இந்தியாவில் சகிப்பின்மை இல்லை: மோடி இங்கிலாந்தில் விளக்கம்

இந்தியாவில் சகிப்பின்மை இருக்கிறதா இல்லையா என்பது குறித்து இந்திய மக்களின் பிரதமராக தெளிவுபடுத்தாத இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும்பொருட்டு சென்றிருக்கும் பிரிட்டனில் ‘இந்தியாவில் சகிப்பின்மை இல்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.

வியாழக் கிழமை பிரிட்டன் சென்ற இந்திய பிரதமருக்கு அரசு மரியாதை அளித்து கவுரவித்தது பிரிட்டன் அரசு. டேவிட் கேமரூனுடன் ஒன்பது பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பாதுகாப்புத் துறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மோடி, பிறகு பிரிட்டன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது நாட்டில் அதிகரித்துவரும் சகிப்பின்மை சூழல் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மோடி, “அரசியலமைப்புச் சட்டம் இந்தியர் ஒவ்வொருவரின் சுதந்திரத்தையும் கருத்தையும் பாதுகாக்கிறது” என்றவர்,

“இந்தியா காந்தியும் புத்தரும் வாழ்ந்த பூமி. இங்கே சகிப்பின்மைக்கு இடமில்லை. இந்தியாவின் எந்தப் பகுதியில் சகிப்பின்மைக்கு எதிரான சம்பவங்கள் நடந்தாலும் அதற்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று விளக்கம் கொடுத்தார்.

மோடி பத்திரிகையாளர்களை சந்தித்த இடத்துக்கு அருகிலேயே மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சீக்கியர்கள், தலித்துகள், இஸ்லாமியர், தமிழர்கள் என பலதரப்பட்ட பிரிட்டன் வாழ் இந்தியர்கள் பங்கெடுத்தனர்.

Advertisements