’இந்தியாவில் கருத்து சுதந்திரத்தை காப்பாற்றுங்கள்’ பிரிட்டன் பிரதமருக்கு உலக எழுத்தாளர்கள் கோரிக்கை

மூன்று நாள் பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இந்திய பிரதமராக பதவியேற்றப் பின் கிட்டத்தட்ட 25 நாடுகளுக்கு மேலாகச் சென்றிருக்கும் மோடிக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரிட்டன் பயணம் பல சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

முதன்மையான காரணம் சமீப மாதமாக நடந்துவரும் எழுத்தாளர்களின் விருதைத் திரும்ப அளிக்கும் போராட்டமும், அதையொட்டி மற்ற துறை வல்லுநர்களும் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து விருதைத் துறந்து போராட்டத்தில் இணைத்துக் கொண்டதுமாகும்.

கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து எழுத்தாளர்களின் குரல்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது எழுத்தாளர்களுக்கான சர்வதேச ‘பென்’ அமைப்பு. தற்சமயம் பிரிட்டன் சென்றிருக்கும் மோடியிடம் ‘இந்தியாவின் கருத்துச் சுதந்திரத்தை காப்பாற்ற’ பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வலியுறுத்த வேண்டும் என்று அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது.

“எழுத்தாளர்களுக்கான அமைப்பு என்கிற வகையில் உலகில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான செயல்பாடுகளை நாங்கள் கண்டிக்கிறோம். அந்த வகையில் இந்தியாவில் அதிகரித்துவரும் மாற்றுக்குரல்களுக்கு எதிரான வன்முறைகள், பழமைவாதங்கள் மீது விமர்சனம் வைக்கும் பகுத்தறிவாளர்களின் கொலைகள், மதவாத செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை” என்று கூறியிருக்கும் பென் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை,

“மூன்று நாள் பயணமாக பிரிட்டன் வந்திருக்கும் இந்திய பிரதமரிடம் நீங்கள்(டேவிட் கேமரூன்)இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். அதோடு அவருடைய நாட்டில் கருத்துச் சுதந்திரம் எந்த வகையில் மதிக்கப்படுகிறது என்பது குறித்து நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும்படி அவரிடம் நீங்கள் சொல்லவேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் பிரபல எழுத்தாளர்கள் சல்மான் ருஷ்டி,நீல் முகர்ஜி, மேகி கிப்சன் உள்பட 200 எழுத்தாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த கடிதத்தில் எம்.எம்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் போன்றோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். அதைக் கண்டித்து எழுத்தாளர்களின் போராட்டம் போன்றவை விவரிக்கப்பட்டுள்ளன. புத்தக வெளியீட்டில் மைவீச்சு, பாகிஸ்தான் பாடகரின் நிகழ்ச்சிக்கு வந்த மிரட்டல் போன்ற சம்பவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

“மனித உரிமையை நிலைநாட்டுவதில் குறிக்கோளுடன் செயல்படும் பிரிட்டன், இந்திய பிரதமரிடன் மேலே சொன்ன விஷயங்கள் குறித்து பேச வேண்டும். எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கலைஞர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி கருத்து சுதந்திரத்தை பேணிக் காக்க சொல்லுங்கள். இவை இன்றி அமைதியான சமூகம் சாத்தியமாகாது” என்று எழுத்தாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisements