கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துக்கு செல்ல மோடிக்கு எதிர்ப்பு

மூன்று நாள் பயணமாக இங்கிலாந்து புறப்பட்டிருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அங்கு தொழிலதிபர்கள் பலரைச் சந்திக்கிறார், இங்கிலாந்தின் மிகப் பெரிய வெம்பில்ளே ஸ்டேடியத்தில் இங்கிலாந்து வாழ் இந்தியர்களிடையே பேசவிருக்கிறார், எலிசபெத் ராணியுடன் விருந்து உண்ணவிருக்கிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துக்கும் செல்லவிருந்தார் மோடி. ஆனால், பல்கலைக் கழக பேராசிரியர்கள் சிலர் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக துணைவேந்தார் மோடி அழைப்பு விடுத்திருந்ததை அடுத்து, பல்கலைக் கழக மாணவர்கள், பேராசிரியர்களும் கடிதம் ஒன்றை துணை வேந்தருக்கும் அனுப்பியதாக ஸ்டேஸ்மேன் இதழ் தெரிவித்துள்ளது.

அதில், “இந்தியாவில் பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக்கண்டித்து எழுத்தாளர்கள், கல்வியாளர்களும் தங்களுடைய மதிப்பிற்குரிய விருதுகளை திருப்பி அளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில்தான் இதற்குக் காரணமாக இருக்கும் பாஜக அரசுக்கு தலைமை தாங்கும் மோடிக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். மோடி பல்கலைக் கழகத்துக்கு வந்தால் பல்கலைக் கழகத்தின் மரியாதை பாதிக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்று தெரிந்ததால் மோடியின் கேம்பிரிட்ஜ் விஜயம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

Advertisements