுக்குச் சென்று பின்னூட்டம் இட்டு பயமுறுத்துவதான்” என்கிறார் பங்கஜ் மிஸ்ரா.

பங்கஜ் மிஸ்ராவின் கட்டுரை வெளியான இரண்டு மணிநேரத்தில் அதை நாம் நேரடியாகப் பார்க்கிறோம். மோடி மீதான விமர்சனத்தை மட்டுமல்ல, மாட்டிறைச்சி பற்றி உண்மைகளை சொன்னால் கூட இவர்கள் கட்டுரை எழுதியவர்களை விடுவதில்லை. காசுக்கு பணியாற்றும் இவர்களுக்கு எதிராக தன்னெழுச்சியாகவே மக்கள் விழித்தெழுந்துவிட்டார்கள் என்பதையும் இவர்களுடைய அறிவியல் பூர்வமான ‘தகவல் தொடர்பு’ மூளை செயலிழந்து வருகிறது என்பதையும் இவர்கள் உணர்ந்தாக வேண்டும்.

 

Advertisements