வி.கே.சிங்: ’அடங்க மறு’

“காந்தியும் புத்தரும் வாழ்ந்த இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு பங்கம் வந்துவிடவில்லை” என்று இந்தியாவில் பேசாத மோடி, இங்கிலாந்தில் மவுனம் கலைந்தார். இந்திய மக்கள் மீது அக்கறையும் கரிசனமும் கொண்ட பிரதமர் மதசகிப்பின்மைக்கு சவால் விடும் சம்பவங்களுக்கு கடுமையான எதிர்வினையை ஆற்றியிருப்பார்.

ஆனால், இந்தியாவில் இருக்கும்வரை தானும்(பீகார் தேர்தல் பிரச்சாரங்களில்)மதச்சகிப்பின்மையை ஊக்குவிக்கும் விதமாகப் பேசிவிட்டு, கட்டுரையாளர் பங்கஜ் மிஸ்ரா சொன்னதுபோல இங்கிலாந்தில் ‘வேஷம்’ கட்டியிருக்கிறார் மோடி. அவர் சகிப்புத்தன்மை பற்றி பேசிய அதேநேரத்தில், கர்நாடகத்தில் 200 ஆண்டு கால சரித்திரத்தைக் கிளறி எடுத்து துவேஷத்தை பரப்பிக்கிக் கொண்டிருக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத்.

இப்போது சாதீயத்துக்குப் பலியான தலித் குழந்தைகளை நாய்களுடன் ஒப்பிட்ட முன்னாள் ராணுவ ஜெனரலும் மத்திய அமைச்சருமான வி.கே.சிங், காசு வாங்கிக் கொண்டு, கலைஞர்கள்-எழுத்தாளர்கள் விருதுகளைத் திரும்ப அளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

“சகிப்புத்தன்மை இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் ஒரு விவாதமே அல்ல; காசை வாங்கிக் கொண்டு மிகவும் கற்பனைத் தன்மை வாய்ந்த நபர்கள் இதுபோன்ற வேலைகளைச் செய்கிறார்கள். அதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன. இந்த ஊடகங்கள் எப்படி இயங்குகின்றன என்பதைப் பற்றி நான் சொல்லப்போவதில்லை. டெல்லி தேர்தலின் போது, கிறித்துவ மடங்கள் தாக்கப்பட்டதாக எழுதினார்கள். அதேபோல் தான் பீகார் தேர்தலின் போதும் தேவையில்லாத விஷயங்களை மிகைப் படுத்தி எழுதினார்கள்” என்று பீகார் தேர்தலில் பாஜகவின் படுதோல்விக்கு காரணம் கற்பிக்கிறார் வி.கே.சிங்.

இந்திய அறிவுஜீவிகளின் தன்னிச்சையான போராட்டத்தை ‘காசு வாங்கிக் கொண்டு’ என்று கொச்சைப் படுத்தியிருக்கும் மத்திய அமைச்சர் ‘யாரிடம் காசுவாங்கினார்கள்?’ என்பதை விளக்கவில்லை.

Advertisements