பாரீஸ் தாக்குதல்: யாரை பயமுறுத்த?

paris papers

சார்லி ஹெபடோ தாக்குதல்

2015-ஆம் ஆண்டு ஜனவரி ஏழாம் தேதி சார்லி ஹெபடோ என்ற கார்டூன் பத்திரிகை அலுவலகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். நிதம்நிதம் மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை போகிறபோக்கில் கடந்து போகிற மேற்குலகம் சார்லி ஹெபடோ தாக்குதலை உலகின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக வர்ணித்தது.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சார்லி ஹெபடோ பரப்பிய வெறுப்பை, இந்தத் தாக்குதல் மூலம் இஸ்லாமியருக்கு எதிரான ஃபோபியோவாக ஊடகங்கள் முன்னெடுத்தன. பிரான்ஸில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர், இஸ்லாமியர்களை கண்காணிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன.

அகதிகள் பிரச்சினை

கடந்த ஒரு வருட காலமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அகதிகள் வருகையை முறைப்படுத்தவும் அல்லது முற்றிலுமாகத் தடுக்கவும் ஏராளமான ‘நடவடிக்கை’களை எடுத்து வருகின்றன.

பாரீஸ் தாக்குதல்

இந்நிலையில் பாரீஸ் நகரத்தின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று இதுவரை வெளியாகவில்லை. பாரீஸின் வீதிகள் மரண ஓலத்தாலும், சடலங்களாலும் நிரப்பியது என்கின்றன ஊடகங்கள். அரசு தரப்பில் இதுவரை 150 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

மக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பது மட்டுமல்லாமல், எட்டு இடங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்திருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடி எதுவும் அணியாமல் இருந்ததாகவும் அவர்கள் இளைஞர்களாக இருந்தனர் என்று அவர்களை கண்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவில் வளரும் பாசிசம்

ஒருபுறம் கருத்துச் சுதந்திரம், சுதந்திரமான சிந்தனை என்று மேற்குலம சொல்லிக்கொண்டிருக்க, மற்றொரு புறம் இனவெறி, மதவெறியை முன்னெடுக்கும் பாசிச சக்திகளும் மேகமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஹிட்லர், முசோலினியின் தடை செய்யப்பட்ட சின்னங்களை, பெயர்களைப் பயன்படுத்தும் சில அமைப்புகள், கருப்பின மக்கள், ஆசிய – ஆப்பிரிக்க மக்கள், இஸ்லாமியர்களை குறிவைத்து வன்முறைகளில் இறங்கி வருகிறது. இந்த அமைப்புகளுக்கு ஆளும் அரசுகள் ஆதரவு அளிக்கின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசுகளே முன்னெடுக்கும் பயங்கரவாதம்

“பிரான்ஸில் பல இடங்களில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல நூறு பேர் பிணையில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன, கடும் கண்காணிப்புச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எளிய இளைஞர்கள், இசை கேட்டுக்கொண்டிருந்த மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று உலக நாடுகளின் தலைவர்கள் ஒப்பாரி வைக்கத்தொடங்கிவிட்டனர்.

இவர்கள் திருந்தவே மாட்டார்களா? கருப்பின மக்கள் இஸ்லாமியர்கள் பற்றிய அச்சத்தை வெறுப்பை பிரஞ்சு மக்கள் மனதில் உருவாக்கிவிட்டால் அரசின் அத்தனை வன்முறைகளையும் நியாயப்படுத்திவிடலாம், பிரான்சின் ராணுவம் வளைகுடா அராபிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் படுகொலைகளைச் செய்வது உலக அமைதிக்காக என்று ஊரை நம்பவைக்கலாம். அமெரிக்க பயங்கரவாத அரசும் சொல்லிவிட்டது பயங்கரவாதத்திற்கு எதிரான போரை மறுபடியும் தீவிரப்படுத்த வேண்டும் என்று.

உலக சமாதானத்திற்கான உயரிய விருதை உளவு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அளித்து மகிழ்வதுதான் பன்னாட்டு அரசியல். கொலைகாரர்கள் உலகை ஆள்கிறார்கள், கொலைகாரர்களே விசாரணை செய்கிறார்கள், கொலைகாரர்களே நீதி வழங்குகிறார்கள், கொலைகாரர்களே மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள், அச்சம் கொண்ட மக்கள் ராணுவ ஆட்சி வேண்டும் என்கிறார்கள்! கொலைகாரர்கள் ஆளும் மண் இது குழந்தைகளைத் தெருவில் விளையாட விடாதீர்கள் என் மக்களே” என்கிற எழுத்தாளர் பிரேமின் வார்த்தைகளில் உண்மை இல்லாமல் இல்லை.

 

Advertisements

One thought on “பாரீஸ் தாக்குதல்: யாரை பயமுறுத்த?

  1. பாரீஸ் தாக்குதல்: யாரை பயமுறுத்த?

    அல்லாஹ்வே மிக பெரியவன் என்று படு கொலை நடத்திய இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகளே யாரை பயமுறுத்த என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.